Wednesday, 9 December 2009

he Global Failure to Protect Tamil Rights Under International Law - Francis A. Boyle





















சர்வதேச சட்டங்களின் கீழ் 'சிறிலங்காவின் தமிழின அழிப்பு: ஒர் உலகத் தோல்வி': ஆங்கில நூல்

தமிழர்கள் மீதான சிறிலங்காவின் இன அழிப்பு படுகொலைகள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித விழுமியங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக சட்ட வல்லுனரும் பேராசிரியருமான பிரான்சிஸ் ஏ. போய்ல் (Francis A. Boyle) எழுதிய நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது.
 
தமிழர் மீதான சிறிலங்காவின் இன அழிப்பு: அனைத்துலக சட்டங்களின் கீழ் தமிழர்களின் உரிமைகளைக் காப்பதில் அனைத்துலகத் தோல்வி' ((The Tamil Genocide by Sri Lanka: The Global Failure to Protect Tamil Rights Under International Law) எனும் தலைப்பில் உருவாக்கம் பெற்றுள்ள இந்நூலினை 'Clarity Press of Atlanta' வெளியீடு செய்துள்ளது.

தமிழர்கள் மீதான் இன வன்கொடுமை, மனித உரிமை மீறல்கள் ஆகிய மிகக் கொடூரம் நிறைந்த, சிறிலங்கா ஆட்சியாளர்களின் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை அனைத்துலக சட்டங்களுக்கு அமைய வெளிப்படுத்திவரும்; மிகச் சிலரில் Boyle முதன்மையானவர். இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்கா கட்டவிழ்த்துவிட்ட பாரிய மனிதப் பேரழிவுகளைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா உட்பட்ட அனைத்துலக சமூகம் தோல்வி கண்டுள்ள புறநிலையில், அனைத்துலக சட்டங்களின் கீழ் அதிகாரபூர்வமாக சிறிலங்கா அரசாங்கத்தின் மீது இன அழிப்புக்கெதிரான வழக்கு தொடருவதற்கு அடிப்படையாக அமையக்கூடிய முதலாவது நூலாக இது கருதப்படுகின்றது.

அனைத்துலக சட்டத்துறை சார்ந்த அமெரிக்காவின் முன்னணி வல்லுனரான போய்ல், Illinois பல்கலைக்கழக பேராசிரியருமாவார். பல்வேறுபட்ட அனைத்துலக அமைப்புகளுக்கு மனித உரிமை, போர்க்குற்றம் மற்றும் இன அழிப்பு ஆகிய விவகாரங்களுக்கான ஆலோசகராகவும், அனைத்துலக மன்னிப்புச் சபையின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார் இவர், 1993இல் போஸ்னியா ஹர்சகோவீனா (Bosnia, Herzegovina) இன அழிப்புக்கு எதிரான இரண்டு வழக்குகளை அனைத்துலக நீதி மன்றுக்கு எடுத்துச் சென்று இரண்டிலும் வெற்றி கண்டவர் என்பது நினைவூட்டத்தக்கதாகும்.

போஸ்னியா ஹர்சகோவீனா மக்கள் மீது முந்நாள் யூகோஸ்லாவியாவின் இன அழிப்பு மற்றும் போர்க் குற்றங்களுக்காக முந்நாள் சேர்பிய அரசுத்தலைவர் மீது இன அழிப்புக்கெதிரான குற்றம் சுமத்துப்பட்டு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் முன்னிறுத்தப்பட்டமை பலரும் அறிந்ததே. 1991-1993 காலப்பகுதியில் பலஸ்தீன விடுதலை அமைப்பின் சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுவின் ஆலோசகராகவும், பலஸ்தீன இடைக்கால அரசின் (Provisional Government of the State of Palestine) ஆலோசகராகவும் பங்காற்றியுள்ளார்.

இந்நூலின் ஒரு அத்தியாயத்தில் - அனைத்துலக சட்ட மரபுக்கு உட்பட்டு தமிழ் மக்கள் ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனம் செய்வது பற்றியும் இடைக்கால தமிழீழ அரசாங்கத்தினை நிறுவுவது பற்றியதுமான தமிழ் மக்களின் உரிமை பற்றியும் - அவற்றின் சட்ட அடிப்படைகள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. பலஸ்தீன விடுதலை அமைப்பின் சட்ட ஆலோசகராக இருந்த தனது பட்டறிவுக்கு ஊடாக இவ்விடயத்தை பதிவுசெய்திருப்பதாகவும் அறிய முடிகின்றது.

நூல் தொடர்பான மேலதிக விபரங்களை அறியவும், நூலை வேண்டுகை செய்து பெற்றுக் கொள்ளவும் Clarity Press இன் இந்நூலுக்கான இணையப்
பக்கம்: Kilde: http://www.claritypress.com/Boyle-Tamil.html

No comments:

Post a Comment