எமது மக்களின் மனிதாபிமான உதவிகளுக்கு ஒன்றாய் அணிதிரள்வோம்
எமது தாயகத்தின் கிழக்கு மாகாணத்தில் பெரும் வெள்ளப்பெருக்கால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளது யாவரும் அறிந்ததே. எமது தாயக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையைப் போக்கும் பாரிய கடமை எம்முன் காத்துநிற்கிறது.
மட்டக்களப்பில் இதுவரை மூன்று லட்சத்து 22 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 2 லட்சம் மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நலன்புரி மையங்களில் தஞ்சமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதேபோன்று, 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நெற் காணிகள் வெள்ளத்தினல் நாசமடைந்துள்ளதாகவும் அறியப்படுகிறது. அம்பாறை மாவட்டத்திலும் இதுவரை 3 லட்சத்து 36 ஆயிரம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக அறிகிறோம்.
இலங்கை அரசு ஒதுக்கும் நிதி போதுமானதாக இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் தொண்டு நிறுவனங்கள் மூலம் கிடைக்கப்பெரும் நிதியும் தமிழ் மக்களுக்கு சேரா வண்ணம் திட்டமிட்டு முடக்கப்படுகிறது என்பது வேதனையிலும் வேதனையாகவே உள்ளது. இதற்கிடையில், அரசோடு சேர்ந்தியங்கும் அரசியல்வாதிகளுக்கிடையில் நிலவும் போட்டியும் ஒருபுறம் தமிழ் மக்களுக்கான நிவாரணம் கிடைக்காமல் செய்துவருவதாகவே அறியப்படுகிறது.
இப்படி பல்வேறு காரணங்களால் எமது மக்கள் மேலும் துயருற்று வருகிறார்கள் என்பதனை நோர்வே ஈழத்தமிழர் அவை கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறது.
எமது மக்களுக்கு தேவையான புனரமைப்பு பணிகளில் ஈடுபட, ஒன்றாய் கரம் கோர்த்து பணியாற்ற அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் இவ்வேளையில் நோர்வே ஈழத்தமிழர் அவை உரிமையுடன் அழைப்பு விடுக்கிறது.
சுனாமியால் எமது மக்கள் பாதிப்படைந்தபொழுது எவ்வாறு ஒன்றாய் நின்று உதவி புரிந்தோமோ, அதேபோன்று நாம் ஒன்றாய் நின்று எமது மக்களுக்கு மறுவாழ்வளிப்போம். எம் மண்ணையும் எம் மக்களையும் ஒரு சேர காக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
ஒன்றாய் அணிதிரள்வோம்! எம் மக்களை காப்போம்!
பஞ்சகுலசிங்கம் கந்தையா,
தலைவர்,
நோர்வே ஈழத்தமிழர் அவை, நோர்வே.
No comments:
Post a Comment