Monday, 3 May 2010

புதுமாத்தளனிற்குள் புதைந்துள்ள புதுமை - 1



புலம் பெயர் தமிழ் மக்களில் பலர் புதுமாத்தளனில் நடைபெற்ற தமிழின படுகொலைகளின் கவலைகளை மறக்கவில்லை. அவர்களின் தார்மீகக் கோபம் அணையாத நெருப்பாகவே இருந்து வருகிறது. வரும் மே 18 புதுமாத்தளன் துயர் சுமந்த ஓராண்டு நினைவு வருகிறது.

புயலுக்குள் புதுமை கண்ட புகழ் மன்னன் பாரி.

சங்க காலத்தில் புகழ் பெற்ற மன்னன் பாரியை அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. புயல் காற்றில் சிக்குண்ட முல்லைக் கொடிக்கு தன் தேரையே கொடுத்து உலகப் புகழ் பெற்றவனே பாரியாகும்.

அடடா நமது கொடை வள்ளல் பாரி ஒரு முல்லைக் கொடிக்காக எவ்வளவு இரங்கியிருக்கிறான் என்ற கோணத்தில்தான் இதுவரை நாம் பாரி கதையை படித்து வருகிறோம். ஆனால் அதற்கும் அப்பால் பாரி கதையில் பல புதுமைகள் இருக்கின்றன இதோ அதில் ஒன்று..

புயல் காற்று வீசுகிறது.. யாருமற்ற புறம்பு மலையை அண்டிய பொட்டல் வெளியில் ஒரு முல்லைக்கொடி ஆதரவின்றி வட்டமாகச் சுழல்கிறது.. சொற்ப நேரத்தில் அது கொடுங்காற்றில் துண்டு துண்டாய் அறுபட்டு சிதறிப் பறக்கப்போகிறது.

பக்கத்தில் பாரி அந்தக் கொடிய காட்சியைப் பார்த்தபடி அவன் சிந்திக்கிறான்…

உலகத்தின் சக்தியெல்லாம் ஒன்று திரண்டு அந்த வெளியில் பெருங்காற்றாக வீசுவதை உணர்கிறான். இந்தக் காற்றை நிறுத்தும் வலு நமக்கு இருக்கிறதா என்று சிந்திக்கிறான்.

இல்லை.. அங்கு வீசிக்கொண்டிருக்கும் புயல் காற்று மனிதசக்திக்கு அப்பாற்பட்டது யாராலுமே நிறுத்த முடியாதது..

என்ன செய்யலாம்…

ஓரெயொரு நொடி..

அவன் மூளை அபாரமாக வேலை செய்கிறது…

படீர்… மூளையில் ஓர் அதிர்வு…

மகத்தான அதிசயம் ஒன்று அந்த ஆபத்தில் மறைந்திருப்பதை சட்டெனக் கண்டு கொண்டான்.

உலகத்தின் பெருமூச்சாய் வீசும் அந்தக் காற்றுக்குள்தான் உலகப்புகழ் பெறும் இரகசியம் புதைந்து கிடப்பதை கண்டு கொள்கிறான்.

ஒரேநொடி…

உடனடியாக தனது தேரை விட்டுச் சரேலென இறங்குகிறான்…

முல்லைக் கொடியின் முன்னால் அதை நிறுத்துகிறான்.. மெல்லெனக் கொடியை எடுத்து தேரில் படர விடுகிறான்…

முல்லைக் கொடிக்கு தேரைக் கொடுத்த உலகப்புகழைப் பெறும் உன்னதம் அந்தப் புயலுக்குள்தான் புதைந்து கிடக்கிறது என்பதைக் கண்டு கொள்கிறான்.

இரண்டாயிரமாண்டு அழியாப் புகழைப் பெற இயேசுநாதர் சிலுவை சுமந்து முள் முடி தரித்தார்..

எகிப்தியர்கள் மாடாய் முறிந்து, ஓடாய் இளைத்து பிரமிட்டுக்களை அமைத்து உலகப் புகழ் பெற்றார்கள்.

ஆனால் பாரியோ ஒரு தேருடன் இரண்டாயிரம் ஆண்டுப் புகழை ஒரே நொடியில் பெற்றுக் கொண்டான்..

இனி சிந்தனைக்கு வருவோம்…

புயல் ஏன் வந்தது ?

முல்லைக்கொடி ஏன் உயிருக்குப் போராடியது..?

அந்த வழியாக பாரி மட்டும் ஏன் வரவேண்டும்..?

மூன்று நிகழ்வுகளையும் ஒன்றாக்கிப் பாருங்கள் உலகப் புகழ் பெறும் உன்னதம் தன்னை அடையாளம் காட்ட உருவாக்கிய மூன்று பெரும் காட்சிகள்தான் இவை என்பதை உணர்வீர்கள்..

முல்லைக் கொடிக்கு தேரைக் கொடுத்ததோ அதன் உயிரைக்காப்பாற்றியதோ இங்கு புதுமையல்ல…

புயல் வந்தபோது கவலை கொள்ளாமல் அதற்குள் இருந்த புதுமையைக் கண்டு பிடித்து உலகப் புகழ் பெற்றதுதான் அதில் உள்ள உன்னதமான செய்தியாகும்.

வாய்ப்புக்கள் பிறப்பிலிருந்தும் வரலாம் இறப்பில் இருந்தும் வரலாம்.. ஆனால் அது ஒரு முறைதான் வரும்.. அது வரும்போதே பற்றிக் கொண்டால் கவலைகள் பறக்கும் உலகப்புகழ் கைகளில் கிடைக்கும்..

இது பாரி முல்லைக்கொடிக்கு தேர் கொடுத்த கதையல்ல அவன் உலகப் புகழ் பெற்ற கதை.

இனி புதுமாத்தளனுக்கு வாருங்கள்…

புதுமாத்தளன்தான் அன்றைய புறம்புமலைப் பொட்டல் வெளி…

முல்லைக் கொடி போலத்தான் புயலில் சிக்குண்ட நமது மக்கள்..

புயல் காற்றுத்தான் அவர்களை அழிக்க ஒன்று திரண்ட உலக சமுதாயம்…

அன்று தேருடன் வந்த பாரி போலத்தான் புலம் பெயர் தமிழ் மக்களாகிய உங்களின் நிலை..

இந்த நான்கு முனைகளையும் இணைத்துப் பாருங்கள்..

பாரிபோல உங்கள் மூளையை நாற்புறமும் சுழல விடுங்கள்..

இன்று நீங்கள் வெறும் கண்ணீர் விடுவதைப் போல அன்று பாரியும் வெற்றுக் கண்ணீர்விட்டிருந்தால் விளைவு என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்…

இன்று உங்கள் அறிவையும், கண்களையும் மறைத்து நிற்கும் கண்ணீர் போல பாரியின் கண்களும், அறிவும் கண்ணீரில் மறைந்து போயிருக்கும்…

ஆம்…

புதுமாத்தளன் என்ற போர் நீங்கள் கவலைப்படுவதற்காக வரவில்லை என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்..

புலம் பெயர் தமிழன் உலகப் புகழ் பெறும் உன்னதம் அதற்குள்தான் புதைந்து கிடக்கிறது என்ற உன்னதத்தைக் கண்டு பிடிக்க காலம் உங்கள் முன் ஒரு சவாலை விட்டிருக்கிறது..

புலம் பெயர் வாழ்வையும், பொருளாதாரத் தேரையும், தாயகத்தில் புயலையும் ஏன் படைத்தான் இறைவன் என்றும் எண்ணிப் பாருங்கள்…

பொங்கி அழவேண்டிய இடமல்ல புதுமாத்தளன்…

பொங்கி எழவேண்டிய இடமே புதுமாத்தளன்..

எண்ணங்களை மாற்றுங்கள் புதுமாத்தளன் என்றால் புதிய மாற்றங்களை செய்யுங்கள் என்பதுதான் பொருளாகும்..புதுமை பெறுங்கள்…

No comments:

Post a Comment