Wednesday, 19 May 2010

தேசிய தலைவர் விடுதலையின் அடையாளம்


சுட்டேன், சுட்டேன் என்று தமது ஆசை தீரும்வரை சுட்டுத் தள்ளிய ஜெனரல் டயர் இன்று நம்மிடம் இல்லை. ஜாலியன் வாலாபாக்கில் ரத்தம் தோய்ந்த மண்ணை எடுத்து பொட்டலமாய் தம்முடைய பையில் வைத்துக் கொண்ட பகத்சிங் அசைக்க முடியா ஆற்றலாக விடுதலையின் அடையாளமாக இன்றும் நம்மிடம் உலாவிக் கொண்டிருக்கிறார். அடக்குமுறையாளர்களான ஜார் இல்லை. ஹிட்லர் இல்லை. முசோலினி இல்லை. நிஜாம்கள் இல்லை. ஆனால் இவர்களிடம் பெற்ற விடுதலை இன்று உயிரோடு உலாவிக் கொண்டிருக்கிறது. அடக்குமுறை ஒருநாளும் வெற்றிபெறாது, மக்களின் வெற்றியை யாராலும் ஒதுக்க முடியாது, புறக்கணிக்க முடியாது. மக்களின் வெற்றி என்பது வரலாற்றின் உயிர் சொல்லாக வாழ்ந்து கொண்டிருக்கும். அதை முறியடிக்க நினைப்பவர்கள் முடிந்துபோயிருக்கிறார்கள். ஆனால் மக்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை வரலாறு நமக்கு தொடர்ந்து வாசித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது.

தமது வாழ்நாளின் இறுதிவரை புரட்சிக்காரனாகவே வாழ்ந்து, இன்று நம்முடைய மனங்களில் எல்லாம் நிலைகொண்டிருக்கின்ற மாபெரும் பகத்சிங் தமக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து தம்முடைய புரட்சிகர எண்ணங்களை மேலும் மேலும் பரவலாக்கிக் கொண்டானேத் தவிர, எந்தநிலையிலும் முடங்கிப்போய் விடவில்லை. அவன் மரணத்திற்காக நடந்து செல்கையில், அவன் முகத்தில் இழையோடிய புன்னகை இன்றுவரை வரலாற்றுச் சுவடுகளில் மாற்றமுடியாத, மரணத்திற்கு அஞ்சாத மாவீரர்கள்தான் மாந்தகுல மாற்றத்திற்கு தம்மை அர்ப்பணிப்பார்கள் என்கிற உண்மையை வெளிப்படுத்தியது.

23.03.1931 அன்று இரவு 7 மணிக்கு சாவை தழுவிய அந்த மாவீரன், அரசாங்கத்தைப் பார்த்து இப்படிச் சொன்னான், நாங்கள் சாதாரண குற்றவாளிகள் இல்லை. ஒரு நாட்டின் விடுதலைக்காக போர்தொடுத்த போராளிகள். ஆகவே, உங்கள் நீதிமன்றம் வழங்கி இருக்கும் மரண தண்டனையும் முறைப்படி வழங்குங்கள். ஆம்! குற்றவாளிகளைக் கொல்வதைப்போல் தூக்கில் போடாமல், எதிரணி போர்வீரர்களை வீழ்த்துவதைப்போல் ராணுவத்தினரை அழைத்து வந்து, துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துங்கள் என்று அந்த மூவரும் இணைந்தே கையெழுத்திட்டு அரசாங்கத்திற்கு அனுப்பினார்கள். ஆனால் அடக்குமுறை அரசாங்கங்கள் எப்போதுமே போராளிகளின் குரல்களை கேட்பதில்லை என்பதை உறுதியோடு இருக்கிறது. அது இந்தியாவானாலும், அமெரிக்காவானாலும், அரசு என்பது அடக்குமுறை கோட்பாட்டியல் தன்மையிலிருந்து மாறியது கிடையாது.

அந்த மாவீரன் தமது சாவின் வாசலில் நின்றுக் கொண்டு தனது தம்பி குல்வீருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். நாளைக் காலையில் மெழுகுவர்த்தி ஒளி மங்குவதைப் போல நானும் காலை ஒளியில் கரைந்து மறைந்துவிடுவேன். ஆனால் நம்முடைய நம்பிக்கைகள், குறிக்கோள்கள் உலகத்தை பிரகாசிக்கச் செய்யும். அம்மா, அப்பாவுக்கு ஆறுதல் கூறு. இன்றுபோய் நாளை நாங்கள் மீண்டும் பிறப்போம். எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில். இந்த கடிதம் எழுதப்பட்டு சில பத்தாண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும்கூட, இந்த கடித வரிகள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது. அடக்குமுறையாளர்களின் எல்லா நடைமுறைகளும் இப்படித்தான் புரட்சியாளர்களின் சவக்குழிக்குள் முடங்கிப்போய் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பார்வையோடு முள்ளிவாய்க்காலை நாம் நினைக்கையில் அங்கே விதைக்கப்பட்ட புரட்சியில், இன்று ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டிருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். எப்போதும் சாவு ஒரு மனிதனை அச்சுறுத்த முடியாது. அது, யாரையெல்லாம் அச்சுறுத்தும் என்றால், மறு உலக வாழ்வை நினைத்து, இந்த உலகை மறுப்பவர்களுக்கு வேண்டுமாயின் ஒரு சலசலப்பை உண்டாக்கலாம். ஆனால், ஒன்று உறுதியானது. எந்த நிலையிலிருந்தாலும் மனிதனை அவன் மரணத்திலிருந்து சில நாட்கள் அல்லது சில ஆண்டுகள் தள்ளி நிறுத்தலாமே தவிர, மரணமே தழுவாமல் மனிதன் வாழ முடியாது. ஆனால் அப்படிப்பட்ட வாழ்வுக்குத்தான் அடியாக வாழக்கூடிய மனபக்குவத்தை மனிதன் வளர்த்துக் கொள்கின்றான்.

இந்த அடிமைத்தனம் முள்ளிவாய்க்காலுக்குள் போட்டு புதைக்கப்பட்டுவிட்டது. ஒரு நாட்டின்மீது போர் தொடுப்பதைப் போல அதிநவீன கருவிகளும், ஆட்படை திரட்டல்களும் வைத்துக் கொண்டு நடத்தி முடித்த அந்த கடும் சண்டையை எமது மக்கள் தூ… என காரி உமிழ்ந்து தமது உயிரை வழங்கினார்கள். ஆக, அடிப்படையில் தமது உயிரை ஈந்து, விடுதலையைப் பெற வேண்டும் என்கின்ற ஈகப் போராளிகளின் அணிவகுப்பில் முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட எமது உறவுகள் இணைக்கப்பட்டார்கள். வரலாறு மாறும். அப்போது இந்த மறக்குலம் போற்றி புகழப்படும். இவர்களின் எலும்புகளின் மேலும், சதைகளின் மேலும் கட்டப்பட்ட நமது தமிழீழம், உலக நாடுகளின் வரிசையிலே போற்றக்கூடியதாக, புகழத்தக்கதாக இருக்கும் என்பதை யாராலும் மறுத்துரைக்க முடியாது. எந்த நிலையிலும் தம் நாட்டை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் தமது வாழ்வின் கடைசி நிமிடங்கள்வரை சமருக்கு தமது மனங்களை தயார்படுத்திய அந்த மாவீரர்கள், நம்மைவிட்டு நீங்காமல் நீடித்திருப்பார்கள். அவர்களின் உடல்மீது பட்டுத் தெறித்த தோட்டாக்கள், அவர்களின் உடலுக்குள் சமாதியாகியதே தவிர, அவர்களை கொன்றொழிக்க முடியவில்லை. தோட்டாக்கள் அடையாளம் தெரியாமல் போனது. ஆனால் அதை சுமந்த எம் மாவீரர்கள் இன்றுவரை நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஓராண்டு நிறைவடைகிறது. நினைத்துப் பார்த்தோம் என்றால், கடந்தகால போராட்டங்களை விட, இந்த ஓராண்டில் கிடைத்த அனுபவம், இந்த போரை உந்தித் தள்ளும் செயல் திறன், போரை முன்னெடுக்கும் ஆற்றல், நாட்டை கட்டியமைக்கும் ஆவல் கூடியிருக்கிறதே தவிர, குறைந்துவிட வில்லை. ஆகவே, நாம் இறுதிநாளில் இல்லை, தொடக்க நாளில் இருக்கிறோம் என்பதை அறிவிக்கும் செய்தியாகவே அந்த நிகழ்வு நமக்கு மெய்பித்துக் காட்டியிருக்கிறது. புரட்சிக்காரன் என்பவன் பழி தீர்த்துக் கொள்ளும் பயங்கரவாதி அல்ல. அவன் மலரப்போகும் புதிய அரசின் படைப்பாளி. அவனது ஏந்திய துப்பாக்கின் கீழே நாளை நம்பிக்கையுடன் வளர்கிறது மரணத்திலும்கூட எந்த புரட்சிக்காரனும் புதைக்கப்பட மாட்டார்கள் என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த உலகிற்கு அறிவித்த அற்புதமான நிகழ்வாக, முள்ளிவாய்க்கால் சம்பவம் நமக்கு பதிவு செய்கிறது. அங்கே நமது விடுதலைக்காக குரல் கொடுக்க முனைந்த ஊடகவியலர்களை நாம் நன்றியோடு இந்த நேரத்தில் நினைவு கூர்ந்தே தீர வேண்டும்.

ராஜபக்சேவின் அடக்குமுறை உத்தரவுகளுக்கு அடிபணிந்து இன்று ராஜபக்சேவின் சிறையில் வாடும் சரத், அன்று எமது மக்கள் மீது ஏவிய அடக்குமுறைகள் மிக சாதாரணமானதல்ல. அப்படிப்பட்ட அடக்குமுறைகளை வெளிகொணர ஊடகவியலர்கள் செய்த தியாகங்கள் நாம் நன்றியோடு நினைக்கத் தக்க வல்லவை. ரவீந்திரநாத் தாகூர் ஒரு வரலாற்று செய்தியை இவ்வாறு தருகிறார். ஒரு மன்னன் இருபது மில்லியன் பவுன் செலவில் ஓர் அழகிய ஆலயத்தை கட்டி முடித்தான். ஆனால் நரோட்டான் என்ற புனித துரவி அந்த ஆலயத்தினுள் நுழையாமல், அவரது அறபோதனைகளை கேட்க வந்த மக்களும் கோயிலுக்குள் அடிஎடுத்து வைக்கவில்லை. இதை கேள்வியுள்ள அரசன், நரோட்டானை கோபித்தார். ஆலயம் கட்டியதால், வசிக்க வீடுகள் இன்றி எண்ணற்ற மக்கள் தவிப்பதற்கு நீயே காரணமாகிவிட்டாய் என்று நரோட்டான் என்கின்ற அந்த துரவி பதிலளித்தார். அரசன் கோபம் கொண்டு, அந்நகரைவிட்டு வெளியேறும்படி அத்துறவிக்கு உத்தரவிட்டார். அத்துறவி சொன்னார், நீர் கடவுளை இவ்வூரைவிட்டு எப்போதோ விரட்டிவிட்டீர். அதன்பின் நானும் செல்வது முறையே என்று கூறி அந்த ஊரைவிட்டு புறப்பட்டு வந்தார்.

அக்கிரமமும், அநியாயமும் நிறைந்த எமது மக்கள் மீது திணிக்கப்பட்ட கடும் போரிலே, அவர்கள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துரைக்க முனைந்த ஊடகவியலர்கள் நரோட்டானைப் போல்தான் நாடுகடத்தப்பட்டார்கள். அநீதி நிறைந்த அக்கிரமக்காரன் ராஜபக்சேவின் நாட்டில் இருப்பதைவிட, வெளியேறுவதே சரி என்று வெளியேறி வந்த ஊடகவியலர்கள்தான் அதிகம். ஆக, எந்த நிலையிலும் ஜனநாயக பண்பற்ற, மாந்தநேயம் அற்ற போர் வெறியனாக காட்சி தந்த ராஜபக்சேவின் அந்த அடக்குமுறை வரலாற்றால் ஒரு காலத்தில் முறியடிக்கப்படும். அப்போது ஹிட்லரைப்போன்று மரணத்திற்கு அஞ்சி, ராஜபக்சே ஓடி ஒளிந்து கொள்ளலாம். ஆனால், போராளிகள் நெஞ்சு நிமிர்த்தி அந்த வீதிகளில் வெற்றி பாடல் பாடிக் கொண்டு வருவார்கள். மக்கள் அவர்களோடு இணைந்து தம்மை மீட்டெடுத்த அந்த மாவீர்களின் கரங்களைப் பற்றி மகிழ்ந்து நடனமாடுவார்கள். அப்படிப்பட்ட காலம் நமது அருகில் இருக்கிறது. நாம் ஆற்ற வேண்டியதெல்லாம் ஒன்றுதான். எந்த நிலையிலும் நம் மனங்களில் இருக்கும் நம்பிக்கையை இழக்க வேண்டாம்.

உறுதியோடு எந்தவித சமரசமும் இல்லாத ஒரே லட்சியத்தை நமக்குள் உருவாக்கிக் கொண்டு, அந்த லட்சியத்தின் அடிப்படை வாழ்வியல் கட்டமைப்புகளை நமது வளமான எதிர்காலத்திற்கு நகர்த்தி செல்லுதலே நமது விடுதலை கோட்பாட்டின் உண்மையான உள்ளார்ந்த செயலாகும். ஆகவே, முள்ளிவாய்க்கால் அல்ல, ஆயிரம் போர்கள் ஆயிரம் ஆயிரம் கருவிகள் எம்மீது திணிக்கப்பட்டாலும் எமக்கான விடுதலை தீர்மானிக்கப்படும்வரை நாம் ஓய்வதில்லை என்ற நிலைப்பாட்டை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். இதுவே ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். காரணம், நாம் உரிமையை மீட்டெடுக்கும் களப்பணியில் இருக்கிறோம். இந்த களப்பணியில் நம்மை முழுதுமாய் அர்ப்பணிப்பதின் மூலம் மட்டுமே வெற்றியை மீட்டெடுக்க முடியும். வெற்றி என்பது வீணாக கொட்டிக் கிடக்கும் பொருள் அல்ல. அதை போராடியே பெற வேண்டும். அந்த போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்று நமக்கு நமது தேசிய தலைவர் கற்றுத் தந்து வழிநடத்த காத்திருக்கிறார்.

அந்த மாவீரனின் மகத்தான எண்ணங்கள், லட்சியங்கள், அவர் தமக்கு தம்மை உயர்த்திக் கொள்ளாமல், தமது மக்களின் வாழ்வை உயர்த்துவதற்காக தம்மையே முழுமையாக அர்ப்பணித்த நிலைகளை நாம் புரிந்து கொண்டு, அதன்மூலம் நம்மை உருவாக்க வேண்டும். அந்த உருவாக்குதலில் நமது லட்சியம் வெற்றி பெறும் என்பதிலே வரலாறு நமக்கு வாசித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. எண்பதுகளின் இறுதிகளில் மக்கள் திரள் போராட்டம் மாபெரும் உத்வேகத்தை எட்டியது. இது, இந்த புவிப்பந்தின் தன்மையை உலுக்கி எடுத்தது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டிருந்த இந்த மகத்தான புவி நடுக்கம் போலாந்தின் சாருஜெல்ஸ், அங்கேரியின் குரோஸ், பல்கேரியாவின் ஜூவ்கோ, ஜெர்மனியின் எரிக்ஒனேக்கர், செகோஸ்லோவாக்கியாவின் ஹூசாக், ரூமானியாவின் செசஸ்கூவையும் ஆட்சி கட்டிலிலிருந்து குப்புற தள்ளி மக்கள் திரளின் உத்வேகத்தை வெளிப்படுத்தியது. ஆகவே மக்கள் என்றும் தோற்பதில்லை என்பதை இந்த நிகழ்வுகள் நமக்கு வெளிக்காட்டி இருக்கின்றன. இனி பிறக்க இருக்கும் தேசிய தலைவரின் தலைமையிலான ஆட்சியை நாம் உளமாற நேசிக்க இப்பொழுதே உறுதி எடுக்க வேண்டும்.

இந்த உறுதியே நம்மை சரியான பாதைக்கு அழைத்துச் செல்லும். தேசிய தலைவரின் கட்டளையைத் தவிர, வேறெதுவும் வராத வண்ணம் நமது செவிகளை சரியாக்குவோம். வெற்றி பெறுவோம். முள்ளி வாய்க்கால் வீரர்களுக்கு நன்றி கூறுவோம். அவர்களின் ரத்தமும் சதையும், சகதியாய் இருந்த மண்ணிலிருந்து நாம் மறுபிறப்பு எடுத்திருக்கிறோம். இதை மாற்ற எந்த ஆற்றலுக்கும் நாதி இல்லை என்பதை நாம் நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது. நாம் நமது நாட்டை அடைவதை நோக்கி பயணிப்போம். வாழ்க தமிழீழத் தாயகம்.

- கண்மணி

1 comment:

  1. Pirabaharan is the god of Tamils. he is the symbol of dignity of Tamil.

    kajendren

    ReplyDelete