Saturday, 15 May 2010

எமது ஒற்றுமையின் ஊடாக நாடுகடந்த தமிழீழ அரசுக்கு பலம் சேர்ப்போம்: ஜெயானந்தமூர்த்தி


சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் முதலாம் ஆண்டு நிறைவில் நாம் காலடி எடுத்து வைத்துள்ள இக்காலப்பகுதியில் புலம் பெயர் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய தருணம் இதுவாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடுகடந்த தமிழீழ அரசின் லண்டன் உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“கடந்த வருடம் முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா அரசினால் சில உலக நாடுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பின் பேரவலம் இன்னும் மக்கள் மனதைவிட்டு அகலவில்லை. இப்பேரவலத்தில் இருந்து தாயக மக்கள் இன்னும் மீளவில்லை. எம்மின உறவுகள் இன்னும் ஏதலி முகாம்களில் அடிப்படை வசதிகள் இன்றி அல்லல் படுகின்றனர். குறிப்பிட்ட சில தொகையினர் மீள்குடியேற்றம் என்ற பெயரில் தமது சொந்த இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு கைவிடப்பட்டுள்ளனர்.

அவர்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் மீளவும் திரும்பவில்லை. இந்நிலையில் நாம் தமிழின அழிப்பின் முதலாம் ஆண்டில் காலடி வைத்துள்ளோம். எமது விடுதலைப் போராட்டம் தாயகத்தில் மௌனிக்கப்பட்டாலும் புலம் பெயர் நாடுகளில் அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு மார்க்கமாகவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாகி வருகின்றது. இது புலம் பெயர் மக்களின் ஒற்றுமையிலும், பலத்திலும், உறுதிப்பாட்டிலுமே கட்டியெழுப்பப்பட வேண்டியதாகும்.

எனினும் இந்த ஒற்றுமையையும், பலத்தையும், உறுதிப்பாட்டையும் சிதைத்துவிடும் நோக்கில் சிறிலங்கா உட்பட பல சக்திகள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. இதற்கு எமது புலம் பெயர் சமுகத்தில் உள்ள சிலரும் உடந்தையாக உள்ளனரா என்ற அச்சமும் சந்தேகமும் எமக்கு ஏற்பட்டு வருகின்றது. திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இச்சதி முயற்சிகளில் எமது மக்கள் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டியது இக்காலகட்த்தில் மிக முக்கியமானதாகும்.

எனவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளை ஒற்றுமையுடன் வழிநடத்திச் செல்ல வேண்டியது அனைவரினதும் கடமையும் பொறுப்புமாகும். எனவே இந்நிலையில் எமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைய “நான் பெரிது, நீ பெரிது என்றிராமல் நாடு பெரிது” என்று எமது தமிழீழம் என்ற உயரிய இலட்சியத்தை அடையும் வகையில் எந்த வித முரண்பாடுகளுக்கும் அப்பால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் தமது ஒற்றுமையின் ஊடாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு பலம் சேர்க்க வேண்டும். இதுவே இன்றைய காலகட்டத்தின் தேவையும் அவசியமும் ஆகும். எமது பலத்தின் ஊடாக எதிரிகளின் சவால்களை முறியடிப்போம்.” என ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment