Welcome to this blogg. More than 80 million tamil people live in many countries across distant seas. There is no state without a Tamil - but there is no state for the tamils. Velkommen til denne bloggen. Her vil jeg oppdatere nyheter om tamiler og deres kamp for et selvstyre både på Sri Lanka og utenfor øya. என்னுடைய இந்த இணைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி: தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கென்று ஓர் நாடில்லை
Saturday, 15 May 2010
வாழ்க தமிழீழ தாயகம்
உலகெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உரிமை காக்கும் சமர் தொடர்ந்து ஆதிக்கவாதிகளால் முறியடிக்கப்படுவதும், சிறிது காலம் அவை அமைதி காப்பதும் மீண்டும் அடக்கமுடியாத பேரிரிரைச்சலோடு தமது விடுதலையை நோக்கி பயணிப்பதுமான நிகழ்வுகள் சக்கரம் போல் சுழன்று கொண்டிருக்கிறது. இச்சமர்களுக்கு இதுவரை தோல்வி ஏற்பட்டது கிடையாது. நடைபெற்று முடிந்த எவ்வித விடுதலை போர்களானாலும்சரி, எதிர்காலத்தில் நடைபெற இருக்கின்ற போராட்டங்களானாலும் சரி, இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டங்களானாலும் சரி, அவை வெற்றியை அடையாளப்படும்வரை ஓய்வு பெற போவது கிடையாது. போராட்டங்களை பொறுத்தமட்டில் எப்போதுமே இரண்டு அணி களத்தில் இருக்கும். ஒன்று, அடக்குமுறை அணி, மற்றொன்று அந்த அடக்குமுறையை விரும்பாத அணி.
அடக்குமுறை அணியில் அதிகாரவர்க்கத்தினராக தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் விழித்து சிலிர்த்து எழும் அணிகள் எப்போதுமே பாட்டாளி வர்க்கமாகவே இருக்கிறார்கள். ஆனால் இந்த உலகத்தின் நிலைப்படி தொடர்ந்து வெற்றி பெறுவதென்னவோ பாட்டாளி வர்க்கமாகவே இருக்கிறது. இதை இதுவரை வரலாறு மாற்றி அமைத்தது கிடையாது. இயற்கை அடக்குமுறையாளர்களுக்கு துணைபோனதை இதுவரை நாம் அறிந்திருக்க வில்லை. ஒருவேளை ஆதிக்க ஆற்றல்கள் தங்களிடம் குவிந்து கிடக்கும் கருவிகளையும், கூலிக்கு களத்தில் இருக்கும் இயந்திரங்களையும், தமக்கு ஆதரவாக இனவிடுதலை போராளிகள் மீது அடக்குமுறை தொடுக்க ஏவி விடலாம். வெறும் கரங்களோடு களத்தில் இருக்கும் போராளிகள் வீழ்த்தப்படுவதாக ஒரு பொய் தோற்றத்தை இந்த அடக்குமுறையாளர்கள் சித்தரித்து, அதையே பரப்புரையாக்கலாம். ஆனால் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டு ஆற்றல்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தில் மிகப்பெரிய வேற்றுமைகள் இருக்கின்றது.
போராளிகள் எப்போதுமே கூலிக்காக களத்தில் இருப்பவர்கள் கிடையாது. அவர்கள் தமது நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக, நாட்டின் உரிமைக்காக, தமது மக்கள் எந்த நிலையிலும் தம்மை இழந்துவிடக் கூடாது என்பதற்காக தம்மையே அர்ப்பணிக்கும் ஈக விளக்குகளாக அவர்கள் களத்தில் இருக்கிறார்கள். இவர்கள் காயங்களைக் கண்டு துயர் கொள்வது கிடையாது. உறுதியான உள பக்குவமும், அடக்குமுறைகளை எதிர்த்தாளும் மனத்திறனும், எதனையும் தமது மக்களுக்காக செய்கிறோம் என்கின்ற உளவியல் பாகுபாடும் இவர்களுக்குள் ஆழமாக இருக்கின்ற காரணத்தினால், இவர்களை அடக்குவதென்பது எளிதாக இருப்பது கிடையாது. இவர்கள் வாழைக்குருத்துக்களைப் போல் வெட்ட வெட்ட முளைக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறார்கள்.
