Wednesday 19 May 2010

புதுமாத்தளன் நட்சத்திரங்கள்

சென்ற ஆண்டு மே பதினேழாம் திகதி இரவு புதுமாத்தளனுக்குள் நடந்த நிகழ்வுகளையும், உயிரழிவுகளையும் இதயமுள்ள எவனாலும் எழுதி வைக்க முடியாது.. இருபத்தியோராம் நூற்றாண்டில் மனித குலம் செய்ய நடுங்கும் மாபாதகம் அங்கே நடந்தேறியுள்ளது.

அதற்குள் சிக்குப்பட்டோர் ஒன்று இவ்வுலக வாழ்வை தாமாக முடிக்க வேண்டும், இல்லையேல் அவர்கள் வாழ்வு பலாத்காரமாக முடிக்கப்படும். இரண்டுக்கும் மேல் யாதொரு முடிவும் இல்லாத நிலையை அவர்கள் சந்தித்தார்கள்.

காயப்பட்டவர்களுக்கு மேலாக றோடு நெரிக்கும் இயந்திரங்கள் ஓடிக் கொண்டிருந்தன, பாரிய குழிகளில் குழந்தை குட்டிகளோடு நம் குலக்கொழுந்துகள் புதைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்..

பின் சனல் – 4 தொலைக்காட்சியில் கண்களைக் கட்டியபடி தலைகளில் சுட்டு வீசப்படும் போராளிகளை காட்டினார்கள்..

நடேசன், புலித்தேவன், பானு என்று ஏகப்பட்ட தளபதிகளின் உடலங்கள் தாறுமாறாக வீசப்பட்டுக் கிடந்தன. மண்டை கிழிக்கப்பட்டபடி ஓர் உடலம் காண்பிக்கப்பட்டது. அது பிரபாகரன் என்றும் சொல்லப்பட்டது. அது பிரபாகரனோ அல்லது வேறொருவரின் உடலோ என்ற விவாதம் தொடர்கிறது. ஆனால் இவ்வளவு காட்சிகளையும் மக்கள் பார்த்தார்கள். அவர்கள் இந்த மாபெரும் சோகத்தில் இருந்து விடுபடுவது இலகுவான காரியமல்ல.

உடமைகளின் இழப்பு.. குடும்பத்தின் இழப்பு.. உறவினரின் இழப்பு.. ஊரவரின் இழப்பு.. இனத்தின் இழப்பு.. போராட்டத்தின் இழப்பு.. என்று ஏகப்பட்ட இழப்புக்கள் ஒன்றாக வந்து தாக்கின..

இவைகளைவிட மௌனமாகப் பார்த்த உலகநாடுகளின் அழுகிய மனங்கள் அநீதிகளுக்கு சிகரம் வைத்தன..

ஒரு படி இரண்டு படி என்று தவறி வீழ்ந்து கடைசியில் அத்தனை படிகளிலும் சறுக்கி தரையில் வீழ்ந்தான் ஈழத்தமிழன்..

இவ்வளவு துயரங்களையும் ஒன்றாகப் பார்த்த மனிதனின் உள்ளத்தில் ஏற்படும் உணர்ச்சிகளை எழுதவா முடியும்.. அவனுக்கு எங்கிருந்து ஆறுதல் சொல்ல முடியும்..

ஆனால்..

இந்தியாவிடமோ அல்லது உலகத்திடமோ நாம் நீதி கேட்க வேண்டிய நேரம் இதுவல்ல..

நீதி கேட்டால், நீதிகேட்டு எழும் அற்ப சொற்ப குரல்களையும் மூட்டைப் பூச்சி நசித்தது போல நசித்துவிட்டு அப்பால் நடக்கவே குற்றவாளியான உலகம் முயலும்..

இது நீதிகேட்கும் பருவமல்ல.. அதற்கு ஒரு நாள் வரும்.. அதற்கு முன்னதாக இந்த அவலங்களில் இருந்து நாம் எம்மை மீட்டுக் கொள்ள வேண்டும், அதுதான் புத்திசாலித்தனமானது.

புதுமாத்தளன் மூலம் இறைவன் சிங்கள இனத்திற்கு மட்டும் ஒரு பரீட்சையை வைத்ததாகக் கருதிவிடக்கூடாது..

இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், ஒபெக்நாடுகள் என்று உலகம் முழுவதிற்குமாகவே அப்பாPட்சையை வைத்திருக்கிறான்..

அப்படியொரு பாPட்சையை பேரருள் புதுமாத்தளனில் வைக்கக் காரணமென்ன..?

பல காரணங்கள் உள்ளன.. இதோ சில..

காலநிலை மாற்றத்தாலும் புவி வெப்பமடைவதாலும் வரப்போகும் பேரவலம் முழு உலகத்தையும் சாப்பிடப் போகிறது என்று அஞ்சுகிறார்கள் விஞ்ஞானிகள்..

ஐஸ்லாந்தின் எரிமலை கக்கியதால் ஏற்பட்ட தூசிப்படை ஐரோப்பிய விமான சேவைகளையே ஸ்தம்பிதமடையச் செய்தது..

2012 என்ற திரைப்படத்தில் காட்டியது போன்ற எதிர்பாராத பேரவலம் நிகழும்போது உலகம் செய்வதறியாது திகைக்கும் நாள் வரலாம் என்றும் அஞ்சப்படுகிறது..

அப்போது..

பாப்பரசரின் வத்திக்கானில் இருந்து மணியோசை வானைப் பிளக்கும், மக்காவில் எல்லோரும் கூடியிருந்து பிரார்த்திக்க வேண்டிய நிலை வரும், எல்லா இந்து ஆலயங்களிலும் ஆண்டவனைப் பிரார்த்திக்க வேண்டிய நேரம் வரும்… இறைவனிடம் உலகமே மன்றாட வேண்டிய தருணம் வரும்..

அப்போது இறைவன் கண்களை மூடிக் கொண்டிருக்க அவனுக்கும் ஒரு வலுவான காரணம் வேண்டும்..

புதுமாத்தளனில் மே 17 இரவு வரை நடைபெற்ற படுகொலைகளை தடுக்க முடியாத உங்கள் ஆலயங்களின் வழிபாடுகளும், ஆராதனைகளும், பிரார்த்தனைகளும் எனக்கு வேண்டியதில்லை என்ற பதில் அத்தனை உலக மதங்களுக்கும் கிடைக்கும்.

அப்போது குற்றமற்ற ஒருவன் முன்வருவான்..

உலக மக்களை காப்பாற்றும்படி இறைவனிடம் மன்றாடுவான்..

குற்றமற்ற ஒரேயொரு இனமாக நிற்கும் ஈழத் தமிழனின் குரலே இறைவன் திருச்சபையில் கேட்கும்..

இப்படியொரு கோணத்தில் எண்ணிப்பாருங்கள்..

அதோ வானத்து நட்சத்திரங்களாக மின்னும் நமது வீரர்கள் நமக்கு எத்தனை சிறப்பை தந்துவிட்டுப் போய்விட்டார்கள் என்ற உண்மையை உணர இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது.

நட்சத்திர வீரர்களின் புகழை அறிய இதோ ஒரு கதை..

அன்றொரு நாள்..

புதுமாத்தளன் போல ஒரு பெரும் போர் நடைபெற்றது.. போரில் ஒருவர் மீதமின்றி எல்லோரும் அழிந்துவிட, மனைவியின் பிரசவத்தை பார்ப்பதற்காக வந்த ஒரு வீரன் மட்டும் உயிர் தப்புகிறான்..

கும்மிருட்டு.. பிணங்களிடையே பிரசவ அலறல்…

தாயின் கதறல் மெல்ல மெல்ல அடங்குகிறது.. குழந்தையின் அழுகுரல் மெல்ல மெல்ல உயர்கிறது.. பாவம் மனைவி இறந்துவிட்டாள் அவளுடைய முகத்தைப் பார்க்கவும் அவனுக்கு அருகில் விளக்கில்லை..

குழந்தையைத் தூக்கி முகத்தைப் பார்க்கிறான் தெளிவாகத் தெரியவில்லை..

ஒளிதர வானத்திலும் நிலவில்லை..

ஆனால் போரில் இறந்த ஆத்மாக்கள் நீல வானத்தில் நட்சத்திரங்களாக மின்னுவது தெரிகிறது.. அதிலும் குழந்தையின் முகத்தைப் பார்க்க முடியவில்லை..

ஒரே நொடிதான்..

கோடன கோடி நட்சத்திரக் கூட்டத்தில் அதிகமாக ஒளிரும் நட்சத்திரங்களைப் பார்க்கிறான், அவைகளை கண்களால் இணைத்து கோலம் போடுவது போல ஒரு கற்பனைக் கோட்டைப் போடுகிறான்..

அங்கே ஒரு சிங்கம் தெரிகிறது..

சிங்கராசியில் ஒரு மகன் பிறந்திருக்கிறான் என்று ஓலமிடுகிறான்..

எதிரிகளை ஒழிக்க ஒருவன் பிறந்துவிட்டானென கர்ஜித்தபடி வாளை உருவி குழந்தையின் கையில் வைக்கிறான்..

அன்று..

வெற்றியைத் தரப் போகும் மகன் மட்டும் பிறக்கவில்லை மகனோடு ஜோதிடமும் பிறந்ததுவிட்டதைக் கண்டு சிரித்தான்..

இதுதான் நட்சத்திரங்களுக்குள்ளால் சோதிடம் பிறந்த கதை..

ஒரு வீரன் நட்சத்திரங்களில் இருந்து புது நம்பிக்கை பெற்ற கதை..

அதோ அழகிய நீல வானத்தில் புதுமாத்தளனில் புதைக்கப்பட்ட நம் உறவுகள் நட்சத்திரங்களாக ஒளிர்கிறார்கள்..

அவர்கள் ஒளியால் ஏதோ ஒரு தகவலைச் சொல்கிறார்கள்..

உங்கள் அறிவால் அவைகளை இணைத்துக் கோலம் போடுங்கள்..

அன்று யாருமற்ற ஒருவனுக்கு முன்னால் மாபெரும் ஜோதிடக்கலை பிறந்தது போல உங்கள் உள்ளத்திலும் ஒரு புதுமை பிறக்கும்..

புதுமாத்தளன் நட்சத்திரங்களுக்கு இல்லாத புதுமையா உலகில் இருக்கப்போகிறது…

உங்களை உலக நாடுகளும், உலக மதங்களும், உலகப் பெருந் தாபனங்களும் கைவிட்டாலும் அதோ அந்த மினுக்கிடும் நட்சத்திரங்கள் கைவிடவில்லை என்பதை உணருங்கள்..

கண்களைத் துடைத்துவிட்டு எழுந்திருங்கள்..உறவுகளே..

No comments:

Post a Comment