Monday, 8 February 2010

இலங்கை ஒரு சர்வாதிகார நாடு: 17ம் திருத்தம் இன்றி


இலங்கைக் குடியரசுத் தலைவர் பதவி உலகிலேயே தேர்தல் மூலம் தெரிந்தெடுக்கப் படும் அரசுத் தலைவர் பதவிகளில் மிகவும் அதிகமான அதிகாரத்தை கொண்ட பதவியாகும். முன்னாள் குடியரசுத் தலைவர் ஜே ஆரி ஜெயவர்தன தனக்காக உருவாக்கிய பதவி இது. அவருக்கு இதற்காக ஆலோசனை வழங்கியவர்களில் நீலன் திருச்செல்வமும் பேராசிரியர் ஏ. ஜே. வில்சனும்( தந்தை செல்வாவின் மருமகன்) முக்கியமானவர்கள்.

என்னால் இலங்கையில் ஒரு பெண்ணை ஆணாகவே அல்லது ஆணைப் பெண்ணாகவோ மாற்றுவதைத் தவிர மற்ற எதையும் செய்ய முடியும் என்றார் இந்தப் பதவியை முதல் வகித்த ஜே. ஆர் ஜயவர்தன. இலங்கையின் சட்டவாக்கற்துறை பாராளமன்றிடம் இருக்க அதை நிறைவேற்றும் சகல அதிகாரங்களும் ஆட்சி அதிகாரங்களும் குடியரசுத் தலைவரிடமே இருக்கும். இலங்கை அரசின் முக்கியமான பதவிகளான தேர்தல் ஆணையாளர், காவல்துறை மாஅதிபர், பிரதம நீதியரசர், மேன்முறையீட்டு நீதிபதிகள், சட்ட மாஅதிபர் கணக்காய்வாளர் நாயகம், பாராளமன்ற ஆணையாளர் (ombudsman) ஆகிய பதவிகளை இலங்கைக் குடியரசுத் தலைவரே நியமிக்க வேண்டும். இது போன்ற பதவிகளுக்கு தனக்குச் சாதக மானவர்களை நியமிப்பதன் மூலம் இலங்கைக் குடியரசுத் தலைவர் நாட்டின் சகல நடவைக்கைகளையும் தனது கட்டுப்பாட்டிலும் தனக்கு சாதகமாகவும் வைத்திருக்க முடியும்.

குடியரசுத் தலைவர் தனக்குச் சாதகமானவர்களை இப்பதவிகளுக்கு அமர்த்துவதை தவிர்க்கவும் தன் அதிகாரங்களை முறைகேடாகப் பயன்படுதுவதை தவிர்க்கவும் இலங்கை அரசியல் அமைப்பில் 17வது திருத்தம் 2001-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு இலங்கைப் பாராளமன்றத்தால் நிறைவேற்றப் பட்டது.

17வது திருத்தத்தின் படி இலங்கையில் அரசமைப்புச் பேரவை ஒன்று நிறுவப்படவேண்டும். அரசமைப்புச் பேரவையானது:

பாராளமன்ற சபாநாயகர். பிரதம மந்திரி, எதிர்க்கட்சித்தலைவர். குடியரசுத் தலைவரால் நியமிக்கப் படும் ஒருவர். பிரதமர் எதிர்ககட்சித் தலைவர் ஆகியோரின் பரிந்துரைப்படி குடியரசுத் தலைவரால் நியமிக்கப் படும் ஐவர். பாராளமன்றத்தால் நியமிக்கப்படும் ஒருவர். ஆகியோரை உள்ளடக்கியது.

அத்துடன் இலங்கையில், மனித உரிமை ஆணையகம் உட்படப் பல ஆணையகங்களும் உருவாக்க வேண்டும்:

1. அரசியலமைப்புப் பேரவை

2. பொதுச் சேவை ஆணைக் குழு

3. தேர்தல் ஆணைக் குழு

4. நீதிச் சேவை ஆணைக் குழு

5. தேசிய பொலிஸ் ஆணைக் குழு.

இந்தப் 17வது திருத்தம் இலங்கைக் குடியரசுத் தலைவரின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தாவிடிலும் இலங்கையில் ஒரு மாற்றத்தை நீதியான ஒரு நிர்வாகத்தை மனித உரிமைகளுக்கான ஒரு மதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் நீதியான நிர்வாகத்துடனோ அல்லது மனித உரிமைகளுக்கான மதிப்புடனோ இலங்கையை ஆளமுடியாது என்று கருதிய இலங்கை ஆட்சியாளர்கள் அதை இன்றுவரை அமூல் படுத்தவில்லை. அதை அமூல் படுத்துவதற்கான காத்திரமான அழுத்தங்கள் எதுவும் இதுவரை எதிர்க் கட்சிகளால் மேற்கொள்ளப் படவுமில்லை. எதிர் கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் 17வது திருத்தத்துடன் ஆளுவதிலும் பார்க்க அது இல்லாமல் நாட்டை ஆளுவதை விரும்புகிறார்கள். இதனால் இலங்கை குடியரசுத் தலைவர் ஒரு தேர்ந்தெடுக்கப் பட்ட சர்வாதிகாரியாகும். அந்தச் சர்வாதிகாரி தனக்குச் சாதகமாக தனது பதவிக்காலம் முடியமுன் தேர்தலை தான் அதிகாரத்தில் இருந்து கொண்டு நடாத்தி தனது பதவிக்காலத்தை ஒரு முறை கேடான தேர்தல் மூலம் நீடிக்கக்கூடிய சாத்தியங்கள் நிறைய உண்டு.

1999இல் சந்திரிக்கா பண்டாரநாயக்காவும் 2010இல் மஹிந்த ராஜபக்சவும் பதவிக்காலம் முடியுமுன்னரே தேர்தலை நாடாத்தி தங்கள் பதவிக்காலங்களை நீடித்துக் கொண்டனர்.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதமளவில் இலங்கையில் 17வது திருத்தம் நிறைவேற்றும்படி ஐரோப்பிய ஒன்றியம் வற்புறுத்தியது. மற்றும்படி பெரிய வெளிநாட்டு அழுத்தங்கள் 17வது திருத்தம் அமூல்படுத்தும்படி கொடுக்கப் படவில்லை. 17வது திருத்தம் இன்றி இலங்கையின் அரசியல் அமைப்பு பல சர்வதேச உடன்படிக்கைகளுக்கு முரணானதாகக் கருதப்பட இடமுண்டு.

2010-01-26இல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தல் 17வது திருத்தத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது. இலங்கை அரசின் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் எல்லாம் மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப் பட்டவர்கள். அதனால் அவர்களை அவருக்கு வேண்டியவர்கள் எனக் கருத இடமுண்டு. உண்மையில் எதிர்க் கட்சிகள் இந்த திருத்தம் இல்லாமல் தேர்தல் நடத்த முடியாது என்று வலியுறுத்தி இருக்க வேண்டும். அந்தத் திருத்தத்தை அமூலாக்கி அதன் படிதேர்தல் நடந்திருந்தால் தேர்தல் ஆணையாளர் நான் மிக அதிக அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்தேன் என்று அறிவித்திருந்திருக்க மாட்டார். இப்போது முன்வைக்கப் படும் பல தேர்தல் முறை கேடு சம்பந்தமான பல குற்றச் சாட்டுக்கள் எழுந்திருக்காது. 17வது திருத்தம் இல்லாத தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருக்கவேண்டும் அப்படி ஒரு தேர்தல் நடக்க விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டங்கள் செய்திருக்க வேண்டும். அவற்றை செய்யத் தவறியதன் விளைவை அவர்கள் இப்போது அனுபவிக்கிறார்கள்.

நடக்கவிருக்கும் பாரளமன்றத் தேர்தலுக்காவது அதை இலங்கையின் எதிர்க் கட்சிகள் செய்வார்களா?

17வது திருத்தம் அமூலாக்கப்படும் வரை இலங்கை ஒரு சர்வாதிகார நாடு.

No comments:

Post a Comment