Monday, 3 May 2010

திரும்பிப் பார்க்காதே .. நட - 3


பாரதப்போர் முடிந்த சில காலத்தில் கலியுகம் பிறந்துவிடுகிறது.. அதாவது இன்றைய கலியுக மனிதன் பிறந்துவிடுகிறான்..

புதுமாத்தளன் போரும் பாரதப் போரும் 18ம் நாளும் 18ம் திகதியும் முடிவடைந்த போர்களாகும். தற்போது மே 18ம் திகதியை துயர் சுமந்த நாளாக புலம் பெயர் தமிழர் உலகம் முழுதும் அனுட்டிக்கிறார்கள். இந்த மே 18 என்றதும் நமது எண்ணங்கள் 18ம் நாள் பாரதப்போருக்குள் நுழைகிறது.. இன்று பாரதப்போருக்குள் இருந்து ஓர் உன்னத சிந்தனையை முன் வைக்கிறோம்.

பாரதப்போர் முடிந்த சில காலத்தில் கலியுகம் பிறந்துவிடுகிறது.. அதாவது இன்றைய கலியுக மனிதன் பிறந்துவிடுகிறான்..

கலியுகம் பிறந்த அந்த ஒற்றை நிமிடத்து நிகழ்வு இதுதான்…

பாண்டவர்களில் மூத்தவனாகிய உதிஸ்டிரன ஆகிய தர்மன் நல்லாட்சி நடாத்திக் கொண்டிருக்கிறான்…

அப்போது, அண்ணா கலியன் பிறந்துவிட்டான்..! , என்றபடி அர்ச்சுனன் துடித்துப் பதைத்து, வியர்த்து விறுவிறுத்து ஓடி வருகிறான்.

அன்றைய தினம் யாரோ ஒரு தாயின் வயிற்றில் இருந்து, தலைப்பக்கமாக ஒரு பிள்ளை பிறந்துவிட்டது. தலையால் பிறக்கும் மனிதனை உலகத்தில் யாராலுமே திருத்த முடியாது என்பதால் அவனுடைய பிறப்பே கலியுகத்தின் பிறப்பு என்று சொல்ல அர்ச்சனன் ஓடி வந்தான்.

அதற்கு முன் கால்புறமாக மனிதன் தாயின் வயிற்றில் இருந்து பிறந்தான் என்பது கருத்து..

ஓடி வந்தவன் அந்த அவசரத்தில் தோளில் இருந்த சால்வையை மரியாதையாக எடுத்து இடுப்பில் கட்டவும், காலில் இருந்த செருப்பை வாசலிலேயே கழற்றவும் மறந்து அண்ணன் முன் வந்து நின்றுவிட்டான்.

உதிர்ஸ்டிரனாகிய தர்மர் அவனுடைய கால்களைப் பார்க்கிறார்.. அங்கே கழற்றப்படாத செருப்பு…

அருச்சுனனின் விரல்கள் துடிக்கின்றன.. ஐயோ.. என்று நாக்கைக் கடித்துக் கொள்கிறான்…

அதே வேகத்தில் அவன் தோள்களைப் பார்க்கிறார்.. அங்கே சால்வை..

அருச்சுனன் அங்கமெல்லாம் துடிதுடிக்க அவசரமாகவும், சங்கடமாகவும் சால்வையை எடுத்து இடுப்பில் கட்டுகிறான்..

தர்மன் சிரிக்கிறான்..

, தம்பீ.. கலியன் எங்கோ பிறக்கவில்லை.. என் வீட்டிலேயே பிறந்துவிட்டானே.. , என்று செருப்பையும், சால்வையையும் காட்டுகிறான்..

அவ்வளவுதான் அதற்குமேல் அவன் எதுவுமே பேசவில்லை..

அன்றே.. அக்கணமே.. அந்த அவலத்தைத் திரும்பிப் பார்க்காமல் ஆட்சியை விடுத்து, நாட்டைவிட்டு வெளியேற முடிவு செய்தான்..

தர்மனும் அவனுடைய நான்கு சகோதரரும், பாஞ்சாலியும் இமயமலை நோக்கி நடந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்போது வழியில் முதலாவதாக பாஞ்சாலி மலைச்சாரலில் விழுந்து மடிகிறாள்..

திரும்பிப் பார்த்த கடைசித் தம்பி சகாதேவன்.. பலத்த குரலில் , அண்ணா ..! பாஞ்சாலி இறந்துவிட்டாள் ! , என்கிறான்…

, திரும்பிப் பார்க்காதே .. நட..! , தர்மன் ஆணையிடுகிறான்..

அதன் பின் மலைச்சாரலில் ஒவ்வொருவராக வீழ்ந்து மடிகிறார்கள்…

தர்மனோ திரும்பிப் பார்க்காமலே தொடர்ந்து நடக்கிறான்…

திரும்பிப் பார்க்காமலே நடந்த தர்மனே இறுதியில் சுவர்க்கம் செல்லும் புஸ்பக விமானத்தைத் தொடுகிறான் என்று முடிகிறது கதை…

திரும்பிப் பார்க்காதே..!

இது மாபெரும் தத்துவமாகும்..

இதுபோலத்தான் ஆதி காலத்தில் மனிதன் கடல் வழியாக தூரச் சென்றால்.. கடலும் வானமும் சங்கமிக்கும் இடத்தில் உள்ள பாதாளத்தில் விழுந்து தொலைந்துவிடுவேன் என்று பயந்து நடுங்கினான்..

இதனால் எப்போதுமே தனது படகில் ஒரு கயிற்றைக் கட்டிக்கொண்டே கடலில் பயணித்தான்..

அவன் அச்சத்தின் காரணமாகவும், தனது குடும்பத்தையும் உறவுகளையும் பிரிய மனமில்லாமலும் கயிற்றினால் கட்டிக் கொண்டு, மட்டுப்படுத்தப்பட்ட பயணங்களை மேற் கொண்டான்..

அவர்களில் இருந்து ஒரு மனிதன் வெளிவந்தான்.. அவன்தான் மகலன்..

ஒரு நாள் அவன் , திரும்பிப் பார்க்காதே.. !, என்று உரத்துக் குரலிட்டான்..

யாருமே அவன் பேச்சைக் கேட்கவில்லை..

தன் கப்பலில் இருந்த கயிற்றின் மீது ஒரு கோடரியைப் போட்டான்.. கயிறு அறுந்தது..

கப்பலில் இருந்த அனைவரும் பயத்தால் ஓலமிட்டார்கள்…

திரும்பிப் பார்க்காதே.. என்றபடியே எதிரேயுள்ள கடலை நோக்கி துணிச்சலுடன் முன்னேறினான்..

ஆம் !

அன்று திரும்பிப் பார்க்காமல் புறப்பட்ட மகலனே.. கப்பலில் புறப்பட்டு உலகத்தை முதல் தடவையாக சுற்றிவந்து, உலக சாதனை படைத்தான்..

திரும்பிப்பார்த்தவனுக்கோ கடலின் முடிவு பாதாளமாகத் தெரிந்தது..

திரும்பிப்பார்க்காமல் இலக்கை நோக்கி நடந்தவனுக்கோ உலகமே உருண்டையாகி காலடியில் கிடந்தது..

இனி புதுமாத்தளன் போவோம்..

நீதியற்ற முறையில் நடாத்தப்பட்ட புதுமாத்தளன் போரே கலியனுக்கெல்லாம் கலியன் பிறந்த தினமாகும்…

திரும்பிப் பார்க்கதே என்று கூறி பிரபாகரன் நடந்த தினமும் அதுதான்..

பிரபாகரன் போல நீயும் திரும்பிப் பார்க்காதே உன் இலக்கை நோக்கி நட…

உன் எதிரில் இருப்பது கடலின் முடிவல்ல.. உன்னை அழிக்கும் பாதாளப் பெருவெளியல்ல..

உன் கண்ணீரைத் துடைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் நட..

வெற்றி உனது கையில் வரும்..

அதற்கு முன் கொஞ்சம் நில்..

உலகத்தின் பாச பந்தங்களை அறுத்துக் கொண்டு.. அமைதிப் பெரு வெளிக்குள் நுழை..

கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டுப்பார்..

பிரபாகரன் திரும்பிப் பார்க்காமல் நடந்து கொண்டிருக்கும் காலடி ஓசைகள் உன் காதுகளில் கேட்கும்..

திரும்பிப் பார்க்காதே…நட..

No comments:

Post a Comment