Tuesday, 11 May 2010

அடங்காது… தமிழீழ தாகம்


“சமாதானத்துக்கான என் ஏக்கம் மறைந்து விட்டது. நான் என்ன விரும்புகிறேன் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது நான் மீண்டும் அறிந்து கொண்டேன். புரட்சியின் மைந்தன் நான். என் அன்னை தன் மந்திர சக்தி படைத்த ஆசியை அருளிய அந்த மாய ஆயுதங்களை நான் மீண்டும் பற்றிப் பிடிக்கிறேன்.

“மலர்கள்!… மலர்கள்!… வாழ்வா சாவா என நிர்ணயிக்கும் இப்போருக்காக நான் முடி சூட்டிக் கொள்கிறேன். யாழையும் என்னிடம் கொடுங்கள் நான் போர் பரணி பாட வேண்டும். …என் உள்ளம், உடல், உதிரம் எல்லாம் இன்பம்; இசைப்பண்; தீப்பிழம்பு!.. இந்தக் ‘கிரேக்க’ நெருப்பை எந்தத் தண்ணீரும் அணைத்து விடாது! …என்னால் இப்போது தூங்கவே முடியவில்லை. பேரெழுச்சி பெற்ற என் உள்ளத்திலே வினோதமான காட்சிகள் பளிச்சிட்டு ஓடுகின்றன. எனது அவயங்களே பூதாகரமாய் நீண்டு, நான் ராட்சஸக் கால்களுடன் ஜெர்மனிக்கும், பிரான்சுக்கும் மறுபடியும் திரும்பி ஜெர்மனிக்கும் ஓடிச் செல்வது போல் தோன்றுகிறது. ஆம். கடந்த இரவு நான் இப்படி எல்லா ஜெர்மன் மாநிலங்கள் வழியாகவும் ஓடி, என்னுடைய நண்பர்களின் வீட்டு வாசல்களைத் தட்டி அந்த நல்லவர்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பியது போல நினைவு கூர்கிறேன்.

அருவெறுப்பாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த கொழுத்த அற்பர்கள் பலரை நான் விலா எலும்பில் உதைத்து விழிப்படையச் செய்தபோது அவர்கள் கொட்டாவி விட்டுக் கொண்டே கேட்டார்கள்-” “இப்போது என்ன நேரம்?”

“நேரமா – அன்பு நண்பர்களே பாரீஸில் சேவல் கூவி விட்டது. அவ்வளவுதான் எனக்குத் தெரியும்!” ஹைனே என்ற கவிஞன் தமது வெற்றி பேரோசையை இவ்வாறு பதிவு செய்கிறார்.

நாம் வெற்றியை நோக்கி நகர்ந்துவிட்டோம். சிலரின் உறக்கம் நமது வெற்றியை சீரழித்துவிடலாம். எதிரியினிடம் அதிநவீன கருவிகள் இருக்கலாம். எம்மை அடைத்து பூட்டி வைக்க சிறைச்சாலை இருக்கலாம். எமது உடலை தொலைக்க துப்பாக்கி முனை நீளலாம். ஆனால் எமது கனவை அவனால் ஒன்றும் செய்ய முடியாது. எமது தேவையை அவனால் கொன்றொழிக்க முடியாது. என் உயிர் வெறும் காற்றாய் கறைந்து போகலாம். ஆனால் எமது கனவு வெற்றியின் கோபுரத்திலே சம்மனமிட்டு அமர்ந்திருக்கும் என்பதை நமது பகைவர்களுக்கு பதிவு செய்யும் காலத்தில் நாம் இருக்கிறோம். நாம் இழந்த இழப்புகளிலிருந்து பெற்ற மதிப்பீடுகளை இப்பொழுது மீண்டுமாய் எடுத்தாளப் போகிறோம்.

எம் இனிய உறவுகளே! நம் பகைவன் நமது மாவீரர்களின் திருமேனியை வெளியில் எடுத்து வீசி எறிகிறார். அந்த எலும்புக்கூட்டு துகள்களை உங்கள் இதயத்தில் புதைத்து வையுங்கள். அவர்களின் வீர உணர்வுகளை உங்கள் மனங்களில் பதிவு செய்யுங்கள். அவர்கள் ஆற்றிய கடமையை உங்கள் நினைவுகளில் புதைத்து வையுங்கள். பகைவனின் பகைக்கு எதிராக களமாடிய நிகழ்வை நமக்கு நினைவூட்டத்தான் நமது பகைவனே நமது மாவீரர்களின் உடல்களை வெளியில் எடுத்து மதிப்பீடு செய்கிறான். மதி மயங்கிப்போயிருக்கும் நமக்கு அவன் மீண்டுமாய் உணர்ச்சியூட்டுகிறான். தோல்வியிலிருந்து நாம் பெற்ற பாடத்தை செயல்படுத்த நம்மை அழைக்கிறார். ஆயிரக்கணக்கான எமது உறவுகள் அலறி அடித்து, துடிதுடித்து இறந்ததை நினைவூட்ட அவன் நம்மை தயார் செய்கிறான். எந்த நிலையிலும் நமது வாழ்வு வீழ்ந்து போகாது. மறக்க வேண்டாம். எதிரிகளின் எந்த ஒரு கடும் கருவியும் நமது மனங்களை சிதைக்க வல்லதல்ல. நமது கனவுகளை புதைக்க வல்லதல்ல. நமது எழுச்சியை உடைக்க வல்லதல்ல.

ஆகவே, உணர்வுகளை ஒன்றிணைப்போம். அடங்காத மனங்களை மீண்டும் மீண்டுமாய் தீமூட்டி எறிய வைப்போம். எமக்கான நாட்டை கட்டி அமைக்கும்வரை கயவர்களுக்கெதிரான நமது சமர் ஓயாது என்பதை சங்கே என முழங்குவோம். நம்மை சதிராடியதை அவன் விழா எடுத்து கொண்டாடுகிறான். அந்த சதிகார படையெடுப்பை முறியடிக்க நாம் மீண்டுமாய் படை அமைக்கும் காலத்திற்கு முன்னேறி வந்திருக்கின்றோம். நமக்கான கனவு எப்போதும் சிதைவடையாது என்பதை அந்த சிங்கள பாசிச அரசின் காதுகளுக்கு வேகமாய் அறிவிக்க நம்மை தயார் படுத்துவோம். எந்த நிலையிலும், யாராலும் நமது விடுதலை தாகத்தை தீர்க்க முடியாது என்பதை இந்த நயவஞ்சக நாய்களுக்கு புரிய வைப்போம். எம்மை எத்தனை முறை வீழ்த்த முடியும். எமது மண்ணை எங்கே கொண்டுபோய் புதைக்க முடியும். எமக்கான மண் அங்கேதானே கிடக்கும். எமக்கான விடுதலை என் மனதில்தானே விரியும். எம் மண்ணையும் எம் விடுதலை உணர்வையும் நம் பகைவன் எங்கே கொண்டுபோய் புதைப்பான். என்ன கருவி கொண்டு அழிப்பான்.

இந்தியாவை துணைக்கு அழைப்பானா? சீனாவை பக்கம் கொண்டு வருவானா? எத்தனை கொடூர கரங்கள் வந்தாலும், நமது கனவை அழித்தொழிக்க எந்த ஆதிக்க வெறியால் முடியும். ஆகவே, எமது இனிய உறவுகளை சோர்ந்து போகும் காலத்திலிருந்து நம் மீண்டு வந்திருக்கின்றோம். நமக்கான ஒரு நாடு, நமக்கான ஒரு மண். இது தீராத தாகம். நமது தேசிய தலைவர் இதற்கான ஒரு வார்த்தையை உருவாக்க வேண்டும் என்று உறுபோட்டு சிந்தித்து, உருவாக்கிய வார்த்தை தான் தமிழர்களின் தாகம், தமிழீழ தாயகம். இந்த வார்த்தையிலிருந்து நாம் உயிருள்ள ஆன்மாவை புரிந்து கொள்வோம். அதை நமது தூய உள்ளத்தால் அலங்கரிப்போம். நமக்கான தாயகம் என்பது எந்த நிலையிலும் எம்மை விட்டு அகன்றுவிடக்கூடாது. எமக்கான தாயகம் என்ற சிந்தனை நம் மனங்களை விட்டு மாறிவிடக் கூடாது. நமது தேசிய இயக்கம் ஆற்றலோடு தமிழீழ மண்ணில் இயங்கிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் தேசிய தலைவரை துதித்த துடிபாடிகள் எல்லாம் இன்று துவண்டுபோய் நமது துரோக கூட்டத்திலே இணைந்திருக்கிறார்கள்.

ஹைனே கூறுவதைப்போல, இப்போது தமிழீழத்தில் சேவல் கூவிவிட்டது. அவ்வளவு தான். நாம் புறப்பட்டு செயலாற்ற வேண்டும். என்ன நேரம் என்று கேட்டுக் கொண்டிருக்க இது நேரமல்ல. நமது விடுதலையை மறந்து உறங்கிக் கொண்டிருக்க இது காலமல்ல. நமக்கான அடையாளத்தை இழந்து வாழவா நாம் இந்த மண்ணில் பிறந்தோம். நமக்கான மொழியை இழந்து பேசவா நாம் இந்த மண்ணிற்கு வந்தோம். நமக்காக தமது உயிர், உடல் அனைத்தையும் முழுமையாய் அர்ப்பணித்த அந்த வீரமறவர்களின் உணர்வுகளுக்கு, அவர்களின் ஈகங்களுக்கு நன்றியுடையவர்களாக நாம் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவர்கள் தம்மை இழந்தது தமக்காக அல்ல, தம்மை இழந்தது நமக்காக என்கின்ற எண்ணம் நம்மிடம் மேலோங்கி நிற்கட்டும். எந்த இடர் வந்தாலும் அதை தாங்கி தங்க மகனாய் தகித்த எமது தேசிய தலைவர், தமிழீழ மண்ணின் தலைமை ஆட்சியாளனாய் சிரித்து வரவேண்டும்.

உலகெங்கும் ஏதிலிகள் என்கின்ற பட்டப்பெயர் நம்மை விட்டு நீங்கி ஒழிய வேண்டும். ஆயிரம் தான் நாம் பஞ்சணையில் உறங்கினாலும், தாய் மடியில் உறங்கும் சுகம் தனித்தானே. எத்தனை மகிழ்வோடு நாம் புலங்களில் வாழ்ந்தாலும், தாய் மண்ணில் உறங்கும் சுகத்தை நினைத்துப் பாருங்கள். நமது உறவுகளை தட்டி எழுப்புங்கள். தயார் படுத்துங்கள். நமக்கான விடுதலைக்கு நாம் தான் போராட வேண்டும். விடுதலை என்பது யாசித்து பெறுவதல்ல. அது இழந்து பெறுவது. நம்மை இழப்பதின் மூலமே நாம் விடுதலையைப் பெற முடியும். நம்மை இழப்பதின் மூலமே நமது எதிர்கால தலைமுறையின் நம்பிக்கையை படைத்தளிக்க முடியும். எந்த நிலையிலும் தளரா உறுதியுடன் தனிநிகர் மனதோடு வாருங்கள். களத்திற்கு வாருங்கள். இந்த களம் நமக்கான களம். இந்த களம், நமது மானத்தை காக்கும் களம். இந்த களம், நமது உரிமையை மீட்டெடுக்கும் களம். மடிவதிலிருந்தே உயிர் பெறுகிறோம் என்பதை பகைவனுக்கு பாடமாக சொல்வோம். அடங்காத தாகத்தை மேலும் மேலும் மெருகூட்டுவோம். அடங்காத தாகத்தை உணர்வுகளிலும், உடலிலும் உளவியல் கட்டுமானங்களிலும் கூடுதலாய் வார்த்தெடுப்போம்.

வளம் கொழிக்கும் நம் தேசம் கட்ட, நம் உடலையும், உயிரையும் உரமாக்குவோம். நமக்கான ஒரு நாடமைக்க நமது எல்லா இன்பங்களையும் அழித்தொழிப்போம். நம் கண் முன்னே விரிந்திருக்கும் ஒரே காட்சி நமக்கான நாடு. நம் கண் முன்னே தோன்றி தோன்றி மறையும் நமது உறவுகள் செத்து துடித்த காட்சியிலிருந்து நாம் கற்றறிந்தது, நமக்கான நாடு கிடைக்கும்வரை நம்மை விட்டு இந்த தீங்கு ஒழியாது என்பதுதான். பகைவர்களுக்கெதிராக படையாளர்களாய் நாம் எதிர்களத்தில் நிற்போம். நம்மை முறியடிக்க இந்த உலகில் எந்த ஆற்றலுக்கும் ஆற்றல் இல்லை. நம்மை முறியடிக்க இந்த உலகில் எந்த வல்லரசுக்கும் தகுதி இல்லை. நாம் நமது விடுதலைக்காய் இழந்ததை போன்று இந்த நவீன காலத்தில் வேறு எந்த இனமும் இழந்திருக்காது. நாம் அளவில்லா ஆற்றல் வாய்ந்த தாய் மண்ணையும், தாய் மொழியையும் தவமாய் கொண்டிருந்து வரமாக விடுதலையை வேண்டி நின்ற ஒரு புண்ணிய தலைவனை பெற்றிருக்கிறோம்.

அந்த தலைவனின் தலைமையில் ஆட்சி அமைப்பது அவசியம். அத்தலைவனின் காலத்தில் நாம் உரிமை பெறுவது கட்டாயம். அடங்க மறுப்போம். அதுவரை தொடர்ந்து போராடுவோம். நமக்கான நாடு மே 18 இதோ மிக அருகில். கொத்துக்கொத்தாய் எமது இனம் செத்துப்போன நாள். அந்த வீர ஈகிகளின் சாம்பலை எடுத்து சபதம் செய்வோம். நீ மடிந்த இந்த மண், எமது விடுதலைக்காக சொந்த உடலையே எரித்து எருவாக்கிக் கொண்ட இந்த மண், நீ விரும்பிய படியே விடுதலையோடு சிலிர்த்தெழும் என்பதை அந்த வீர மறவர்களுக்கு முன்னால் சொல்லி மகிழ்வோம். அதுவரை அடங்காது நமது தாகம், தமிழீழம் பெறும் வரை.

- கண்மணி

No comments:

Post a Comment