Saturday, 15 May 2010

தேசிய தலைவர் வென்றுவிட்டார்


ஒரு மாபெரும் இன அழிப்பின் அடையாளத்தை திரும்பி பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்திய மேலாதிக்க ஆற்றல் தமது கொடுங்கரங்களை படரவிட்ட கேவலம் நிகழ்த்தப்பட்டது வரலாற்றில் எப்போதும் அழிக்க முடியாத அவமான சின்னமாக நிலைத்து நிற்கும் என்பதிலே இருவேறு கருத்துக்களுக்கு நிச்சயமாக இடமிருக்க வாய்ப்பில்லை. தமிழர்கள் சூறையாடப்பட்டுக் கொண்டிருந்த காலம். மே 10ஆம் தேதி தொடங்கியே 19ஆம் தேதி வரை ஒவ்வொரு வினாடியும் தமிழர்களின் வாழ்வுக்கு உத்திரவாதம் இல்லாத ஒரு கோர நிலை அங்கே நீடித்துக் கொண்டிருந்தது. எப்போதாவது யாராவது எங்கிருந்தாவது தம்மை காப்பாற்ற கரம் நீட்டுவார்களா? என்று தமது கண்களை கடல்தாண்டி பார்த்துக் கொண்டிருந்த சொந்தங்கள், சொல்லொனா துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது. இந்த அடக்க முடியா துயர் நிகழ்வுகள் எப்போது தீரும் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில்தான் இந்தியாவில் ஆதிக்க ஆற்றல்கள் ஒன்றிணைந்து, அதிகார நாற்காலியை பிடிப்பதற்கான அதிரடி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.

தேர்தலின் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்று தெரியாத காலம்வரை அவை தொடர்ந்து இந்தியாவை நம்பிக் கொண்டிருந்த நிலை தேர்தல் முடிவுகள் இந்தியாவின் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைகிறது என்று தெரியத் தொடங்கிய இறுதி மூன்று நாட்களில் சிங்கள பேரினவாதம் தமது கரங்களில் கொடும் கருவிகளை எடுத்துக் கொண்டு, தமிழர் இனஅழிப்பு வேலையை மிக வேகமாக நிகழ்த்தத் தொடங்கியது. இதற்கு முன்னால் இந்த தமிழ் மண்ணில் நிகழ்ந்த அறுவெருப்பான நாடகங்கள், நாம் நம்மை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக திரும்பிப் பார்த்தே தீர வேண்டும். எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், அடுக்கடுக்காய் உண்ணாநிலை அறப்போர்கள் என்றெல்லாம் நீடித்துக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் தமிழினத்திற்காகவே வாழ்வதாக ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் ஒப்பற்ற தமிழின தலைவர், தமிழர்களின் ஈனத் தலைவராக உருமாறி நின்றார்.

தமது சொந்த உறவுகளை அடித்து, ரத்த சகதியில் துவைத்தெடுக்கும் காங்கிரஸ் கட்சியின் ரத்த கரை படிந்த கரங்களை ஆதரிக்கச் சொல்லி நாடெங்கும் பரப்புரை செய்தார். வெறும் 4 மணி நேரம் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் நடத்தினார். போராட்டம் முடிந்தது. தமிழீழத்திலே போர் நிறைவடைந்தது என்று மனசாட்சியே இன்றி பொய் சொன்னார். ஆனால் அதன் பின்னர்தான் எமது இனம் புல் பூண்டுகள் கூட இல்லாத அளவிற்கு அழிப்பதற்கான அனைத்து வேலைகளும் முடக்கிவிடப்பட்டது. மக்கள் கொத்துக் கொத்தாக செத்துப்போனார்கள். மகிழ்ச்சியும், துள்ளலும், மனநிறைவும் கொண்ட அந்த எம் தமிழர் பூமி, பிண காடாய் மாறாய். கழுகுகளின் விருந்தாளிகளாக எமது மக்கள் மாறிப் போன கொடுமை மறக்க முடியாத அளவிற்கு எமது இதயத்தை பாராங்கல் கொண்டு அழுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் கேவலம் ஆட்சி அதிகாரத்திற்காக ஒரு இனத்தை பலிகொடுத்த பெரும் குற்றவாளி கருணாநிதி என்கின்ற அவப்பெயர் எந்த காலத்திலும் நீங்கப்போவது கிடையாது.

அந்த மே திங்கள் எமது மக்கள் எல்லாம் சூறையாடப்பட்டு, செத்தொழிந்தார்கள். கடல்நீர் கண்ணீரால் உவர்ப்பாகியது. எமது செந்நீரால் அவை சிவப்பாகியது. குடல் சரிந்து, சதை சிதறி, உடல் கருகி என எமது சொந்த உறவுகள் அங்கே அழுவதற்குக்கூட நாதி இல்லாமல் அடங்கிப்போன கொடுமை நிகழ்வதற்கு இந்திய தேசிய காங்கிரஸ்தான் காரணம் என நாம் குற்றம் சாட்டுகிறோம். எம்மை அழிப்பதற்கான ஆயுதங்களை பல்வேறு படையணிகள் கொடுத்துதவியது. அணுஆயுத வல்லரசுகள் எமது சிறு நாட்டை அழிக்க அணி வகுத்து நின்று அவமானப்பட்டது. நாம் எழுவதற்காக பிறந்தவர்கள், வீழ்வதற்காக அல்ல என்று வீரம் கொப்பளித்த தமிழ் மறவர்கள் புலிகள் எனப் பெயரில் சமர் புரிந்து உலக படைக்கெல்லாம் பெரும் படையாக தம்மை அடையாளம் காட்டி நின்றார்கள். ஈராக் மீது நேச நாடுகள் படை எடுப்பதற்கு முன்னால் குவைத்திலிருந்து ஈராக்கை வெளியேற்ற அவர்கள் படை குவைத்தில் இறங்கியபோது ஒரு இதழ் இப்படி வர்ணித்தது. வெண்ணையிலே கத்தி இறங்குவது போல் மிக எளிதாக அமெரிக்கப் படை குவைத்தில் வெற்றி பெற்றது என.

ஆனால் தமிழீழ மறவர்களிடம் இந்த நிலை எடுபடவில்லை. ஒவ்வொரு முன் நகர்வும் முறியடிக்கப்பட்டது. வானிலிருந்து வான் படை தாக்குதலை சமாளித்துக் கொண்டே தரை படையை நிறுத்தி வைத்த, வீர வரலாற்றை எமது தமிழ் படை அங்கே நிகழ்த்திக் காட்டியது. ஆனால் வரலாற்றில் எப்பொழுது போர் என்றாலும் பலம் வாய்ந்த ஒரு அணியின் முன்னால் நமது அணி தோற்றுப்போவது மிக மிக இயல்பான ஒன்றுதான். ஆனால் தோற்றுப்போவது மட்டுமே தோல்வி அல்ல என்பதை இந்த படுபாதக செயல் புரிந்த உலக அரசுகளும், இந்தியா, இலங்கை இனவெறி அரசுகளும் புரிந்து கொள்ள வேண்டும். காரணம், எமது அணி உதிரத்திலிருந்து உயிர் பெறும் உன்னதம் கொண்டது. அவர்கள் கூலிக்கு மாரடிக்கும் சிங்களர் கூட்டத்தைப் போன்றவர்கள் அல்லர். எமது நாட்டை மீட்டெடுக்கும் மகத்தான போராளிகள். உயிர் காக்க கெஞ்சி, யாசித்து நிற்கும் கேவலத்தை அவர்கள் இதுவரை களத்தில் நிகழ்த்தியதில்லை. தாம் செத்துப் போவதின் மூலம் புதிய வித்தை உருவாக்கும் உயர்நிலை போராளிகளாக இந்த உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டவர்கள்.

யாரோடும், எந்த நிலையிலும் தமது இனத்திற்கான சமர் என்று வந்துவிட்டால் சமரசத்திற்கு இடம் தராதவர்கள். தாழ்ந்து நின்றாலும், தமிழ் வாழ வேண்டும் என்பதற்காக தம்மை சிதறடித்துக் கொள்ளும் சிந்தனை கொண்டவர்கள். அடக்க முடியா ஆற்றலும், அளவில்லா பற்றும், தமது மக்கள் மீது கொண்ட அன்பும், தமது மண்ணின் மீது கொண்ட நேசமும், எல்லாவற்றையும் விட தம்மை வழிநடத்திய பெருந்தலைவன், உலகத் தமிழர்களின் ஒப்பற்ற நாயகன், தமிழுக்கு உயிரூட்டிய வளிமண்டலம், தரணிக்கே தமிழ் சொன்ன தங்கமகன், மேதகு தேசிய தலைவரின் ஆளுமையும், அவர் கற்றளித்த பாடமும், அவருடைய மனமும் கொண்டவர்களாக எமது போராளிகள் இருந்த காரணத்தினால், அவருக்கு நிகராகவே, ஏன் அவராகவே நின்று களமாடிய காட்சியை கண்டு உலக ராணுவம் அதிர்ந்து போயிருக்கும் என்பதிலே மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. அவர்கள் மாறாத பற்றுடையவர்கள். மனக்கோட்டை கட்டாதவர்கள். இந்த மண்ணிலே தமக்கான நாட்டை அமைக்கும்வரை தளராமல் நிற்பவர்கள். தன்னிகரில்லா தமிழ் புலிகள். அவர்களால்தான் பன்னாட்டுப் படைகள் அணி அணியாய் வந்தபோது கூட, அதை சிதறடித்து நிறுத்தி வைத்த வீரத்தை காட்டியதின் மூலம் தமிழன் என்றால், அவனுக்கு வீரம் என்று ஒரு பொருள் இருக்கிறது என்பதை உலகிற்கெல்லாம் உரக்கச் சொன்னார்கள்.

