Welcome to this blogg. More than 80 million tamil people live in many countries across distant seas. There is no state without a Tamil - but there is no state for the tamils. Velkommen til denne bloggen. Her vil jeg oppdatere nyheter om tamiler og deres kamp for et selvstyre både på Sri Lanka og utenfor øya. என்னுடைய இந்த இணைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி: தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கென்று ஓர் நாடில்லை
Tuesday, 11 May 2010
தமிழீழத்தை மீட்டெடுப்போம்
மனித இனத்தின் தலைவிதி நிர்ணயிக்கப்படுவது அரசியலால்தான். அதில் பங்கு கொள்ளாமல் இருப்பது சமூக நலனை பொறுப்பற்ற முறையில் புறக்கணிப்பதாகாதா என ஷில்லர் இச்சமூகத்தைப் பார்த்து கேட்டான். இது, இந்த நொடி வரை நம்மைப்பார்த்துக் கேட்கும் கேள்வியாகவே இருக்கிறது. நாம் அரசியல் நெருக்கடியால் அடிமை வாழ்வுக்கு தள்ளப்பட்டோம். அதே அரசியலால்தான் அதை வெற்றிக் கொள்ள வேண்டும். இந்த அரசியல் என்பது ஏதோ ஆர்ப்பாட்டம், உண்ணாநிலை, ஊர்வலம் என்பதிலிருந்து கடந்து, கருவியை கரத்தில் ஏந்தும் நிலைக்கு வந்துநின்றது. எப்படி அரசியல் தீர்வுக்காக கருவியை கரத்தில் ஏந்தலாம் என்று மிக சுத்தமான அகிம்சாவாதிகள் அலறுவது நமது காதுகளில் தொடர்ந்து கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
மாமனிதன் மார்க்ஸ் சொன்னார், “அரசியல் கலக்காத வன்முறை போக்கிலித்தனம்” என. ஆக, அரசியல் கலந்த வன்முறை என்பது ஒரு அரசியல் போராட்டம்தான். அதைவிட மேலாக இன்னொன்றை சொல்ல வேண்டும் என்றால், எதிரிக்கு புரியும் மொழியில் பேசுவது. நமது எதிரி கருவி மொழியில் பேசும்போது, நாம் ஊர்வலம் நடத்திக் கொண்டிருக்க முடியாது. காரணம், நம்முடைய மொழி நிச்சயமாக அவனுக்கு புரியவும் புரியாது. இதைத்தான் தமிழீழ அரசியலில் நாம் கண்டோம். தமிழீழ மக்கள் அரசியல் ரீதியாக போராட்ட களத்திற்கு வந்தபோது அவர்கள் தம்மை சாதாரண எதிரிக்கு புரியாத மொழியில்தான் அவர்களின் போராட்டங்களை வடிமைத்தார்கள். அந்த மொழி எதிரிக்கு புரியாது என்பதை புரிந்து கொண்ட ஒரு போராட்ட களத்தின் தத்துவ நாயகனாக நமது தேசிய தலைவர் களத்திற்கு வந்தார். அவர் அவன் மொழியிலேயே அவனோடு பேசினார். அப்போதுதான் அவனுக்கு புரிந்தது, அவர்களுக்கும் அந்த மொழி தெரியும் என.
இந்த அரசியல் போராட்டத்தில் நாம் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டோம். பல கொடுமைகளை தாங்கிக் கொண்டோம். எமது தாயக உறவுகள் லட்சக்கணக்கில் உலக நாடுகள் எங்கும் ஏதிலிகள் வாழ்க்கை வாழ தொடங்கினார்கள். அதோடல்லாமல் சொந்த மண்ணிலேயே எமது மக்கள் ஏதிலிகளாக்கப்பட்டார்கள். சொந்த மண்ணிலேயே எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி வரலாற்றில் இதுவரை நிகழ்த்தப்படாத அளவில் மிகப்பெரிய அக்கிரமம் நிறைந்ததாக இருந்தது. இதிலிருந்து மீட்க வேண்டும், மீட்கப்பட வேண்டும் என்பது நமது விருப்பம் இல்லை. இந்த விடுதலை என்பது விருப்பத்தை தாண்டிய தேவையாக இருக்கிறது. இந்த விடுதலை நமது விருப்பத்திற்காக போராடி பெரும் ஒரு கருத்தியல் அல்ல.
இது கருத்தியலை தாண்டிய எதார்த்தம். ஆகவேதான் இதில் உயிரிழப்புகள் கூடுதலாக இருந்தது. குருதி சிந்தல் அந்த மண்ணை சிவப்பாக்கியது. ஆனாலும் எண்ணங்களில் இருந்த ஏக்கங்களும், ஏக்கங்களில் விளைந்த தீவிரமும், தீவிரத்தில் விளைந்த வினையும் நம்மை உலகெங்கும் அடையாளப்படுத்திய ஒரு மாபெரும் நிகழ்வாக பதிவு செய்யப்பட்டது. உலகெங்கும் இப்படி ஒரு படுபாதக செயலை கண்டு, காணாமல் இருந்த பெருங்கொடுமை உலகெங்கும் இதுவரை நிகழாத ஒரு செயலாக இருக்கிறது. இதை மாற்றி அமைக்க வேண்டும். இதை மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்பதை நாம் ஒவ்வொரு விநாடியும் சிந்திக்க வேண்டும். கடந்த ஆண்டு இந்த நேரத்தில் எல்லாம் நம்முடைய கதறல் சத்தத்தை கேட்க எந்த செவிகளுக்கும் நேரம் இல்லை. நமது கொலையை தடுக்க எந்த கரங்களுக்கும் விருப்பம் இல்லை.
நாம் எந்த ஆற்றலிடம் மண்ணிடியிட்டோமோ அவர்கள்தான் நம் நெற்றியிலே சுட்டுத்தள்ளினார்கள். எந்த நாட்டிடம் நாம் உதவி கேட்டோமோ, அவர்கள்தான் எதிரியின் கரத்திலே கருவியை திணித்தார்கள்.நாம் எந்த நாட்டை நம்பி நம்மை ஒப்படைப்பதாக சொன்னோமோ அவர்கள்தான் பழிதீர்க்கும் வெறியோடு நம்மை, நமது இனத்தை கொன்றொழிக்க முனைப்புக் காட்டினார்கள். ஆனால் உலகமெல்லாம் அமைதியாக இருந்தது. ஒருவன் தன்னை சுற்றிலும் உள்ள மக்களிடமிருந்து ஒதுங்கி நிற்பது பொறுத்தமற்றது. பொறுத்துக் கொள்ள முடியாதது. அதை அனுமதிக்கமுடியாது” என்கின்ற தத்துவம் இங்கே பொய்யாய் போனது. உலக உறவுகள் உலகெங்கும் காப்பாற்றுங்கள் என அந்தந்த நாட்டு சாலைகளில் கூச்சலிட்டார்கள். அவர்கள் கடந்த ஆண்டில் பல மைல் தொலைவில் நடத்திய போராட்டங்கள் நன்மை விளைவிக்காமல் போகலாம்.
ஆனால் மிகக் குறைந்த தூரத்தில் உள்ள நமது தாயக உறவுகள் அமைதி காத்தார்களே, அதுதான் இந்த கொடுமையிலும் கொடுமை எந்த நிலையிலும் இதை எப்படி நினைத்தாலும் மாற்ற முடியாத மனஉளைச்சலை அழுத்தமாக வடுக்களாய் உருமாற்று செய்திருக்கிறது. அந்த சத்தத்தில் நாம் இன்னமும் உறக்கத்தை தொலைத்திருக்கிறோம். அந்த ஓலத்தில் இன்னமும் நாம் ஓய்வை மறந்திருக்கிறோம். குழந்தைகளும், முதியோர்களும் ஒன்றாக திரட்டப்பட்டு கொன்றொழித்த கொடுமைக்கு துணைபோன காந்தி தேசத்தை குறை சொல்வதா? சாலையில் நடக்கும்போது புழுக்களை மிதித்திடுவோம் என்பதற்காக பெருக்கி, கூட்டி செல்லும் புத்த தேசத்தை குறை சொல்வதா? இதில் எங்கேயும் குறை இல்லை. குறை நம்மிடம் தான் இருக்கிறது. இது நமக்கான அரசியல் அதிகாரம்.
இதை மீட்டெடுக்க நாம் கரம் இணைக்க வேண்டும் என்கின்ற ஒரு தார்மீக சிந்தனை நமக்குள் எழவில்லை. யாருக்கோ நிகழ்ந்ததைப் போன்று நாம் அமைதிகாத்தோம். சொந்த உறவுகள் செத்தொழிந்தது செய்தியானது. அதிலிருந்து நமது துடிப்பிற்கு பதிலாக, அனுதாபமே மேலோங்கி நின்றது. நமது உறவுகளின் இழப்பு நமக்கு துயருக்கு பதிலாக வெறும் வருத்தத்தையே வரவைத்தது. ஆனால் இதையெல்லாம் தாண்டிய ஒரு உணர்வு நம்மிடம் ஒட்டாமல் இருந்ததற்கு காரணம், அவர்கள் நமது உறவுகள் என்று கற்றுத்தர நமது தலைவர்கள் எந்த நேரத்திலும் தயாராக இல்லாததுதான். அவர்கள் யாரோ அல்ல, எமது சொந்தம் என்று சுட்டிக்காட்ட இவர்களுக்கு துணிச்சல் இல்லாதது தான்.
அரசியலில் பல்வேறு படிமங்கள், அடுக்குகள் இருக்கின்றன. ஆனால் துரோக அடுக்கைப் போன்று ஒரு கேடு நிலை எதுவும் இல்லை. எமது உறவுகள் ஒடுக்கப்பட்டதற்கும், அழிக்கப்பட்டதற்கும் அடிப்படை காரணம், இந்த துரோக அரசியல் தான். தமது உயர்வுக்காக, தமது உறவுகளை பலி கொடுக்கும் கேவலம் தாய் தமிழகத்தில் நடந்து முடிந்தது. சோனியாவின் முன் மண்டியிட்டு கிடந்த கேவலம் இங்கே காட்சிகளாய் மாறிநின்றது. இவனை அனுப்பு, அவனை அனுப்பு என்று குரலொளி தமிழகத்தை தாண்டி சென்றது. ஆனால், டெல்லிக்கு செல்வதற்கு முன்னாலேயே தடுக்கப்பட்டது. இவர் போவார், அவர் போவார் என்று நம்பிக்கையை பொய்யாய் சொல்லி நம் மனதிலே வளர்த்தார்கள். ஆனால் பொய் மனம் கொண்டவர்கள், நமது ரத்த சகதியில் திளைத்து, மந்திரி பதவிகளை பறித்தார்கள். திட்டமிட்டார்கள். தீர்மானம் நிறைவேற்றினார்கள். பதவி விலகல் என்றார்கள். ஆனால் ஒன்றுமே நிகழவில்லை. காரணம், எதிரிகளின் தோள்கள் இவர்களின் உறவு அழுத்தமாகிவிட்டது. நமது எதிரிகளே இவர்கள் நண்பர்களாக இணைந்துவிட்டார்கள்.
எதிரியோடு இணைந்து இவர்களும் துரோகிகளானார்கள். இந்த துரோகிகளின் திட்டத்தால்தான் நம் தோற்றோம் என்பதை வரலாறு ஆயிரம் ஆண்டுகளானாலும் வரலாறு மறக்காமல் பதிவு செய்யும். இயேசுவை பேசும் போதெல்லாம் யூதாஸ் பேசும் பொருளாக இருப்பதை போன்று, கட்டபொம்மை குறித்து பேசும் போதெல்லாம் எட்டப்பன் கருப்பொருளை இருப்பதை போன்று, நாம் தமிழீழ விடுதலை குறித்து, நமது தேசிய தலைவர் குறித்து எப்போதெல்லாம் பேசுகிறோமோ, அப்போதெல்லாம் இந்த துரோகிகளின் பெயர்களும் பட்டியலிடப்படும். எந்த காலத்திலும் இந்த வரலாற்றில் முடிவு என்பது நிரந்தரமானது அல்ல. தோல்வி என்பது நிலையானதும் அல்ல. ஆகவே நாம் அடைந்த தோல்விகளிலிருந்து கற்ற பாடமே நம்மை ஒரு புதிய படைப்பாற்றல் கொண்டவர்களாக மாற்றி இருக்கிறது. நம் மனமும், சிந்தனையும், செயல்திறனும் முற்றிலுமாய் புதிய மறுமலர்ச்சியுடன் நம்மை வெற்றி நோக்கி பயணிக்க உந்தித்தள்ளுகிறது. எந்த காலத்திலும் நாம் முடக்கப்படுவதில்லை என்பதை நம்முடைய செயல் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
நம்முடைய ஓட்டம் ஒரு இலக்கை நோக்கி என்பதை தீர்மானித்துவிட்டோம். ஆகவே, அதிலிருந்து எந்த நிலையிலும் நாம் மாற்றம் அடைய போவது கிடையாது. அதை அடையும்வரை நம்முடைய ஓட்டம் நிற்கப்போவதும் கிடையாது. காரணம் நாம் ஓடிக் கொண்டிருப்பது நமக்கான ஓட்டம் அல்ல. நாம் ஓடி, அந்த இலக்கை அடைவது நமக்காக அல்ல. நம்மை நம்பி அவர்கள் வாழ்வை ஒப்படைத்திருக்கும் நம் இனத்திற்காக. நம்மை நம்பி அவர்கள் மொழியை ஒப்படைத்திருக்கும் நம் இனத்திற்காக. நமது இனத்தின் பன்பாட்டை, கலை இலக்கியங்களை கட்டி காப்பதற்கான ஓட்டமாக இது இருக்கிறது. ஆகவே இதில் தொய்வு ஏற்பட நாம் அனுமதிக்கக்கூடாது. இந்த ஓட்டத்தில் நமது துணிச்சல், ஆற்றல், நம்பிக்கை, வைராக்கியம் கூட வேண்டுமே ஒழிய, ஒரு துளியும் குறையக்கூடாது.
எதிரி நம்மைப் பார்த்து பதைக்க வேண்டும். நாம் பழி தீர்க்கும் மனநிலையிலிருந்து பின்வாங்கக்கூடாது. எத்தனை பத்தாண்டுகள் ஆனாலும், பகைவனை பழிவாங்கியே தீருவோம் என்ற யூதர்களின் மனநிலை நமக்குள் ஆழமாக இருக்க வேண்டும். எத்தனை வயதானாலும் நமது எதிரிகளை நாம் பழிவாங்கியே தீர வேண்டும். இந்த உணர்வுதான் நம்மை, நமக்கான ஒரு நாட்டை அமைப்பதற்கு உறுதி படுத்தும். நமது எதிரிகள் சிங்கள நாட்டில் மட்டுமல்ல. இந்தியாவிலும் பரந்து விரிந்திருக்கிறார்கள். அவர்களையும் அழைத்துதான் நமது பழிதீர்க்கும் சிந்தனை அழுத்தமாக்கப்பட வேண்டும். ராசபக்சேவும், அவனது சகோதர்களும் மட்டுமல்ல, பொன்சேகவும் அவனது படைஅணிகளும் மட்டுமல்ல, சோனியாவும் மன்மோகனும் மட்டுமல்ல, தமிழ்நாட்டு காங்கிரசும், கருணாநிதியும் சேர்ந்துதான் நம்மை அழித்தொழித்தார்கள். இதை நாம் புரிந்து கொண்டு நமது செயலிலே தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்து ஓட வேண்டும். அப்போது நமக்கான வெற்றி உறுதியாக்கப்படும். தமிழீழம் மலரும். அதிலே நமது வாழ்வு உறுதியாகும். நமது எதிர்கால சந்ததி மகிழ்ச்சியோடு வலம் வரும். அதற்காய் நமது தேசிய தலைவரின் பாதையிலே நாம் தொடர்ந்து செல்வோம். தமிழீழத்தை மீட்டெடுப்போம்.
- கண்மணி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment