Friday, 11 December 2009

இலங்கைத் தேர்தலில் தமிழர்கள் என்ன செய்யப்போகிறார்கள் - எம்.பி. ஜெயானந்தமூர்த்தி


பிரபாகரன் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார். அவர் இறந்துவிட்டதாக, இந்தியாவையும், தென்பகுதி சிங்கள மக்களையும் இலங்கை அரசு நம்ப வைத்து நாடகமாடுகிறது’ என்று கூறியிருக்கிறீர்களே. எந்த நம்பிக்கையில் இப்படி…?


“பிரபாகரன் இதுவரை இலங்கை மற்றும் இந்திய ராணுவத்தின் எத்தனையோ சுற்றிவளைப்புகளில் இருந்து வெற்றிகரமாகத் தப்பியவர். எங்கள் தேசியத் தலைவர் கொல்லப்பட்டுவிட்டார் என்று இதுவரை எத்தனையோ முறை பரப்புரைகள் மேற்கொள்ளப் பட்டன. அதுபோலத்தான் கடந்த மே மாதம் 19-ம் தேதி, முள்ளிவாய்க்கால் போரில் அவர் கொல்லப் பட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

`இதுதான் பிரபாகரனின் உடல்’ என்று முதலில் ஓர் உடலையும், இரண்டு நாட்கள் கழித்து வேறொரு உடலையும் இலங்கை அரசு காட்டியது. இறுதிக் கட்ட போரில் அவருடனிருந்தவர்கள் தந்திருக்கும் தகவல் மூலம், தலைவர் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார். அவரை அழிப்பது இயலாத காரியம்.”

அப்படியானால் இலங்கை ராணுவம் வெளியிட்ட படங்கள் பொய் என்கிறீர்களா?

“ஆம்! அவர்கள் காட்டிய உடல் வேறு ஓர் உடல். அவர்கள் உண்மையில் பிரபாகரனின் உடலைக் கைப்பற்றியிருந்தால் அதைவைத்து பாரிய அளவில் பரப்புரை செய்திருப்பார்கள். அதைவிட்டு அந்த உடலை உடனே எரித்து கடலில் கரைத்தது சந்தேகத்தைக் கிளப்புகிறது. இந்தியா கேட்ட பிரபாகரனின் மரணச் சான்றிதழைக் கூட இலங்கை அரசால் தரமுடியவில்லையே! தேசியத் தலைவர் இப்போதும் மக்களின் மனங்களில் இருக்கிறார். லட்சியத்தை அடையும் வரை எங்கள் தேசியத் தலைவர் இருப்பார்.”

அவர் எப்போது வெளியே வருவார்?

“தேசியத் தலைவர் உயிருடன் இருந்தாலும் தற்போது அவர் வெளிவருவதற்கான சூழல் இல்லை. சர்வதேச சூழல், இந்தியாவின் நிலைப்பாடு, இலங்கை அரசியலில் ஏற்படும் மாற்றம் இவற்றைப் பொறுத்து எதிர்காலத்தில் நல்ல தகவல் வரும்.”

இறுதிக்கட்ட போர் நடந்தபோது புலிகளின் முக்கிய தளபதிகள் யாருடனாவது நீங்கள் பேசினீர்களா? அதில் ஏதாவது முக்கிய தகவல் கிடைத்ததா?

“மக்களைக் காப்பாற்ற வேண்டும். அதற்காகப் போர்நிறுத்தம் வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அதற்காக அரசியல் பிரிவினரோடு நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம்.”

கரும்புலிகளின் கட்டுப்பாட்டில் பிரபாகரன் பாதுகாப்பாக நகர்த்தப்பட்டதாக லண்டன் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியிருக்கிறீர்களே? அதுபற்றிக் கூடுதல் விவரம் எதுவும் கூற முடியுமா?

“தலைவர் தப்பிச் செல்வதற்கான கட்டமைப்புகள் அப்போது இருந்தன. தலைவர் எப்படித் தப்பிச் சென்றார் என்ற விவரங்களை அங்கு நான் சொல்ல வில்லை. இப்போதும் என்னால் அதை எந்த வகையிலும் உறுதிப்படுத்த முடியாது.”

இந்திய அரசையும், தென்பகுதி சிங்களவர்களையும் ஏமாற்றவே, பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு நாடகமாடுகிறது என்கிறீர்கள். இலங்கை அப்படி நாடகமாட வேண்டிய அவசியமென்ன?

“புலிகள் இயக்கத்தை முழுவதுமாக அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இலங்கைக்கு இந்தியா பலவகைகளில் உதவியது. இதனால், `இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் இறந்துபோனார், புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது’ என்று இந்தியாவுக்குத் தெரியப்படுத்த வேண்டிய தேவை இலங்கைக்கு இருந்தது. அதுபோல, தனது அரசியல் தேவைக்காக, தென்பகுதி சிங்களவர்களிடம் இதுபோல நாடகமாட வேண்டிய அவசியமும் இலங்கை அரசுக்கு இருக்கிறது.”

மாவீரர் உரையை இந்தமுறை பிரபாகரனுக்கு பதில் பொட்டம்மான் நிகழ்த்துவார் என்ற தகவலை சிங்கள ராணுவமே கசியவிட்டதாக ஒரு பேச்சு நிலவுகிறதே? உண்மையா?

“ஆம்! சிங்கள அரசின் புலனாய்வுப் பிரிவினர் இதுபோன்ற பல பரப்புரைகளைச் செய்து ஏமாற்றி வருகின்றனர். நான் ஏற்கெனவே கூறியதுபோல பிரபாகரன் இப்போது வெளியில் வரக்கூடிய சூழல் இல்லை. ஆகவே, அவரது ஒலிவடிவ உரை கூட மாவீரர் தினத்தன்று வெளிவரவில்லை.”

`தலைவர் வீரச்சாவு அடைந்தார்’ என்று கே.பி. அறிவித்தாரே? அதுபற்றி தங்கள் கருத்து…?

“அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அப்போது தெரியப்படுத்தினார். அதில் எந்தஅளவு நம்பகத்தன்மை இருக்கிறதென்று கூறமுடியாது.”

ராணுவப்பிடியில் இருந்த யோகி, புதுவை ரத்தினதுரை, பாலகுமாரன் போன்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல் வந்ததே?

“எனக்கும் அதுபோன்ற செய்திகள் வந்தன. அதை உடனடியாக உறுதிப்படுத்த முடியாவிட்டாலும் அப்படி நடக்கவில்லை என உத்தரவாதமும் கொடுக்க முடியாது.”

இலங்கைத் தேர்தலில் ராஜபக்ஷே, ஃபொன்சேகா இருவரும் மோதப் போகிறார்கள். இதில் தமிழ் எம்.பி.க்கள் யாரை ஆதரிக்கப் போகிறார்கள்? தமிழர்கள் தரப்பில் தனியாக ஒரு வேட்பாளரை நிறுத்தும் பேச்சும் எழுகிறதே?

“எந்த ஒரு ஜனாதிபதி வந்தாலும் தமிழர்களுக்கு நன்மை கிடைக்கப் போவதில்லை. எனினும் ஜனவரி மாதம் வர இருக்கும் இலங்கைத் தேர்தல் தமிழ் மக்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். தமிழ் மக்களின் வாக்குகளால்தான் அந்த இருவரில் ஒருவர் வெற்றி பெற முடியும். தேர்தலைப் புறக்கணிக்கலாமா என்ற எண்ணமும் தமிழர்களிடையே உள்ளது. தேர்தலை எப்படி எதிர்கொள்வது என எங்கள் நாடாளுமன்றக் குழு இன்னும் சில தினங்களில் கூடி ஆராய இருக்கிறது.”

2009 மாவீரர் தின உரையை புலிகளின் தளபதிகளில் ஒருவரான ராம் என்பவர் வெளியிட்டிருந்தார். புலிகளின் தலைமையகமும் மாவீரர் உரையை வெளியிட்டுள்ளது. ஏனிந்தக் குழப்பம்? தளபதி ராம், ராணுவப் பிடியில் இருந்தபடி எப்படி உரை வெளியிட்டிருக்கிறார் என்று கூறப்படுவது பற்றி….?

“மக்களைக் குழப்புகிற வேலையில் பலர் இப்போது ஈடுபட்டிருப்பதால் தளபதி ராம் அவர்கள் விடயத்தில் எங்களால் எதையும் உறுதியாகச் சொல்ல முடியாமல் இருக்கிறது. இது மக்களைக் குழப்புகிற இலங்கை அரசின் இன்னொரு வேலையாகத்தான் கூற முடியும்.”

நன்றி: குமுதம் சஞ்சிகை

No comments:

Post a Comment