Thursday 8 July 2010

சிறிலங்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாது விசாரணைகளை மேற்கொள்க! ஐ.நா.விடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள்!


சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பணிமனை சிறிலங்கா ஜனாதிபதிக்கு நெருக்கமானதொரு மூத்த அமைச்சர் ஒருவரின் தலைமையில் முற்றுகை செய்யப்பட்டமையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டனம் செய்கிறது. இந்த மூர்க்கமான முற்றுகையினை சிறிலங்கா பொலீசார் கையாண்ட முறை சிறிலங்கா அரசுக்கு எதிரான அமைதியான எதிர்ப்புப் போராட்டங்களைக் கையாளும் முறைக்கு மிகவும் மாறுபட்டதாகவும் உள்ளது.

சிறிலங்கா ஆயுதப்படையினர் பல ஆயிரக்கணக்கான தமிழர்களைத் தொடர்ந்தும் தடுப்பு முகாம்களில் வைத்திருக்கும் இவ் வேளையில் இவர்கள் தொடர்பாக அக்கறை கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்தை பொறுப்பான முறையில் நடந்து கொள்ளுமாறும், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவினை சிறிலங்காவினுள் அனுமதிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் சுமூகமான செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இடித்துரைக்கிறது. இவ்வாறு அச்சுறுத்தல்களையும் பயமுறுத்தல்களையும் செய்வதன் ஊடாக தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை, போர் மற்றும் மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் தப்பித்துக் கொள்ள முடியாது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இத்தகைய பணய அரசியலுக்கு அடிபணியாது, வகுக்கப்பட்ட திட்டத்துற்கு அமைய இனப்படுகொலை, போர் மற்றும் மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைத் தொடருமாறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையை வேண்டிக் கொள்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழுவுக்கு உரிய உதவிகளையும், ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தயாராக உள்ளது.

- விசுவநாதன் ருத்ரகுமாரன்
இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர்.

No comments:

Post a Comment