Wednesday, 19 May 2010

இறப்பில்லா இளவரசன் பிரபாகரன்


பாரதப்போரில் 13ம் நாள் அபிமன்யு வதம் வரை வேகமாக நகர்ந்து, அபிமன்யுவிற்குப் பிறகு சூல்கொண்ட மேகமாக திரும்பிய பாரதப்போர் போல இப்போது பதினெட்டாம் நாள் நிறைவுப்பகுதிக்குள் வந்துள்ளது.

பாரதப்போரில் அபிமன்யு வதம் வந்தது போல புதுமாத்தளன் போரில் ஆனந்தபுரத்து சுற்றிவளைப்பில் சிக்குண்டு மடிந்த கேணல் தீபனினதும் ஆயிரக்கணக்கான போராளிகளதும் மரணம் நிகழ்ந்தது.

ஆனால் அதற்கும் இதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது பாரதப்போரில் உரிமையை இழந்தவர்கள் உரிமையைப் பெற்றார்கள், இங்கோ உரிமையை இழந்தவர்கள் கொல்லப்பட்டார்கள்.

உலகத்தில் வேதனைகளில் எல்லாம் பெரிய வேதனை.. தர்மம் தோல்வியடையும்போதுதான் ஏற்படும். அத்தகைய வேதனையை ஆற்றும் வல்லமை காலத்திற்கே உண்டு.

இதற்கு ஓர் உதாரணம் இராமாயணத்தில் இருக்கிறது. நாளை மகுடம் தரிக்கிறான் இராமன் என்று செய்தி காலையில் பரவியிருந்தது. அன்று மாலை கைகேயி ஆட்சி உனக்கில்லை என் மகன் பரதனுக்கே என்று கூறுகிறாள்.

தன் மகன் பரதனுக்கே ஆட்சி என்று அவள் தசரதனிடம் கேட்ட வரத்தால் தர்மம் தோல்வியடைந்திருந்தது.. எனவேதான் 14 வருடங்கள் இராமன் வனவாசம் போக வேண்டும் என்று அடுத்த நிபந்தனையைப் போட்டாள்.

தர்மத்தின் தோல்வியால் வரும் வலியை மறக்க கடவுளின் அவதாரமான இராமனுக்கே 14 வருடங்கள் வேண்டும் என்பது நாமறியும் காலத்தின் கணக்காகும். இல்லாவிட்டால் இராமன் அறுபது வருடங்கள் காடு போகவேண்டும் என்று கைகேயி கேட்டிருப்பாள்.

கவலையை ஆற்ற கடவுளுக்கே 14 வருடங்கள் தேவைப்படும்போது மனிதர்களாகிய நாம் எப்படி ஒரு வருடத்தில் மீண்டு வருவது .. சிந்திக்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.

உடனே சிறந்த பாடல் ஒன்றை எழுதினார். நேற்று இராட்சியம் உனக்கென்று சொன்னபோது இராமனின் முகம் சித்திரத்தில் வரைந்த தாமரைபோல இருந்தது, அதேபோல இன்று இராட்சியம் உனக்கில்லை காடு போ என்று கைகேயி சொன்னபோதும் அதே தாமரை போலவே அவன் முகம் இருந்தது என்று எழுதி வைத்தார்.

ஒரு தாமரைப்பூவை சித்திரத்தில் வரைந்தால் அது வாடப்போவதில்லை. அதுபோல முகத்தை வைத்திருந்து இன்பம், துன்பம் இரண்டையுமே வெற்றிபெற்றான் இராமன் என்று கூறுவார் – இது கம்பர் வாசகருக்குக் கூறும் புத்திமதி.

ஆனால் அதற்குள்ளும் இன்னொரு கதையை உருள வைக்கிறது காலம். கானகத்தில் வாழும் 14 வருடங்களில் நடந்ததை நாம் படிப்படியாகப் பார்க்க வேண்டும். தர்மம் மறுபடியும் வெற்றி பெறுவதற்கான அத்தியாயங்கள் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஆரம்பிக்கின்றன.

தர்மத்தின் தோல்வியால் கைகேயி பெற்ற அரசு அதற்குப் பின் பெருமைகள் எதுவுமே இல்லாமல் குலைந்து போய்விடுகிறது. 14 வருட முடிவில் பரதன் தீ வளர்த்து தற்கொலை செய்யப்போக இராமன் வந்து அவனைக் காப்பாற்றும்போதுதான் மறுபடியும் அயோத்தியில் ஓர் அரசு இருக்கிறது என்ற நினைவு நமக்கே வருகிறது.

அப்போது இராமன் கானத்தில் மடிந்துவிட்டதாக பலர் கூறினார்கள்.. அவன் இறந்தது போல மாயமான் வேடமிட்டு ஒருவன் அலற சீதையே ஏமார்ந்தாள்.. இராவணன் அவளைக் கடத்திச் சென்றான்..

அதுபோல பிரபாகரன் இறந்துவிட்டதாக பல மாயமான்களின் அலறல் கேட்கிறது..

இருந்தாலும் பிரபாகரன் என்ற வீரன் களத்தில் இல்லாத இலங்கைக்கு இராமன் இல்லாத அயோத்தி போல இனி எந்தப் பெருமையும் ஏற்படப்போவதில்லை.

அந்த வீரனும் அவன் தம்பியரும் நடாத்திய போராலும், சாதனைகளாலும் உலகம் இலங்கை என்ற தீவையே கடந்த 30 வருடங்களாகப் பேசிக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு இராணுவ முகாம்களாக உடைத்துத் தகர்த்து அவன் புலிக்கொடியை ஏற்றியபோது உலகம் மூக்கில் விரலை வைத்துப் பார்த்தது. உலகின் மிகச்சிறந்த கெரில்லாப்படைத் தலைவன் பிரபாகரனே என்று பீ.பீ.சியே தேர்வு செய்தது..

மில்லர் நெல்லியடி மகாவித்தியாலயத்தை தகர்த்தபோது இந்திய இராணுவமே இலங்கையில் இறங்கியது..

திலீபன் நீரே அருந்தாது மடிந்தபோது இந்திய இராணுவம் வெளியேறும் நாள் எழுதப்பட்டது.

இந்திய இராணுவத்தையே சுண்டு விரலால் வர வைக்கவும், அதுபோல போக வைக்கவும் முடியுமென உலகிற்குக் காட்டிய உன்னதத் தலைவனாக அவர் இருந்தார்.. மற்றவர்கள் இந்தியாவின் சுண்டு விரலுக்கு ஓடிப்போகிறார்கள் வருகிறார்கள்..

ஒரேயொரு வீரத் தமிழனைத் தேடி உலகில் பெரிய இராணுவத்தைக் கொண்ட சீனா, உலகின் பெரிய சக்தியான அமெரிக்கா, அணுகுண்டைத் தூக்கிய அத்தனை வல்லரசுகளும் வன்னிக்கு வந்து இறங்கினவே ஏன்..

ஒரு தமிழனுக்கு இந்த உலகம் இணை என்று கூறி, வன்னி மண்ணுக்கு உலகத்தையே வரவழைத்தான் தம்பி பிரபாகரன்.

தமிழீழத்தை அமைத்தாலும் செய்ய முடியாத பெரும் சாதனையல்லவா இது…

விமானப் படையை அமைத்து வானில் எழும்பி மாவீரர் சமாதிக்கு மலர்மாரி வீசச் செய்தானே.. ஐயாயிரம் ஆண்டுகளாக தமிழனுக்கு வாய்க்காத பெருமையல்லவா அது..

இப்படி அவன் புகழை எழுதிக்கொண்டே போகலாம்…

பிரபாகரன் களத்தில் இருக்கும்வரைதான் இலங்கைக்கு பெருமை..

இராமன் இல்லாத அயோத்திக்கு ஏது பெருமை…

பிரபாகரன் இல்லாத இலங்கைக்கு ஏது பெருமை..

சரி..

இனி நிறைவுக் கேள்விக்கு வருவோம்…

எங்கே பிரபாகரன்..

உலகத்தில் பிறந்த மனிதர் எல்லோரும் என்றோ ஒருநாள் இறக்கிறார்கள்.. ஆனால் இறப்பிற்கு முன்னரே அவ்விடத்தை விட்டு சென்று வாழ்ந்து கொண்டே இருக்கும் மனிதர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள்.. அப்படிப்பட்ட ஒரு சிலரில் பிரபாகரனும் அடக்கம்..

போர்க்களத்தில் இருக்கும்வரை தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த பிரபாகரன் தான் இறுதியாக எடுத்த முடிவை தனது உடன் பிறப்புக்களுக்குக் கூட சொல்லவில்லை..

இருக்கிறார் என்று யாராவது கூறினால் அவரைக் கொண்டுவந்து நிறுத்த வேண்டும்..

இல்லை என்று சொன்னால் அதையும் உறுதிப்பட நிறுவ வேண்டும்..

இரண்டுக்குமே போதிய ஆதாரங்களில்லை..

இப்படியான உறுதியற்ற நேரத்தை உலக அறிஞர்கள் கொன்ஸ்பிரேசன் தியரி என்ற கோட்பாட்டின் மூலம் விளக்குவார்கள். மனித குலத்தால் நம்ப முடியாத உண்மையாக அது நிலவும்..

இதோ புதுமாத்தளன் ஒராண்டு நினைவலைகளின் போது டென்மார்க் பத்திரிகை ஒன்றில் வெளியான மூன்று கொன்பிரேசன் தியரிகளை முதலில் இங்கே தருகிறேன்..

01. ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி 1962ம் ஆண்டு பிரபல நடிகை மார்லின் மன்றோ மரணமடைந்தார். அவர் மரணம் தற்கொலை என்று கூறப்பட்டது. அவர் கையில் நச்சு மாத்திரையை போட்டபோது நீர் பருகிய ஒரு கிளாஸ் கிடந்தது.. ஆனால் அவருடைய வயிற்றில் ஒரு மாத்திரையைக் கூட காண முடியவில்லை.. அவரின் முடிவு மரணமா இல்லையா என்பதை நிறுவ இன்றுவரை ஆதாரமில்லாமலிருக்கிறது.. அதற்கு முன்னரே ஒரு மர்மமான பொழுது நகர்ந்துள்ளது.. அதற்குள் அவர் நடந்துவிட்டார்..மார்லின் மன்றோ இறக்கவில்லை..

02. மைக்கல் ஜாக்சன் இறந்துவிட்டதாக உடலத்தைக் காட்டிய போதும் யூரியூப் வெளியிட்ட வீடியோ அவர் நடமாடுவதைக் காட்டியது. தற்போது புதிய விடியோ ஒன்று வெளியாகியுள்ளது.. அவர் உயிர் வாழ்கிறார் என்பதைக் காட்ட..

உண்மையில் ஜாக்சன் இறக்கவில்லை..

03. இதுபோல பொப்பிசைப் பாடகர் எல்விஸ் இறக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவருடைய கல்லறையில் உள்ள பெயரில் தற்செயலாக ஓர் எழுத்து பிழையாகவே பதியப்பட்டுள்ளது.. ( ஆதாரங்கள் மெற்றோ எஸ்க்பிரஸ் 19.05.2010 பக்கம் 34 )

உடலங்களைக் காட்டினாலும் சிலர் இறப்பதில்லை என்று கூறப்படும் உதாரணங்களில் இந்த மூன்று உலகப் பிரபலங்களும் அடக்கம்..

இதுபோல எத்தனை உடலங்கள் காட்டப்பட்டாலும், எத்தனை கதைகள் கூறப்பட்டாலும் இறப்பில்லாத ஒரு தேவமகன் பிரபாகரன் என்பதே பிரபாகரனுக்கான கொன்ஸ்பிரேசன் தியரி ஆகும்.

பிரபாகரன் இருக்கிறாரா..? இல்லையா..? என்பதைவிட பெரிய கேள்வி இன்று உலகில் எதுவுமே கிடையாது.. அதுதான் அவருடைய வலிமை.

இனி நடக்கப் போகும் ஒவ்வொரு நாடகத்தையும் அந்த வலிமையே தோன்றாத் துணையாக நின்று நடாத்தி, ஈழத் தமிழினத்திற்கு விடிவைத் தரப்போகிறது..

இதுதான் நமது நம்பிக்கைக்கான ஆதாரம்…

கடந்த 17.04.2010 அன்று முதல் முதலாக மேடையேறிப் பேசிய பிரபாகரனின் சகோதரன் வேலுப்பிள்ளை மனோகரன் புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று பேசுவதற்காக வரவில்லை. மேடையில் அவரை அறியாமலே அந்த வாசகத்தை உச்சரித்துவிட்டார்..

எல்லோரும் ஆச்சரியப்பட்டோம்..

சத்தியமாகச் சொல்கிறேன்… ஏன் அப்படிச் சொன்னேன் என்று எனக்கே தெரியவில்லை என்றார்..

அன்றிரவு..

என்றுமே அவருடைய கனவில் வராத பிரபாகரன் அன்று அவருடைய கனவில் வந்தார்.. , அண்ணா நீ பேசியது தவறல்ல அதுவே சரி.. , என்று கூறிவிட்டுப்போனார்..

பிரபாகரன் முன்னைவிட வேகமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர் இறப்பில்லா இளவரசன் என்பதே அவருக்காக நாம் எழுதக்கூடிய புதிய கொன்ஸ்பிரேசன் தியரியாகும்..

எல்லோரும் புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையான புலி வீரர்கள் அதைவிட முக்கியமான ஒரு வாசகத்தை அடிக்கடி கூறுவார்கள்..

முக்கியம் எங்கள் கண்களை உற்றுப் பார்க்காதீர்கள்.. அதைவிட முக்கியம் நாங்கள் எங்கேயென்று தேடாதீர்கள்.. இதுதான் அந்த வாசகம்..

அன்று என்போன்ற சாதாரண பொது மக்களால் அதைப் புரிய முடியவில்லை.. ஆனால் இன்றுதான் அது எனக்குப் புரிகிறது..

உற்றுப் பார்க்காதீர்கள்…

எங்கேயென்று தேடாதீர்கள்…

பிரபாகரனின் தகவல்கள் காற்றிலும், தேவைப்படின் கனவிலும் உங்களுக்கு வரும்…

பிரபாகரன் தமிழர் மட்டுமல்ல சிங்களவரும், இந்தியரும் அதுபோல உலகின் அனைவருமே நலமாக சுதந்திரத்துடன் வாழ வேண்டுமென்றே நினைக்கிறார்…

கவலை வேண்டாம் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்…

நிறைவு..

No comments:

Post a Comment