Saturday, 15 May 2010

கண்ணன் மரணித்த கடைசி நாள்..


மரணம் விதிகளை உடைக்கும் என்று முன்னொரு தடவை பார்த்திருக்கிறோம், அதேபோல விதிளை உடைத்தவர்களை மறுபடியும் விதியே உடைத்து எப்படி மரணத்தில் தள்ளும் என்பதை இப்போது பார்க்கப் போகிறோம்..

இரண்டும் இரண்டும் நாலு நாயோட முதுகில வாலு என்பது போல ஓர் எளிமையான கணக்கில் இந்த வாழ்க்கை உருவாக்கப்படவில்லை. அது மிகவும் சிக்கலான கணக்காகவே எழுதப்பட்டிருக்கிறது.

இன்பமாக இருக்கிறோம் என்று நினைக்கும் போது மறந்துவிடாதே மரணம் உனக்கு இருக்கிறது என்ற துன்பமான அலை மனதில் ஓடிப்போகும். அதேபோல துன்பத்தில் துவளும் வேளையில் ஏதோ ஓர் இன்பமான அலை வளைந்து வளைந்து ஓடிப்போய் ஆறுதல் தரும். இப்படி இதுவும் அதுவுமாக மாயமான் போல ஜாலம் காட்டுவதே வாழ்க்கை..

விதியை உடைத்தால் கிடைக்கும் தண்டனையில் இருந்து கடவுளும் தப்ப முடியாது என்பதற்கு ஒரு கதை இருக்கிறது, அதுவே கண்ணன் மரணித்த கடைசி நாளாகும்.

வீரமன்று விதியன்று என்று இராமாயணத்தில் வாலி கூறிய இடத்தை நாம் முன்னரே பார்த்திருக்கிறோம். இராமன் மறைந்திருந்து வாலி மீது பாணம் எய்தபோது அவன் அப்படிக் கூறியிருந்தான்.

அன்று விதி உடைந்துவிட்டது என்று கூறிய வாலியே கண்ணன் இறக்கும் நேரம் விதியின் வடிவமாக வருகிறான். வாலியின் முன்னால் நின்று போரிட்டால் பாதிப்பலம் வாலிக்கே போய்விடும் ஆகவேதான் இராமபிரான் மறைந்திருந்து பாணம் விட்டார் என்று சப்பைக்கட்டு கட்டியவர்களின் கதைகளை எல்லாம் உடைத்துச் சரிக்கிறது விதி.

இராமாயணத்தில் வரும் இராம அவதாரத்தில் செய்த குற்றத்திற்காக பாரதத்தில் வரும் கண்ணன் தண்டனையைப் பெறுகிறான்.

பாரதப்போர் முடிந்து ஒரு நாள் காட்டில் உள்ள மரம் ஒன்றில் கால்களை ஆட்டியபடியே கண்ணன் நிஷ்டையில் மூழ்கியிருக்கிறான். அவனுடைய சிவந்த தாமரை மலரை ஒத்த பாதம் ஆடுவதை இலைகளுக்கூடாக ஒரு வேடன் பார்க்கிறான்.

அந்த அடர்ந்த காட்டில், இலைகளுக்கிடையில் அப்படியொரு சலசலப்பைக் கண்டதும் வேடன் அதை பறவை என்று தப்பாக நினைக்கிறான். அவ்வளவுதான் பறவை பறக்க முன்னரே சரேலென்று அம்பை எய்கிறான்.

சீறி வந்த அம்பு கண்ணனின் பாதத்தை ஊடறுத்துப் பாய்கிறது. தனது குறி தப்பவில்லை, பறவை விழுந்துவிட்டது என்றபடி ஓடி வருகிறான் வேடன்.

ஆச்சரியம்..

அது பறவையல்ல அழகே உருவான மனித வடிவிலான ஒரு தெய்வப்பிறவி..

, ஐயையோ .. சாமி தவறிழைத்துவிட்டேன் இதோ அந்த அம்மை இழுக்கிறேன் , என்று கதறுகிறான்..

கண்ணன் அவன் முகத்தையே கூர்ந்து பார்க்கிறான்.. அங்கே இராம அவதாரம் எடுத்தபோது கொன்ற வாலியின் முகம் நிழல்போலத் தெரிகிறது.. சிரிக்கிறான், எத்தனைபேர் எத்தனையோ காரணங்களை கற்பித்து அன்று இராமன் செய்தது சரி என்று வாதிட்டாலும், விதி அவைகளை எல்லாம் நிராகரித்துவிட்டு தன் கருமத்தை செய்துவிட்டதைக் காண்கிறான்.

, வேண்டாம்.. அம்மை இழுக்காதே.. அன்று உனக்கு நான் எய்த பாணம் இன்றுதான் திரும்பியிருக்கிறது , என்றபடி மரணிக்கிறான்.. நீல வடிவான அந்த அழகனையே கூர்ந்து பார்க்கிறான் வாலி… அவன் கண்களுக்குள்ளால் அன்று மறைந்திருந்து அம்புவிட்ட இராமனின் முகம் ஸ்படிகமாகத் தெரிகிறது..

இந்தக்காட்சியை ஒரு நீதியான, அதேவேளை காரணம் கூற முடியாத வாழ்க்கை விதி என்று பெரியவர்கள் கூறுவார்கள்..

இதை நீங்களும் புரிய வேண்டுமானால் இதோ சிறிய பரிசோதனை செய்து பாருங்கள்…

உங்களுக்கு யாராவது துன்பமோ அல்லது இன்பமோ நேரடியாக செய்தால்.. அதுபோன்ற துன்பச் செயலை முன்னர் யாருக்காவது நீங்களும் செய்திருந்தால்.. அன்று உங்களால் பாதிக்கப்பட்டவரின் முகத்தையும் இன்று உங்களுக்கு அநீதி செய்தவர் முகத்தையும் ஒப்பிட்டு நோக்குங்கள்.. இவருடைய முகத்திற்குள்ளால் உங்களுக்கு அவருடைய முகம் தெரியும்… நடப்பது ஏன்.. நடாத்துவது யார்..? என்ற உண்மையை உங்கள் உள்ளம் பளிங்குபோல காட்டும்..

இந்த உண்மையை விளங்குவதற்கு கண்ணனும், வேடனும் ஒருவர் முகத்தில் மற்றவர் விதியைக் கண்டனர் என்ற கதையே சாட்சியமாகும்..

இப்படி எழுதும்போது.. அடடா நாம் மார்க்சியம், லெனினிசம், பெரியாரிசம் எல்லாவற்றையும் மகிழ்வுடன் பேசுகிறோமே அப்படிப்பட்ட நாமே இப்படி விதி பற்றி எழுதலாமா என்ற கேள்வி ஓர் அலையாக ஓடிப்போவதையும் உணரலாம்..

பெரியரிசத்தின் நடுவே இறையியலும் அதுபோல இறையிசத்தின் நடுவே பெரியாரிசமும் இழைபோல ஓடுவதை உணர்ந்து வாழ்வைப் புரிந்தவர் இறப்புகளுக்காக அழமாட்டார்கள் என்பது இந்த நாடகத்தின் ஓர் உச்சக்கட்டமாகும்..

இதற்கு இன்னோர் உதாரணம்..

ஒரு தடவை நான் வன்னி சென்று புலிகளின் வெளிநாட்டு பொறுப்பாளர் காஸ்ரோவை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன்..

அப்போது வல்வை முத்துமாரி அம்மனை எமது திரைப்படத்தின் ஆரம்பப் படமாகப் போட்டிருக்கும் செய்தியைப் பேசினேன்..

அப்போது அவர் அவைகளை விடுங்கள்.. தலைவர் இப்போது பெரியாரின் நூல்களையும் சிந்தனைகளையும்தான் படித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்..

பழநி முருகனிடம் நேர்த்திக்கடன் வைத்து மொட்டை போட்டு, தனது பணிகளை ஆரம்பித்த பிரபாகரன் இப்போது பெரியார் நூல்களை படிக்கிறாரா என்று நான் குழம்பிவிடவில்லை..

ஈழத்தை அமைப்பதற்காக சமயபுரத்தில் இருந்து படகேறி வந்திருக்கும் வல்வை முத்துமாரி அம்மன், காலைச் சூரியன் வரும்போது தனது கோபுர கலசத்தின் நீண்ட நிழல் எட்டித்தொடும் ஒரு வீட்டில் இருந்து பிரபாகரன் என்ற வீரனை உருவாக்கினார் என்ற உண்மையை அவர் மறந்துவிட்டாரா என்றும் கோபப்படவில்லை..

இறையியலில் ஆழமாகப் போவோர் ஒரு கட்டத்தில் பெரியாரிசத்திலும் அதுபோல பெரியாரிசத்தில் ஆழமாகப் போவோர் ஒரு கட்டத்தில் இறையியலையும் நேசிப்பார்.. அரைகுறையான அறிவுடையோர் மட்டுமே இவே சிறந்தது இல்லை அதுவே சிறந்தது என்று மோதிக் கொள்வார்கள்.. எல்லாம் சிறந்ததே என்பதுதான் மோதலற்ற முதிர்ச்சி நிலையாகும்.. அத்தகைய உன்னத நிலையை பிரபாகரன் அடைந்துள்ளார் என்பதற்கு அவர் கையில் இருந்த பெரியார் நூலே சாட்சியமாகும்.

இனி…

இவ்வளவு சம்பவங்களுக்கும் புதுமாத்தளனுக்கும் என்னதான் தொடர்பென்று சிலர் கேட்கலாம்..

பதில்..

துன்பங்களும் இன்பங்களும் மாறி மாறி வருவதில்லை, ஒன்றுக்குள் ஒன்று கலந்து ஓடுவதுதான் பிரபஞ்ச விதி..

புதுமாத்தளனுக்குப் பின் தமிழினம் கொடுப்பதற்கு எதுவும் இல்லாத வெற்றிடம் ஏற்பட்டுள்ளது…

எதிர்பாராத ஓர் இடத்தில் எதிர்பாராத ஒரு நேரத்தில் புதுமாத்தளன் கொடுமைகளை நிகழ்த்தியோர்.. கடைசி நேரத்தில் கண்ணன் வேடனைச் சந்தித்தது போன்ற ஆபத்தை சந்திக்க நேரிடும்..

அப்போது அவர்களின் முன்னால் சில முகங்கள் தெரியும்…

வாலியை கண்ணன் பார்த்ததும், இராமனை வேடன் பார்த்ததும் போன்ற காட்சியை அவர்கள் எதிர் பார்க்காத நேரத்தில் விதி ஸ்படிகமாகக் காட்டும்..

விதியை உடைத்தவர்களை விதி உடைக்கும்..

எல்லோரையும் சிறைக்குள் தள்ளிய சரத் பொன்சேகாவை பிடரியில் அடித்து சிறையில் அடைத்த விதியை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்..

அதுபோல..

வேடனின் முகத்தில் வாலியைக் கண்ட கண்ணனின் மரணத்தை அறியுங்கள்.. கண்ணீரைத் துடையுங்கள்..

No comments:

Post a Comment