Monday, 3 May 2010

புதுமாத்தளன் நமக்கு கண்ணீரல்ல - 2


ஒலிம்பிக் போட்டியின் உன்னத தத்துவம்..

புதுமாத்தளனில் புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்று பல ஊடகங்கள் எழுதி வருகின்றன. இந்த உலகத்தில் எதுவுமே முற்றாகத் தோற்கடிக்கப்படுவதுமில்லை முற்றாக வெற்றி கொள்ளப்படுவதுமில்லை. இதை அறிய ஒலிம்பிக் போட்டிக்குள் ஒரு விளக்கம் இருக்கிறது.

எத்தனையோ வருடங்களாக கடும் பயிற்சி எடுத்து, ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்கள் வருகிறார்கள். அதில் ஒருவன் மட்டும் தங்கப்பதக்கம் பெறுகிறான், மற்றவர்களால் அது முடிவதில்லை.

தோல்வியடைந்த ஒருவன் நான் தோற்கடிக்கப்பட்டுவிட்டேன், இனி எனக்கு எதிர்காலமே இல்லை என்று கண்ணீர்விட்டால் ஒலிம்பிக் போட்டியின் முடிவுதான் என்ன ?

இதுவரை காலமும் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர்களை பட்டியலிட்டுப் பாருங்கள்.. தொண்ணுhற்றி ஒன்பது விழுக்காடு தோல்வியடைந்தவர்களே.. இவ்வளவு பேர் தோல்வியடையக் காரணமான ஒலிம்பிக் போட்டியை ஏன் நடாத்த வேண்டும். தொண்ணுhற்றி ஒன்பது வீதம் வீரர்களின் தோல்விக்குக் காரணமான ஒலிம்பிக் போட்டியை நிறுத்துவதுதானே முறை..

ஆனால் உண்மை அப்படியில்லை ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டுமென்ற ஆர்வம் நாளுக்கு நாள் பெருகிச் செல்கிறதே ஏன்.. ?

ஒலிம்பிக்கில் பங்கேற்று தோல்வியடைந்தாலும் அவருக்குப் பெயர் வீரரே.. வெற்றியடைந்தாலும் அவருக்குப் பெயர் வீரரே..

தோல்வியடைந்தவன் கோழையல்ல, அவனும் வீரனே என்பதுதான் ஒலிம்பிக்கின் தத்துவமாகும். களத்தில் இறங்கும்போதே அவன் வீரனாகிவிடுகிறான், இதுதான் ஒலிம்பிக் தரும் சிறப்பு..

ஆனால் ஒரு கேள்வி…

ஒலிம்பிக் போட்டியில் அதிபாரக் குத்துச் சண்டையில் மைக் தைசான் களத்தில் இறங்கிவிட்டார்…

இவருடன் மோதுவதற்கு எல்லோருமே பயந்து நடுங்குகிறார்கள்…

அப்போது ஓர் ஐந்து வயது சிறுவன் அச்சமின்றி கோதாவில் இறங்குகிறான்..

இந்தப் போட்டியில் சமநிலை இல்லை..

ஆனால் ஐந்து வயது சிறுவன்தானே.. இவனை அடித்து வீழ்த்தி இலகுவாக தங்கப்பதக்கத்தை எடுத்துவிடலாமென மைக்தைசான் நினைத்தால் அக்கணமே மைக்தைசான் தோல்வியை தழுவிவிடுவார். உலகம் அவருடைய வெற்றியை ஒரு பொருட்டாக மதிக்கவே மாட்டாது.

மாறாக அதே போரில் சிறுவன் வென்றுவிட்டால் தைசானுக்கு அதைவிட பெரிய கேவலம் எதுவுமே கிடையாது.

வென்றாலும் அவமானம், தோற்றாலும் அவமானம் என்ற நிலை.. இப்போது மைக்தாய்சான் என்ன செய்ய வேண்டும். அந்தச் சிறுவனின் ஓர்மத்தைப் பாராட்ட வேண்டும். அவனைக் கட்டியணைத்து, இந்த உலகத்தில் யாருமே துணியாத ஒரு காரியத்தை நீ செய்ய வந்துவிட்டாய் என்று போற்றி அவனுக்கே, தங்கப்பதக்கத்தைக் கொடுக்கவும் வேண்டும்.

இதுதான் வீரத்திற்கு அழகு..

ஆனால் புதுமாத்தளனில் நடந்தது என்ன..

சுமார் 32ற்கும் மேற்பட்ட உலக நாடுகள் ஐந்து வயது சிறுவனுக்கு ஒப்பான சிறிய படையணியை சுற்றி நின்று மோதினார்கள்.

சண்டை ஆரம்பித்தவுடன் சிறுவன் பயந்து ஓடவில்லை.. அதைத் துணிவுடன் எதிர் கொண்டான்..

அவனுடைய தோல்வி உண்மையான தோல்வியா..?

அவன் தோற்றுவிட்டான் என்று நாம் அழலாமா ?

ஆடுகளம் சமமாக இல்லாத இடத்தில் நம் ஈழத் தமிழ் வீரர்கள் மோதினார்கள்.. அவர்கள் அழிக்கப்படவில்லை.. இப்போரில் அவர்களுக்கே வெற்றி..

இந்த உண்மையை உணர்ந்து நமது கண்ணீரை ஆனந்தக் கண்ணீராக மாற்ற வேண்டும்.

சங்கப்பாடலில் இதற்கு இன்னொரு உதாரணம்…

குடும்பத்தில் எல்லோரும் இறந்த பின் தன் சிறுவயது பிள்ளையை போர்க்களம் அனுப்புகிறாள் தாய்..

அவன் மார்பிலே வேலேந்துகிறான்..

அந்தச் சிறுவனை வென்றவர்கள் யார்…

அவர்கள் வரலாற்றில் வீரர்களாகவா இடம் பெற்றார்கள்…

இல்லை…

தோல்வியடைந்த அந்தச் சிறுவனே வெற்றியாளன்.. அவனே வரலாற்றில் நின்றான்.. வெற்றி பெற்றோம் என்று மார்தட்டிய அனைவரையும் வரலாறு அடித்து சென்றுவிட்டது…

இப்போது சொல்லுங்கள்…

தனது சிறிய படையணியோடு உலகத்தையே துணிந்து எதிர்த்த பிரபாகரன் அடைந்தது தோல்வியா…?

தன் பிள்ளைகள் மனைவி, வயதான பெற்றோரைக் கூட பாதுகாப்பாக வேறிடம் அனுப்பாது மக்களோடு மக்களாக உலகை எதிர்த்து களத்தில் நின்ற அந்த வீரன் அடைந்தது தோல்வியா..

எண்ணிப்பாருங்கள்…

நாம் தோல்விக்காக கண்ணீர்விட்டால் நம்மை உலகம் மூடர் என்றுதான் அழைக்கும்..

நாம் அடைந்தது தோல்வியல்ல.. வெற்றி..

தோல்வியென்று கண்ணீர் விட்டால் நமது பிரச்சனைக்கு தீர்வு எதுவும் கிடைக்காது..

வெற்றி என்று மார்தட்டி நின்றால்..

நமது கண்களில் வடியும் கண்ணீரை ஆனந்தக் கண்ணீராக மாற்றினால்…

விடிகாலை வர முன் விடிவு வரும்..

ஆம்..!

நம் மக்கள் உலகச் சரித்திரம் படைத்த மாதமே இந்தப் புதுமாத்தளன் போர் நடைபெற்ற மாதம் என்ற உண்மையை உணர்ந்து, நாம் ஒவ்வொருவரும் புது வலு பெற வேண்டும்.

No comments:

Post a Comment