ஒரு புறத்தில் காலநிலை
மறு புறத்தில் கிட்லர் நெறி
இத்துப் போன உலகத்திலே
செத்துப் போகுதய்யோ!
எம்மினம் எம்மினம் எம்மினம்
புத்தபெருமான் புண்ணியவான்களே!
உத்தமன் நெறிச் சீராளர்களே!
புனித உடைக்குள்ளே பேயாவி வாழுவதோ
புன்செயலால் ஈழத்தில் புத்தனெறி ஊன்றிடுமோ
புண்ணியன் சித்தார்த்தன் சொல்காக்கு மெப்போதும்
நன்மணி மேகலையே காண்
அறிவன் நெறி காப்பது
சிங்களரின் மகாவம்ச மன்று
எங்களரின் மணிமேகலையே!
வெள்ளாடை வேதாளங்களே!
கொள்ளிவாய்ப் பாதாளங்களே!
முள்ளிக் கரைவாய்க் காலில் முடிந்ததோ!
தெள்ளு தமிழரின் தாயகக் கனவு
எள்ளி நகைக்கும் இனவா திகளே
தள்ளி வையும் செருக்கை புறத்தே
எங்கள் இனத்தை அழித்த உங்களை
சங்காரம் செய்யும் காலம் ஒருநாள்
பொங்கி வழியும் கண்ணீர் பெருகி
வங்கம் போல்வந் தழிக்கும் பாரும்
புலத்தில் வாழ்கை முடியும் வரைநாம்
உலக நீதிக்காய் ஓங்கி ஒலிப்போம்
உணவு கொடுத்து ஊக்கம் கொடுத்து
திண்ணையும் மனையும் கொடுத்த ஈழத்து
மக்களை இறைமை பேசிய எம்மினத்தை
திக்குத் திசையின் றியலை யநீரோ
கோலொச் சியும்குடி மட்டுமோ நன்றாய்
குலங்காத் துவாழு வதுநல் நீதி
துமுக்கி மட்டுமே கீழே வைத்தோம்
அமைதி வேண்டியே அடக்கமாய் உள்ளோம்
நெஞ்சில் கொண்ட தாயகப் பற்று
கொஞ்சம் கூட விலக வில்லை
தாக்கும் படையோ ஆயிரம் வரட்டும்
காக்கும் படைமுன் நிற்கா மலோடும்
அன்னை மண்ணை மீட்கும் வரைநாம்
அண்ணன் வழியே அவர்சொல் மொழியே
நடந்து செல்வோம் நடந்து செல்வோம்
கிடைக்கும் நாடு கிடைக்கு முறுதி
அன்புத் தோழா அருமை நண்பா
கண்ணைத் திருத்து காட்சிப் படுத்து
அன்னை அழுகிறாள் ஆறாத் துயரில்
நின்னைச் செயலும் செயல்வீ ரமாகட்டும்
கொடியை அறுக்கும் நிலையில் குழந்தைகள்
துடித்து இறந்ததை எப்படி மறப்போம்
கையை காலை கண்ணை வாழ்இயற்
கையை இழந்து கிடப்பதை மறப்போமோ?
நிலத்தைப் பறித்து குலத்தை அறுக்கும்
காலக் கொடியவர் அரசினர் குடும்பம்
நிகழ்த்திய கொடுமையை நித்தம் நினைத்தால்
முகத்தில் அழுகை ஆறாகிப் பெருகும்
இந்தியம் சீனம், ஈரானியம் பாக்கிஸ்தானும்
குந்தகம் செய்த வரோடு ருசியாவும்
அல்வழி நின்று அறத்தைக் கொல்லக்
கொலைகளை மறைத்தன இருபது நாடுகள்
இனத்தைக் காக்க எழுந்த மறவரை
வன்சொலால் ஐரோப் பியஒன்றியமும்
ஐநாஅ வோடமரிக்கா நாடும்
வைதனவே பயங்கரவாதிகளாய்
மறத்தின் வழியே மரபைக் காத்தவர்
அறத்தின் வழியே ஆய்தம் வைத்தாரே
என்ன முடிபு இதுவரை காலமும்
இனவாதி தீக்கே யினம்தீ னியானதே
எங்கே யுலகம் எதிலே மன்பதை
வங்கச் சூளையில் எங்கள் தேயம்
இருபதி னாயிரத் துமுந்நூற் றெண்பது
அருந்தமிழ் மக்காள் சதுரக் கல்நிலம்
சத்தியங் காக்கும் கனவான் களே
கத்துகிறோம் உம் செவிசாய்த்துக் கேட்பீரோ
எங்கள் நிலமே எமக்கு வேண்டும்
பொங்கும் கடலின் இருபங்கோடு
தாயகம் தேசியம் தன்னாட்சியிறைமை
தாய்மை யோடு தமிழே வாழ
அரத்த மின்றி அவனியில்
பிரிந்தே போவது நல்தீர் விதுவே!
- தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
No comments:
Post a Comment