அப்படி அவர்கள் சமராடி முடித்தபோதும் பெரும் ஆற்றல் கொண்ட அவர்களை நம்மால் தடுத்து நிறுத்த முடியவில்லை. எமது மக்களின் உயிர் மிக மிக முக்கியம் என்ற காரணத்தினால், உலக நாடுகளுக்கு நாம் கருவிகளை அமைதி படுத்துகிறோம் என்ற சொல்லி அறிக்கை கொடுத்தோம். நிராயுதபாணியை கருவி கொண்டு தாக்கும் பேடித்தனத்தை அங்கே சிங்கள பாசிச அரசு தமது தமிழீன கொலைக்கு கூட்டாளிகளாக இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், ரஷியா ஆகிய நாடுகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு இதுபோதாதென்று மேலும் 15 நாடுகளை துணைக்கு அழைத்துக் கொண்டுதான் எமது புலிகளுக்கு முன்னால் போராட வந்தது. இதைவிடக் கேவலம் வேறொன்றும் இல்லை. தனித்து நின்று எமது இயக்கத்தை வெல்ல முடியாது என்கின்ற மனநிலை எப்பொழுது சிங்கள அரசுக்கு வந்ததோ, அப்போதே அது அந்த களத்தில் தோற்றுவிட்டது. ஆகவே, வெற்றி என்று பார்த்தால், எமது தமிழீழ விடுதலை புலிகள் தான் வெற்றிக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார்களே தவிர, இந்த கயவாளி அரசு அல்ல என்பதை எமது தமிழீழ உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் தோற்றுவிட்டோம் என்று யாராவது சொல்வார்களாயின் அவர்களிடம் சுட்டிக்காட்டுங்கள், எப்பொழுது நாம் கூட்டாளிகளுக்கு முன்னால் தனித்து நின்று களமாடும் திறன் பெற்றோமோ அன்றே எமது தேசிய தலைவர் வென்றுவிட்டார். நாம் தமிழீழம் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது என்பதுதான் உண்மை. ஆனால் உலகவரலாற்றில் இந்த அவமானத்தை மறைப்பதற்காக பெரும் கொடுமையை குருதி தோய்ந்த வரலாறாக சிங்கள பாசிச பேரினவாத அரசு நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. அவர்கள் அடித்த குண்டுவீச்சு நமது அடிவயிற்றை கிள்ளியது. அந்த மக்கள் எழுப்பிய ஓலக்குரல் எமது தசையை அசைவாடச் செய்தது. ஆனால் இந்த நாடு தமிழ், தமிழ் என்று சொல்லிக் கொண்டு, அப்போதும்கூட வாக்களிக்கச் சொல்லி தெருத்தெருவாக, சாலை சாலையாக, ஊர் ஊராக வாக்கு பொறுக்கிக் கொண்டிருந்தார்களே தவிர, அவர்களின் வாக்கு எமது மக்களின் வாய்கரிசிக்குத்தான் பயன்பட்டது. இதனால் வேறொரு பயனும் ஏற்படவில்லை என்பதை நினைத்துப் பார்க்கும்போதே இந்திய தேசியத்தின் அடக்குமுறை நிறைந்த அவமான கரமான அரசியல் அணுகுமுறை நம் முன்னால் நிழலாடுகிறது.

அந்த அரசியலுக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த இந்த படுபாதகர்களை நினைத்து உள்ளம் கூசுகிறது. உலகில் ஒரு மூலையில் நமக்கான ஒரு நாடு அமைவதை தடுத்து நிறுத்திய படுகேவலமான செயலை செய்த தமிழக அரசியல் துரோகங்கள் ஒருநாள் உலகத் தமிழர்களால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படும். அப்போது பிணங்களாக இருந்தாலும்கூட, அதை தோண்டி எடுத்து, கைது செய்யும் நிலை ஏற்பட்டாலும், அதை தடுப்பதற்கு யாராலும் முடியாது. காரணம் துரோகங்கள் தொடர்ந்து நீடிப்பதில்லை. அவமானங்கள் அப்படியே இருப்பதில்லை. தோல்விகள் தொடர்ந்து இருப்பதில்லை. வெற்றி இறுதிவரை நீடிப்பதில்லை. அதை காலம் தீர்மானிக்கும். ஆகவே, நாம் முள்ளிவாய்க்காலின் குருதி தோய்ந்த மண் எடுத்து உறுதி எடுப்போம். எமக்கான நாட்டை அமைக்கும்வரை ஓயப்போவதில்லை என்று எடுத்துரைப்போம்.

இறுதிவரை போராடுவோம். உறுதியாக போராடுவோம். அடக்குமுறையை எதிர்த்தாளுவோம். எந்த இடர் வந்தாலும் துணிந்து நிற்போம். நாம் துயரை சுமந்து பழகிப் போனவர்கள். நாம் அடக்குமுறையை அணிந்து பழகிப்போனவர்கள். நிச்சயமாக நமது வெற்றி நீடிக்கிறது. அதன் அடையாளம் தான் முள்ளிவாய்க்காலில் நீடிக்கிறது. வாருங்கள். நமது நாட்டை அமைக்க கரம் இணைத்து வடிவமைப்போம். தமிழ் தேசிய தலைவரின் தலைமையிலே உறுதி ஏற்போம்.

- கண்மணி

No comments:

Post a Comment