Saturday 15 May 2010

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் போனாலும் ஆறாத அதிர்வலை…


இத்தொடரில் இன்று பதின்மூன்றாவது அத்தியாயம் என்பதால் பாரதப்போரில் அபிமன்யு மடிந்த போர் நடைபெற்ற பதின்மூன்றாவது நாளில் இருந்து சிந்திக்க ஆரம்பிப்போம்..

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தில் மகாபாரதக் கதையை பிரபல சொற்பொழிவாளர் நல்லை ஆதீனம் மணிஐயர் நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

ஒலிபெருக்கிகள் பூட்டி ஜனத்திரள் நிறைந்த கிழக்கு வீதியில் பதினெட்டு நாட்கள் தொடர்ச்சியாக அவருடைய பிரசங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது..

தினசரி அங்குபோய் அவர் என்ன கூறுகிறார்.. எப்படிக் கூறுகிறார் என்பதைக் காதுகொடுத்து கேட்பேன்..

அப்போது அவருடைய பிரசங்கத்தின் பதின்மூன்றாவது நாள் வந்தது, அன்று அபிமன்யு வதம்..

கைகள், வெட்டப்பட்டு, கால்கள் தறிக்கப்பட்டு அவன் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறான்..

கதை கேட்ட நம் உள்ளம் உடனடியாக போர்க்களம் போகவேண்டும், அந்த வீரனைக் காப்பாற்ற வேண்டும்.. என்று துடிக்கிறது… ஆண்டவனே அபிமன்யுவைக் காப்பாற்று என்ற மன ஓலங்கள் வேண்டுதலாகி வான்வெளியில் அதிர்கிறது..

அவ்வளவுதான் மின்சாரம் நின்றுவிட்டது..

கும்மிருட்டு..

மின்சாரம்தானே.. அங்கு அடிக்கடி மின்வெட்டு வருவதுதானே.. என்று எண்ணிவிடாதீர்கள்.. கணபதி மின் அமைப்பாளர்களின் இயந்திரம் மின்சாரத்தை வழங்கிக் கொண்டிருந்தது, மின்தடை பிரசங்கத்தைக் குழப்பிவிடக் கூடாது என்பதற்காக அப்படிச் செய்திருந்தார்கள்..

அரைமணி நேரமாக சல்லடை போட்டு காரணங்களைத் தேடினார்கள்… யாதொரு தவறும் நடைபெறவில்லை..

சரி இன்று பிரசங்கம் நடைபெறாது என்று எல்லோரும் சிந்திக்க ஆரம்பிக்கிறோம்.. நாளைக்கு தொடரலாம் என்று கோயில் நிர்வாகிகள் கூறுவது கேட்கிறது..

அப்போது அனைவரும் அபிமன்யுவை மறந்து கவனத்தைத் திசை திருப்புகிறார்கள்..

மெல்லிய வெற்றிடம்…

தடைப்பட்ட மின்சாரம் சட்டென வருகிறது..

அப்போது மணிஐயர் என்ற மாபெரும் பிரசங்க மேதை சொன்னார்.. இது இன்று மட்டும் நடைபெறும் நிகழ்ச்சியல்ல.. பாரதக்கதை நடைபெறும்போது அபிமன்யு வதம் வரும்.. அப்போது இப்படி இனம்புரியாமல் மின்சாரம் தடைபடுவது, அல்லது ஏதோ ஒரு தடங்கல் வருவது வழமை.

இதற்குக் காரணம் என்ன..

உங்களுடைய மனம்தான் காரணம்..

உங்களில் யாருக்குமே அபிமன்யு மீது தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. அந்த வீரன் கொல்லப்பட்ட முறை தவறு என்பதில் உங்களுடைய மனம் உறுதியாக இருக்கிறது..

அந்த மனமொத்த கூட்டு வேண்டுதல் இறைவனான பேரருளின் காதுகளில் எதிர்ப்பின்றி ஒலிக்கிறது..

இயற்கை உங்கள் வேண்டுதலை ஏற்றுக் கொள்கிறது..

ஒன்றிணைந்த உள்ளங்கள் ஏற்படுத்தும் அதிர்வலைக்கு அந்த மாபெரும் இயற்கை தரும் உடன் பதில்தான் இந்த மின்தடை..

இது வெறும் மின்தடையல்ல.. இதுபோன்ற வஞ்சப்போரை யார் நடாத்தினாலும் முடிவில் தோல்வி வரும் என்பதை இயற்கை இப்படிச் சொல்கிறது..

எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், வஞ்சப் போரை மட்டும் செய்யாதீர்கள்.. செய்தால் என்றோ இயற்கையின் தீர்ப்பை அனுபவிக்க நேரிடும்.. இது மாற்றமில்லாத பெருவிதி..

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் போனாலும் மாறாத அதிர்வலைதான் இந்த அபிமன்யு என்று கூறிவிட்டு தனது பிரசங்கத்தைத் தொடர்ந்தார்..

அபிமன்யு மரணத்திற்கும் புதுமாத்தளனுக்கும் போரியல் ரீதியாக பெரிய ஒற்றுமை இருக்கிறது..

சர்ப்ப வியூகம் அமைக்கப்பட்டு, பாம்பு வால்போல படைகளால் வளையம் போடப்பட்டு, பாம்பு தன் வாய்க்குள்ளேயே தன் வாலை நுழைத்தது போல படைகளால் சுற்றி ஜெயத்திரதன் தலைமையிலான அணி அபிமன்யுவைத் தாக்கினார்கள்..

அவர்கள் போட்டிருக்கும் வியூகத்தை உடைக்க வல்லவன் அபிமன்யுவின் தந்தையான அர்ச்சுணன் ஒருவன் மட்டுமே..

உன் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் உன்னிடமிருக்கும் போர்ச்சங்கை ஊது.. ஒலி கேட்டதும் நான் அந்த இடத்திற்கு வந்துவிடுவேன் என்று கூறி ஒரு விசேட ஒலி கொண்ட சங்கை அர்ச்சுனன் அவனிடம் வழங்கியிருந்தான்..

எந்த வியூகமானாலும் உடைக்க தந்தை வருவார் என்ற நம்பிக்கையில் வியூகத்தைப் பற்றிய கவலை இல்லாமலே போர் புரிகிறான் அபிமன்யு..

எனினும் ஒரு கட்டத்தில்..

முற்றுமுழுதாகச் சுற்றி வளைக்கப்பட்ட நயவஞ்சக வியூகத்தில் மாட்டிக் கொண்டுவிட்டதை உணர்கிறான் உடனே தன்னிடமிருந்த சங்கை எடுத்து ஊதுகிறான்..

ஆனால் அதன் ஒலி அர்ச்சுனனுக்கு கேட்கவில்லை..

காரணம்..

யாருமே இல்லாத கடற்கரையோரமாக அர்ச்சுனனை அழைத்துச் சென்றுவிடுகிறான் கண்ணன்..

அபிமன்யு தாயின் வயிற்றில் இருக்கும்போதே அவனுடைய மரணம் 13 ம் நாள் என்று தீர்ப்பளித்துவிட்டான் கண்ணன்.. அந்தநாள் வந்திருக்கிறது..அதைத் தடுக்க கண்ணன் விரும்பவில்லை, அதற்குக் காரணமும் இருந்தது.

தந்தை வரவைக் காத்திருந்து ஏமாற்றமடைந்து..களத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் அபிமன்யு நயவஞ்சகமாகக் கொல்லப்படுகிறான்..

புதுமாத்தளனும் இதுபோலத்தான் சர்ப்ப வியூகமாகச் சுற்றி வளைக்கப்பட்டது.. அபிமன்யு போலத்தான் அதற்குள் சிக்குண்ட நம் வீரர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள்..

அவர்களின் குரல் வியூகத்தை உடைக்கக்கூடியவர்கள் காதுகளில் விழவில்லை.. புதுமாத்தளன் சங்கொலிகளும் தூரத்து ஓசைகளாக்கப்பட்டிருந்தன..

புலம் பெயர் தமிழர்கள் வீதியில் இறங்கி போராடினார்கள்.. தீயில் எரிந்து தற்கொலை செய்தார்கள் ஆனால் கேட்க வேண்டிய உலகம் கேட்கவே இல்லை..

அன்று…

அபிமன்யுவின் சங்கொலி கேட்காதது ஏன் என்று சிந்தித்துப் பார்த்தால், ஓர் உண்மை புலப்படும். போரில் உலகம் கேட்காத பொழுதென்றும் ஒரு பொழுது வரும்.. இது அபிமன்யு மரணத்தில் இருந்த முக்கிய செய்தி.. அப்படி உலகம் கேட்காத பொழுதுதான் புதுமாத்தளனிலும் வந்தது..

போர், வியூகம், நயவஞ்சகம், மரணம் யாவுமே அபிமன்யு கதைபோலவே அங்கும் அரங்கேறின..

ஏன் இப்படியொரு வஞ்சப் போரை பரமாத்வாகிய கண்ணன் அனுமதித்தான்.. இதுதான் இக்கதையின் முக்கிய கேள்வி..?

பதினெட்டு நாட்கள் நடைபெற்ற போரில் திருப்புமுனையானதும், பாண்டவருக்கே வெற்றி என்ற இடத்திற்குள் அடுத்த ஆறு தினங்களை வெற்றிகரமாக நகர்த்தியதும் இந்த நிகழ்வுதான்.

எதிரி மிகப்பெரிய நயவஞ்சகத்தை செய்தான் என்ற உறுதியான தகவல் கிடைக்கும்வரை இயற்கை வெற்றியை யாருடைய கையிலும் இலகுவில் கொடுத்துவிடாது..

நடந்தது, நடக்கப் போவதற்கு அப்பால் களத்தில் நீதி எந்தப்பக்கம் அதுபோல அதர்மம் எந்தப் பக்கம் என்பதை இயற்கை தீர்மானிக்க ஓர் இடம் அவசியம். அதை போருக்குள் நடைபெறும் நயவஞ்சகத்தால் இயற்கை தீர்மானம் பண்ணும்.. காற்றாய், கடலாய், ஒலியாய் பரந்திருந்து யாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கும் பரம்பொருள் இறுதித் தீர்ப்பை வழங்க 13ம் நாள் போரும், அபிமன்யு வதமும் அவசியம் என்பதை பரமாத்மாவாகிய கண்ணன் அறிந்தான் அதனால் அவ்விதம் செய்தான்.

யாருமே உதவி செய்யவில்லை என்பதை அறிந்த இயற்கை இரங்கி தானாக இறங்கிவந்து பாண்டவருக்கு வெற்றியைக் கொடுத்தது.

இதுபோலத்தான் 18ம் நாள் போரில் கர்ணன் வீழ்ந்துகிடக்க தர்மதேவதை ஆயுதம் எடுத்துப் போர் புரிந்தது…

அதுபோல காற்றாய், கடலாய், ஒலியாய், ஒளியாய், நெருப்பாய் இருந்து பரம்பொருள் புதுமாத்தளனைப் பார்த்தது, அங்கு புலிகள் யாருமே இல்லாது நிற்கிறார்கள் என்பதை இயற்கை கண்டது.. இயற்கை என்னும் தாய் இரங்கி தன் தீர்ப்பை எழுதியிருப்பாள்.. இதில் யாருக்குமே சந்தேகம் வேண்டாம்..

புதுமாத்தளன் போரை ஐ.நா பதிவு செய்ய முன் இயற்கை என்னும் பேராசான் பதிவு செய்துவிட்டது.. எல்லோரும் குரோதங்களை மறந்து ஒரு நொடி பரம்பொருளை வணங்குங்கள்..

போரின் தடயங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.. என்று கவலைப்பட வேண்டாம்.. தர்மத்தின் தடயங்களை யாருமே அழிக்க முடியாது..

இயற்கையை குருடனாக எண்ண வேண்டாம்..

இயற்கை என்னும் தாய் தரும் புதிய நீதி தமிழருக்குக் கிடைக்கும்…

No comments:

Post a Comment