இவர்களை அழிப்பதற்காக எடுக்கப்படும் கருவிகள் தாம் அழியுமே தவிர, இந்த வீர மறவர்களை தம் மக்களின் மானம் காக்கும் கண்மணிகளை அழித்ததில்லை, அழிக்கப்போவதில்லை என்பதை எதிரிகள் புரிந்து கொள்வதில்லை. ஆனால் ஆதிக்க ஆற்றல்களிடம் அடிபணிந்து, கைகட்டி, கூலிபெறும் அந்த மனித இயந்திரங்கள் மானத்தை இழந்தவை. அவைகளுக்கு சுயசிந்தனை கிடையாது. தமது மக்கள் குறித்த எவ்வித உயரிய கோட்பாடோ, அல்லது தமது மக்களின் வாழ்வியல் மற்றும் பொருளியல் சார்ந்த சிந்தனையோ இந்த கூலி அடிமைகளுக்கு இல்லாத காரணத்தினால், ஆதிக்க ஆற்றலின் நடுவமான திகழும் அந்த தீங்கு நிறைந்த ஆட்சியாளரின் கட்டளையை ஒரு இயந்திர கதியில் நின்று முடிக்கும் கீழ்நிலை கொண்டவர்களாகத்தான் இதுவரை இருந்து கொண்டிருக்கிறார்கள். இதை மாற்றி அமைத்ததாக இதுவரை வரலாற்றிலே எவ்வித ஆதாரமும் இல்லை.
ஆக, போராட்டம் என்பதில் இருவேறு அணிகள் இருக்கின்றார்கள். இவர்கள் ஒரு அணி தாய் மண்ணை நேசிக்கும் அணி. வேறொரு அணி கூலிக்கு வேலை செய்யும் அணி. இந்த கூலிக்கு வேலை செய்யும் அணி, எப்போதுமே அச்சமுள்ள மனதுடன் ஓடி ஒலியும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு நீதி, அறநெறி குறித்த எவ்வித பண்பும் ஒருதுளியும் இருப்பதில்லை. ஆகவேதான் இந்த அறநெறியற்ற கூட்டம் எப்போதுமே பாலியல் வக்கிரம் நிறைந்ததாக, பண்பாடற்ற மந்த புத்தியுள்ள கூட்டமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு கட்டுப்பாடில்லாத, மந்த புத்தியுடைய கூட்டத்தைக் கொண்டுதான் நாம் எமது மண்ணின், எமது மக்களின் மீது தொடுக்கப்பட்ட ஒரு அநீதியான சமரிலே அமைதி காக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். சமருக்கான ஒரு நீதியோ, உலக அளவில் கடைபிடிக்கப்படும் சட்ட விதிகளோ, அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு, எமது மக்கள் மீது வீசப்பட்ட அடக்குமுறைகளே எம்மை, எமது மக்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக, எமது மக்கள் எந்த நிலையிலும் துயர்படக்கூடாது என்பதற்காக அவர்கள் வாழ்வியல் காக்கப்பட வேண்டும் என்பதற்காக எமது தேசிய ராணுவம் சுடுவதை நிறுத்தியது. துப்பாக்கியை மடக்கியது.
ஆனாலும்கூட, அது களத்திலே உறுதியாக எந்தவித அசைவும் இல்லாமல் ஆக்கப்பூர்வமான எமது நாட்டை கட்டி அமைப்பதற்கான உள்ளத்திடன் கொண்டு அதற்கான அடுத்தக்கட்ட நகர்வை அது திறனாய்வு செய்து கொண்டிருக்கிறது. வெற்றி என்பது இரண்டு நாடுகளுக்கும் ஏற்படும் போர் நிலையிலே ஒரு நியாயம் இருக்க வேண்டும். ஆனால் எமது மீது தொடுக்கப்பட்ட அந்த போர் அநீதியான போர். அக்கிரமம் நிறைந்ததாக எந்த காலத்திலும் மன்னிக்க முடியாத பேரவலம் கொண்டதாக இருந்தது. இந்த போரிலே நாம் இறுதி நிமிடம்வரை உள்ள உறுதியோடு களத்திலே இருந்தோம். எமது மக்களை காக்க வேண்டும் என்பதற்காக எமது உயிரை பணயம் வைத்தோம். யாரோடு சமர் என்பதிலே நாம் தெளிவாக இருந்தோம். ஒருவேளை எமது சமரின் நோக்கம் ஒரே ஒரு மயிரிழை அளவிற்கு மாறியிருந்தாலும் அது சிங்கள மக்களை பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கி இருக்கும். ஆனால் நாம் நீதியை கடைப்பிடிப்பவர்கள், எந்த நிலையிலும் நெறி மாறாதவர்கள், எமது தேசிய தலைவர் எந்த தன்மையிலும் தமது உள்ள திடனை மட்டுமல்ல, தமது நேர்மையையும் சிறிதும் தவற விட்டது கிடையாது.
அந்த காரணத்தால்தான் தொடர்ந்து நாம் ஓரிடத்திற்கு குவிக்கப்பட்டு எம்மீது கொத்துக் குண்டுகளும், பல்குழல் பீரங்கிகளின் படு பயங்கரமான தாக்குதலும், வேதியியல் குண்டுகளும், பன்னாடுகளின் தடைசெய்யப்பட்ட அழிவு கருவிகளும், ஒரு மாபெரும் போரிலே பயன்படுத்தப்படும் பெரும் படையணிகளும் ஒருங்கிணைந்து களத்தில் இருந்தபோதுகூட அவர் கட்டுப்பாட்டை இழக்காமல், நாங்கள் ஒருநாட்டை கட்டியவர்கள், எமது நாட்டு வேறொரு நாடுடன் சமர் புரிகிறது, எமது நாட்டின் ராணுவம் பகை நாட்டு ராணுவத்துடன்தான் சண்டையிட வேண்டும். ஆகவே பகை படையுடன் மட்டுமே நாம் தொடர்ந்து மோதலை வலுக்கச் செய்வோமே தவிர, எந்த நிலையிலும் நாம் சிங்களர்கள் வாழும் பகுதிகளில் எமது தாக்குதலை நிகழ்த்தியது கிடையாது.
கடும் சமர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலும்கூட, வான்புலிகள் நிகழ்த்திய சாகச தாக்குதல் எந்தநிலையிலும் அப்பாவி சிங்கள மக்களை நோக்கி நகர்த்தப்படவில்லை. நாம் சிங்கள பேரினவாதத்தை அழித்தொழிக்கும் வகையில், அதன் நடுவங்களை குறிவைத்து நமது படைபிரிவை நகர்த்தினோமே ஒழிய, சிங்கள மக்களை அப்பாவி ஆண் பெண்களை குறிவைக்க எமது தேசிய தலைவர் எப்போதுமே விரும்பியது கிடையாது. ஒருவேளை எமது தேசிய நடுவம் விரும்பியிருந்தால், எமது மண்ணிலிருந்து புறப்பட்ட வான்புலிகள் பெருங்கூட்டமாக வசிக்கும் சிங்கள மக்கள் வாழும் பகுதியில் குண்டுகளை வீசி தாக்குதல் நிகழ்த்தியிருந்தால், அது ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றொழித்த அவ செயலாகி இருக்கும். ஆனால், வீரர்கள் எப்போதும் நெறி தவறுவது கிடையாது.
எமது தேசிய தலைமை இதிலே ஒரே ஒரு புள்ளிக்கூட தடம் புரளவில்லை. இறுதிவரை எமது மக்களை காக்கும் தடுப்பு நிலைப்பாட்டில் மட்டுமே கையாண்டார்களே தவிர, சிங்களர்களை எதிரியாக அவர்கள் கருதவில்லை. ஆகவேதான் நாம் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டோம். ஆனால் நம்மை ராசபக்சேவால் தோற்கடிக்க முடியவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக செயவர்த்தனா, பிரேமதாசா, சந்திரிகா என அடுத்தடுத்து வந்த எந்த ஆட்சியாளனும் நம்முடைய ஒரு சிறு அசைவைக் கூட ஏற்படுத்த முடியாமல் திணறிதான் நின்று கொண்டிருந்தான். ஆனால் கேவலமான உலக வரலாற்றில் நிகழக்கூடாத ஒரு பேடித்தனமான செயலை செய்துதான் ராசபக்சே இந்த சமரில் வெற்றி கண்டதாக கொக்கரிக்கிறான். காரணம், தனியாக நின்று வெற்றி பெற முடியாத ராசபக்சே, பார்ப்பனிய-பனியா பேரினவாத இந்திய அரசை துணைக்கு அழைத்தான். பாகிஸ்தானின் உள்நாட்டு சமரிலே சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதை அறிந்து கொண்டு, அதனிடம் கப்பல் கப்பலாக கருவிகளை வாங்கி குவித்தான்.
ஆஸ்திரேலியாவின் ராணுவ உதவியை கெஞ்சி கூத்தாடி பெற்றான். சீனத்தின் பல்வேறு படை கருவிகளை பதுக்கி வைத்து தாக்கினான். இத்தனையும் செய்த பின்னர்தான் அவன் வெற்றி பெற்றதாக அறித்தார். சிறு குழந்தையிடம் சொன்னால்கூட, ராசபக்சேவின் முகத்தில் காரி உமிழும். காரணம் நாம் களத்தில் இருந்த இறுதி நிமிடம் வரை எந்த நாட்டிடம் இருந்தும் ஒரு குண்டூசியைக்கூட கெஞ்சி பெறவில்லை. காரணம், எமது புலிகள் அணுகுண்டுகளாக தமது உடலை வெடிக்கச் செய்து களம் அமைத்தார்கள். எதிரியை நடுங்க செய்தார்கள். அவன் குலைநடுங்கி ஒலிந்து கொண்டிருந்தான். கூட்டுச் சேர்ந்து ஒரு சிறிய நாட்டை அழித்ததை வீரம் என்று கருதிக் கொண்டு இன்று விழா கொண்டாடுவதாக செய்திகள் வருகிறது.
இதுவரை உலக வரலாற்றில் தேசிய விடுதலைக்கான ஒரு போராளிக்குழு, கடற்படை, வான்படை, தரைப்படை என முப்படைகளை வைத்துக் கொண்டு சமர் புரிந்ததாக நாம் அறியவில்லை. ஆனால் இதை இந்த பூமிப்பந்தில் முதன் முதல் நிரூபித்துக் காட்டியது எமது தேசிய தலைவரின் தலைமைதான். மேதகு தேசிய தலைவர் அவர்கள் நமது நாட்டின் பாதுகாப்பை தம்முடைய உளமார்ந்த நேசிப்புக்குள் அடைகாத்தார். அவர் தமது மக்களின் வாழ்வு, மகிழ்வு இவைகளில் முழு அக்கறை செலுத்தினார். நமது பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் பணிகளை உந்தித் தள்ளினார். ஆகவேதான் நாம் இந்த வினாடிவரை நாம் மனநிலை மாறாமல் உறுதியோடு களத்திலே இருக்கிறோம். இந்த மே 16, 17, 18 தேதிகள் நம்மை அச்சுறுத்துவதற்கு பதிலாக, ஆத்திரமூட்டுவதற்கு பதிலாக, நம்மை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் காரணியாகத்தான் இருக்கிறது.
வாருங்கள் எமது இனிய உறவுகளே! வளம் கொழிக்கும் நமது தாய்நாட்டின் நலன் காப்போம். நமது தாய் நாட்டின் நலத்திற்காக குருதி சிந்திய, உயிர்கொடை தந்த அந்த உத்தமர்களை நன்றியோடு நினைப்போம். நமது தேசிய தலைவரின் தலைமையிலான தமிழீழ அரசை கட்டியமைப்போம். இதில் எவ்வித மாற்றமும் நிகழப்போவது கிடையாது. நமக்கான அரசு விரைவில் நமது மேதகு தேசிய தலைவரின் தலைமையில் உதிக்கப்போகிறது. அப்போது நாம் கரம் அசைத்து, மகிழ்ந்து பண்பாடுவோம். வாழ்க தமிழீழம் என.
- கண்மணி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment