Sunday, 9 May 2010

மரணம் விதிகளை உடைக்கும்..


விதிப்படிதான் மரணங்கள் வரும் என்று பலர் கூறுவார்கள்.. ஆனால் அதே மரணங்களே விதிகளை உடைக்கும் என்பதை அவர்கள் தொடர்ந்து விளக்குவதில்லை..

இராமாயணத்தில் இராமனின் அம்பு பட்டு வீழ்கிறான் வாலி.. தன் மார்பில் தைத்த அம்பை உருவிப் படிக்கிறான்.. பாய்ந்திருப்பது இராமபாணம் என்பதை அறிந்து ஆச்சரியப்படுகிறான்..

தன் மரணம் விதிப்படி நடக்கவில்லை என்பதையும், அங்கு விதி உடைக்கப்பட்டுவிட்டதையும் கண்டு கொள்கிறான்..

அந்த நிகழ்வை கவிச்சக்கரவர்த்தி கம்பர் பாடும்போது.. வீரமன்று, விதியன்று மொய்மையின் வாரமன்று, நின் மண்ணினுக்கு என்னுடல் பாரமன்று, பழியன்று, பண்பொழிந்து இது என் செய்தவாறு நீ… என்று அந்தப் பாடல் போகும்…

, விதியன்று..! , என்ற சொல்லை வாலியின் மரணத்தின் போது கம்பர் சரியாகப் பாவிப்பார்.. மரணமும், வெற்றியின் வெறியும் விதியை உடைத்த இடத்தை விளக்க வாலியின் மரணத்தைவிட வேறு நல்ல உதாரணம் வேண்டியதில்லை..

இதுபோல போரின் விதிக்கு மாறாக நடாத்தப்பட்டதுதான் புதுமாத்தளன் போர்.. அது விதிப்படி நடைபெறவில்லை.. மரணங்களால் விதிகள் உடைக்கப்படும் என்ற உண்மைய இன்னொரு தடவை உலகிற்கு உணர்த்திய கொடும் போராகும்..

இறைவனின் கட்டுப்பாடு குலைந்துபோன இந்த அவலமான நேரத்தில் என்ன செய்யலாம்… ?

இதற்கு ஓர் உபகதை இருக்கிறது..

தாய்மாடு சிங்கத்தால் அடித்துக் கொல்லப்பட்டு மார்பு பிளந்த நிலையில் உயிரற்று இரத்த வெள்ளத்தில் கிடக்கிறது..

அதற்கு அருகில் இருந்த மரத்தில் அந்தத் தாய் பெற்ற காளை மாடு தனது கொம்புகளைப் பலமாகத் தீட்டிக் கொண்டிருக்கிறது..

அந்த வழியால் வருகிறது தாயைக் காட்டிக் கொடுத்த குள்ள நரி .. உன்தாய் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறாள்.. அவளுக்காக கண்ணீர்விட்டு அழாமல் உன் கொம்புகளை ஏன் தீட்டுகிறாய் என்று கேட்டது..

பதில் கூறாது… பாய்ந்து வந்து காட்டிக் கொடுத்த குள்ள நரியைக் குத்திக்கிழித்த காளை மாடு, எனது கொம்புகள் மொட்டையாக இருந்திருந்தால் உனக்கு இந்தப் பரிசைத் தந்திருக்க முடியாது என்று கூறுகிறது..

காளை மாடு கண்ணீர் விட்டு அழுதிருந்தால் அக்கணமே தாயைப் போல இரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கும்..

மரணம் சகல நீதிகளையும் உடைக்கும் என்பதை காளைமாடு கண்டு கொண்டது, விழிப்படைந்தது உயிர் தப்பியது..

இக்கதையை புதுமாத்தளன் மரணங்களைப் பார்த்த ஒவ்வொரு ஈழத் தமிழனும் மனதில் வைத்திருக்க வேண்டும்..

மரணங்கள் எப்படிப்பட்ட குரோதங்களை வளர்க்கும், அதனால் எப்படியெல்லாம் சமூக நீதி குலையும் என்பதை அறிய பாரதக்கதையில் மேலும் சில உதாரணங்களைப் பார்ப்போம்..

பதினெட்டாம் நாள் போரின் முடிவில் துரியோதனன் கொல்லப்படுகிறான்.. அவனைக் கொன்ற வீமனை ஒரு தடவை பார்க்க வேண்டுமென துரியோதனனின் தந்தையான திருதராட்டிரன் விரும்புகிறான்..

, கண்தெரியாத அவன் வீமனைக் கண்டு மகனே..! வீமா வந்துவிட்டாயா..?, என்று கேட்கிறான்.. வீமனும் வந்துவிட்டேன் பெரியப்பா என்கிறான்..

, என் மகனை கொன்று நீதியைக் காத்த உன்னைக் கட்டித்தழுவி ஆனந்தமடைய விரும்புகிறேன் அருகில் வா.. ! , என்று அழைக்கிறான்..

அவன் நோக்கம் அறியாது அருகில் போகிறான் வீமன், கண்ணன் அவனைத் தடுத்துவிட்டு திருதராட்டிரனிடம் ஓர் இரும்புத் தூணைக் காட்டுகிறான்..

அவ்வளவுதான் இரும்புத்தூணைக் கட்டிப்பிடித்த திருதராட்டிரன் தன் பலம் கொண்ட மட்டும் அதை அழுத்துகிறான்.. , என் மகனைக் கொன்ற பாவி.., என்றபடி வேக வேகமாக அழுத்துகிறான்.. அந்த இரும்புத் தூண் உடைந்து துண்டு துண்டாகப் பறக்கிறது.. வீமன் மட்டும் அகப்பட்டிருந்தால் அவன் அக்கணமே பஸ்பமாகியிருப்பான்…

கண்ணற்ற கபோதியான திருதராட்டிரன் நிலை தடுமாறி போரின் விதியை மீறிய இடம் இதுவாகும்..

அடுத்த உதாரணம்..

தன்னுடைய தந்தையான துரோணரை கொன்ற பாண்டவரை பழிவாங்க சாகாவரம் பெற்ற அசுவத்தாமன் இறைவன் கொடுத்த வாளுடன் வருகிறான்..

அந்த உருத்திரவாள் கையில் இருந்தால் அவனை யாருமே வெல்ல முடியாது..

அவன் ஆவேசமாக வருது தெரிந்த கண்ணன் பாண்டவர்களை ஒரு மீன்பிடிப்போர் குப்பத்தில் மறைத்துவிடுவான்… ஆனால் அசுவத்தாமனோ.. பாண்டவர்களின் வம்சத்தையே வாழ விடமாட்டேன் என்று சபதமெடுத்து, அவர்கள் குடும்பத்தில் எஞ்சியிருந்த அனைவரையுமே கொல்கிறான்.. கருவிலிருந்த குழந்தைகளையும் கொன்றொழித்தான்..

போரின் வெற்றி பாண்டவருக்கு எதையும் கொடுக்கவில்லை.. அவர்களுடைய வம்சத்தையே பரிநாசமாக்கியது.. கருவில் இருந்த குழந்தைகளையும் அழித்து போரின் விதிகள் அனைத்தையும் மீறினான் அசுவத்தாமன்..

மூன்றாவது சம்பவம்..

இறுதியாக தர்மன் சுவர்க்கம் செல்லும் வழியில் நரகக் குழி ஒன்றில் இருந்து பெரும் அழு குரல் கேட்கிறது..

யாரென்று எட்டிப் பார்க்கிறான்… அங்கே துரியோதனன் பாம்புகளாலும் பூச்சிகளாலும் கடிக்கப்பட்டு துடிதுடித்தபடி அலறுவது தெரிகிறது..

, அண்ணா காப்பாற்று.. , என்று கதறுகிறான்..

அவன் மீது இரக்கம் கொண்டு தன் தோளில் இருந்த அங்கவஸ்திரத்தை எடுத்து குழிக்குள் விடுகிறான் தர்மன்…

, இதைப்பற்றி ஏறி மேலே வா.. தம்பி ..! , என்கிறான்..

சால்வையைப் பற்றிய துரியோதனன் ஒரு கணம் யோசிக்கிறான்.. தான் தப்புவதைவிட அதே குழிக்குள் தர்மனையும் இழுத்து விழுத்திவிட அவன் வஞ்சக மனம் உந்துகிறது.. சடக்கென சால்வையை உன்னி இழுக்கிறான்..

தர்மன் பாதாளம் நோக்கி சரிகிறான்…

ஒரே நொடி கண்ணன் தர்மனைக் கட்டிப்பிடித்து அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றுவான்..

போரின் குரூரமானது திருந்துவோம் என்ற எண்ணத்தை ஒருவனுக்குக் கொடுக்காது என்பது இச் சம்பவத்தால் உணர்த்தப்படும்..

மேலே சொல்லப்பட்ட ஐந்து சம்பவங்களையும் மனதில் போட்டு படித்துப் பாருங்கள்…

புதுமாத்தளன் போர் எவ்வளவு பெரிய எதிர்கால ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய போர் என்பதை உணர்ந்து கொள்வீர்கள்..

இப்படியான நேரத்தில் அரசனும் அடிதலை மாறுவான்…

அண்ணனும் தம்பியும் ஆளையாள் குழிபறிப்பர்…

யார் நல்லவன் யார் கெட்டவன் என்பதே தெரியாமல் தடுமாற நேரும்..

இதை பாரதப்போர் முடிந்த பிறகு நடைபெற்ற மேற்கண்ட மூன்று நிகழ்வுகளும் அற்புதமாக உணர்த்தும்..

புதுமாத்தளன் விதிகளை மீறிய போர்.. அதன் எதிர் காலத்தை இத்தகைய கதைகள் மூலம் உணர்ந்து வழிப்படைய வேண்டும்…

அதைவிடுத்து அதற்காக அழுவோர் அதைவிட பெரும் அவலத்தில் சிக்க நேரிடும்..

கண்ணனைப் போல எச்சரிக்கை எல்லோருக்கும் அவசியம்..

No comments:

Post a Comment