Welcome to this blogg. More than 80 million tamil people live in many countries across distant seas. There is no state without a Tamil - but there is no state for the tamils. Velkommen til denne bloggen. Her vil jeg oppdatere nyheter om tamiler og deres kamp for et selvstyre både på Sri Lanka og utenfor øya. என்னுடைய இந்த இணைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி: தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கென்று ஓர் நாடில்லை
Monday, 17 May 2010
போர் குற்றவியல் நீதி மன்றத்தில் குற்றவாளிகளை நிறுத்த வேண்டும்
போர்க் குற்ற கிளிநொச்சி நகரிலிருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் விசுவமடு என்ற சிறு நகரின் றெட்பானா சந்தியில் ஒரு எலும்பும் தோலுமான 50 வயதுப் பெண்னைப் பார்த்தேன் பசியால் மிக நொந்த அவரிடம் பேச்சுக் கொடுத்தேன் தமிழ் நாட்டுக் கரையோரத்திற்கு நேர் எதிராக அமைந்துள்ள மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்தப் பெண் என்று அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் தமிழீழத்தின் வடகிழக்கில் இருக்கும் விசுவமடுவிக்கு வந்த விதம் பற்றி அவர் விரிவாகச் சொன்னார்.
மன்னாரில் இருந்து கிளிநொச்சி ஊடாக விசுவமடு வரையில் தான் 16 தடவை இடம் பெயர்ந்துள்ளதாக அந்தப் பெண் கூறினார். கிளிநொச்சியில் இராணுவம் நடத்திய நச்சு வாயுத் தாக்குதலில் தனது கணவரையும் ஒரே மகளையும் இழந்து விட்டதாக அவர் சொன்னார். வசதியான குடும்பம் நாளாந்திர வயிற்றுப் பாட்டிற்காக தலையில் சுமந்து கொண்டு வந்த பெறுமதியான பொருட்களில் பெரும் பகுதியை தொலைத்து விட்டதாக மூதாட்டி போல் காட்சி தந்த அந்த ஐம்பது வயதுப் பெண் சொன்னார்.
றெட்பானா என்ற பெயர் சுவையான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது சென்ற நூற்றாண்டின் 70, 80 களில் மலையகத் தமிழர்கள் சிங்களப் பேரினவாதக் கும்பல்களாலும் அரசியல் வாதிகளாலும் விரட்டி அடிக்கப்பட்டனர் பலர் கொல்லப் பட்டனர். பலர் இடம் பெயர்ந்து வடக்கு கிழக்குப் பகுதிகளை நோக்கி கூட்டம் கூட்டமாக வந்தனர். பிரிட்டிஸ் ஆட்சி நிலவிய காலத்தில் தமிழ் நாட்டில் இருந்து மலையகத் தேயிலைத் தோட்டங்களில் அடிமட்டக் கூலித் தொழிலாளர்களாகக் கொண்டுவரப் பட்டவர்கள் தான் இந்த அப்பாவிகள்.
பல நூற்றாண்டுகளாக தீவின் பொருளாதார மேம்பாட்டிற்காக உழைத்த மலையகத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்காமல் இந்திய மத்திய அரசும் சிங்கள அரசும் கூட்டாகச் சதி செய்து நாடற்ற வர்களாக மாற்றினார்கள் அவர்களை நாட்டை விட்டு விரட்டும் முயற்சியின் அங்கமாக 70, 80 களில் அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் இடம் பெற்றன.
இப்படி விரட்டப்பட்ட ஒரு பங்கினரை நோர்வே அரசு தனது செலவில் கொண்டு வந்து வன்னி நிலப்பரப்பில் குடியேற்றியது. கிளிநொச்சியில் இருந்து விசுவமடுவுக்கு வரும் பாதையில் தருமபுரம் என்ற செழிப்பான விவசாயக் கிராமம் இருக்கிறது இது முழுக்க முழுக்க மலையகத் தமிழர்கள் குடியேற்றப் பட்ட கிராமம் அந்தப் பகுதிக்குத் தருமபுரம் என்ற பெயர் குடியேற்றத்திற்குப் பின்பு சூட்டப்பட்டது.
அவர்கள் சிறந்த உழைப்பாளிகள் பேச்சிலும் நடை உடை பாவனையிலும் பண்பாட்டு ஆதாரங்களிலும் தருமபுரவாசிகள் வன்னியர்களாக மாறிவிட்டார்கள. றெட்பானா என்பது ஒரு நோர்வே மொழிப் பெயர் சரியான அர்த்தம் புரியவில்லை தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் பல விதமாக விளக்கம் சொல்கிறார்கள்.
இந்தச் சந்தியில் விசாலமான நிழல் தரும் காட்டு மரங்கள் நிற்கின்றன தங்கிச் செல்வதற்கு வசதியான இடம் சிறு கடைகளும் சந்தையும் றெட்பானா சந்தியில் காணப்பட்டன. அமைதியான சூழல் போரினால் சின்னா பின்னமாகி சுடுகாடாகி விட்டது. என்னால் இனி ஒரு அடி தன்னும் எடுத்து வைக்க முடியாது என்று அந்த அபலை அழுதார். என்னைப் போன்றவர்களும் அப்படியான நிலையில் தான் இருந்தோம்.
போர்க்கால இடம் பெயர்வுகள் இருவகைப்படுகின்றன. ஒன்று முன்னேறி வரும் இராணுவத்திற்குப் பயந்த மக்கள் தமது வாழ்விடத்தை விட்டுப் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடுதல். இரண்டு மக்களை இடம் பெயரச் செய்து அதே மக்களை ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கித் தள்ளிச் செல்லும் இராணுவ நடவடிக்கையால் இடம் பெயரநேர்தல்.
மேற்கூறிய வற்றின் வித்தியாசங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் முதலாவது மக்களாகவே இடம் பெயர்தல் இரண்டாவது இடப் பெயரச் செய்வதே குறியாகக் கொண்ட இராணுவ நடவடிக்கையால் இடம் பெயர்தல். வன்னியில் நடந்த இடம் பெயர்வு இரண்டாம் வகையைச் சேர்ந்தது சிங்கள இராணுவத்தின் குறிக்கோள் மக்களை இடம் பெயரச் செய்வது மாத்திரமல்ல அவர்களை ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை நோக்கி விரட்டிச் செல்வதுமாக இருந்தது. இதை எம்மால் மிக விரைவில் புரிந்து கொள்ள முடிந்தது கால் நடைகளைப் பெரும் எண்ணிக்கையில் வளர்க்கும் வன்னியர்கள் பட்டியில் அடைப்பதற்காக மேய்ச்சல் நிலத்திலிருந்து மாடுகளை விரட்டிச் செல்வதைப் போல் தம்மையும் விரட்டுகிறார்கள் என்பதை உணர்ந்தார்கள்.
புல்டோசர் எனப்படும் மண் வாரி எந்திரம் போரல் தமிழ் மக்களை மன்னாரில் இருந்து கிளிநொச்சிக்கும் பின்பு அங்கிருந்து விசுவமடுவுக்கும் சிங்கள இராணுவம் தள்ளிச் சென்றது ஒருவரும் தப்பியோடவோ காடு போன்ற மரம் அடர்த்தியான பகுதிக்குள் புகுந்து தப்பிக்க முடியாத வாறு இராணுவ நகர்வு இருந்தது வேவு பார்க்கும் விமானங்கள் குண்டு வீச்சு விமானங்கள் என்பன விண்ணில் பறந்த படி இருந்தன ஆட்டிலறி பல்குழல் எறிகணை வீச்ம் பொறிகள் நீண்ட தூரம் பாயும் யந்திரத் துப்பாக்கி ரவைகள் மக்களின் உயிலைக் குடித்தன.
இந்திய தொலைக்காட்சி நிறுவனமான என் டி ரி வியின் பாதுகாப்பு விவகார ஆசிரியரான நிதின் கோக்கலே இந்தியாவும் சிறிலங்காவும் கூட்டாகத் தமிழீழ மக்களுக்கு எதிராக நடத்திய போரில் இந்தியாவின் வழங்கல்கள் பற்றியும் பங்களிப்பு விவகாரங்கள் பற்றியும் தனது ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார். ஐந்து எம் ஐ 17 ரக உலங்கு வானூர்திகளை நன்கொடையாக சிறிலங்கா வான் படைக்கு வழங்கிய இந்தியா ஒரு நிபந்தனையை மாத்திரம் விதித்ததாம். தயவு செய்து இந்திய வான் படை அடையாளங்களை நீக்கி விட்டு சிறிலங்கா வான் படை அடையாளங்களை இந்த உலங்கு வானூர்திகளில் பூசுங்கள் என்பது தான் அந்த நிபந்தனை.
முப்பது வரையான போர் தாங்கிகள் வேகத் தாக்குதல் கடற் கலங்கள் என்பன வற்றையும் இந்தியா உபகரித்ததாகவும் செய்திகள் கசிந்துள்ளன தமிழ் நாட்டுத் துறை முகங்கள் ஊடாகப் போர்த் தாங்கிகளை ஏற்றி அனுப்பினால் தமிழ் நாட்டில் எதிர்ப்புக் கிளம்பலாம் என்ற அச்சத்தால் கேரளா மாநிலத்துறைமுகங்கள் மூலம் அவை சிறிலங்காவுக்கு அனுப்பப் பட்டுள்ளனர். மேலும் வேவுத் தகவல்களை மாத்திரமல்ல தாக்குதல் அணி ஒன்றையும் இந்தியா அனுப்பியுள்ளதாக அறிய வருகிறது.
காயமடைந்த இந்தியப் படையாட்கள் கேரள மாநிலத் துறைமுகங்கள் மூலமாக இந்திய மருத்துவ மனைகளுக்கு எடுத்துச் செல்லப் பட்ட தகவலும் கிடைத்துள்ளன கொல்லப்பட்ட இந்தியப் படையாட்களின் உடல்களை வன்னி மண்ணில் பொது மக்கள் கண்டெடுத்துப் புதைத்துள்ளனர். வன்னிப் பெருநிலபரப்பின் கரையோரங்களில் வாழும் நெய்தல் நில மக்கள் மீன்பிடி வள்ளங்கள் மூலம் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகவும் விடுதலைப் புலிகளின் கடற் பாவனையை முடக்கு வதற்காகவும் இந்திய கடற்படையும் சிறிலங்கா கடற்படையும் இணைந்து ஒரு இருக்கமான தடுப்பு வலயத்தைக் கடலில் நிறுவியிருந்தன.
இதை அவர்கள் இரும்பு வளையம் என்று அதாவது றிங் ஒப் ஸ்ரீல் என்று பெயரிட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்னடைவுக்கு இந்தியத் தலையீடு முக்கிய காரணம் என்பதில் சந்தேகமில்லை பிராந்திய வல்லரசான இந்தியா உலகின் மூன்றாவது மிகப் பெரிய தரைப்படை ஐந்தாவது மிகப் பெரிய வான் படை எட்டாவது கடற்படை ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது அது மாத்திரமல்லாமல் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடாகவும் ஏவுகணைத் தொழில் நுட்பத்திலும் இந்தியா உலக தரத்திற்கு உயர்ந்துள்ளது.
தமிழீழத்திற்கு எதிரான போர் வெற்றி அடைவதற்கும் புலிகள் தோற்கடிக்கப் படுவதற்கும் இந்தியா முக்கிய காரணியாக இடம் பெறுகிறது முடிவடைந்த போர் இந்தியாவின் போர் என்று அதிபர் மகிந்தாராஜபக்சே கூறியது நியாய மான நிலைப் பாடுதான் எனினும் சிறிலங்காவை சீக்கிரம் பூட்டான் போல் கைப் பொம்மையாக வைத்திருக்க இந்தியாவால் முடியுமா என்பது சந்தகமே சிங்கள மக்களும் அரசியல் வாதிகளும் இந்திய ஆளுமையை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இந்தியா மாத்திரமல்ல இருபது வரையிலான நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்குப் பிற்புலமாக நின்றுள்ளன சிறிலங்கா இராணுவம் கிளிநொச்சி வரை முன்னேறுவதற்கு முன்பு கொழும்பின் வெளிநாட்டுத் தூதரகங்களின் இராணுவ வல்லுநகர்கள் அடிக்கடி வன்னிக்கு வருகை தந்து சிங்கள இராணுவ அதிகாரிகளைச் சந்தித்துச் சென்றுள்ளனர். ஆயுத உதவி நிதியுதவி இராசதந்திர அனுசரணை நேரடி இராணுவப் பங்களிப்பு என்று பலவிதமான உதவிகள் சிறிலங்காவிக்கு இந்த இருபது நாடுகளிடமிருந்து வந்து சேர்ந்தன யப்பான் நாடு தாரளமான நிதி வழங்குவது பொல் ஈரான் லிபியா போன்ற நாடுகளும் நிதிவழங்கின இந்திய நிதி உதவியும் கிடைத்தது.
தன்னை ஒரு புரட்சி வாதியாகக் காட்சிப் படுத்தும் லிபியத் தலைவர் கடாபி தமிழிழத் தலைமையைப் பயங்கரவாதிகள் என்று அழைத்தது ஒரு வியப்பூட்டும் செய்தி அவர் செய்த பயங்கரவாதத்தை வேறு எந்த நாட்டால் செய்ய முடியும்? பிரான்சு யப்பான் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு எதிராகப் பலகாலமாகச் சுதந்திரப் போர் நடத்திய வியற்நாம் அடித்த பல்டி கலைஞரின் சாதனையை விஞ்சுவதாக அமைந்தது பயங்கர வாதத்தை முறியடித்ததற்காக வியற் நாம் சிறிலங்காவிக்கு வாழ்த்து தெரிவித்தது.
பல வருடங்களாக இருபது வருடமாகக் கூட இருக்கலாம் கியூபாத் தலைவர் பிடல் கஸ்ரோ தமிழீழத்திற்கு தீவிர ஆதரவு வழங்கி வந்தார் இறுதி கட்டத்தில் அவர் சிறிலங்காவிற்குச் சார்பாகக் குரல் கொடுத்த தோடு பொலிவியா போன்ற தென் அமெரிக்க நாடுகளையும் தமிழீழத்திற்கு எதிராகத் திருப்பி விட்டார். இது தமிழீழ ஆர்வலர்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகும்.
இந்திய-கியூபா நட்புறவுக் கழகத்தின் அதிகாரி ஒரு வருடன் தொலைபேசியில் பேசும் வாய்ப்பு கிடைத்தது அந்த அதிகாரி ஒரு தமிழ் பேசும் பெண் தலைவர் கஸ்ரோ ஏன் இப்படிச் செய்தார் என்று எனக்கு புரியவில்லை என்று அவர் கண்ணீர் வடித்தார். தமிழீழப் போரின் இறுதிக் கட்டத்திற்கு முன்பே தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் உலகத்தை எதிர்த்துப் போராட முடியாத எமது இயலாமையை நன்கு உணர்ந்தார்.
அமெரிக்கா இங்கிலாந்து ஐரோப்பியா ஒன்றியம் உட்படப் பல உலக நாடுகள் தமிழீழம் என்ற புதிய நாடு உருவாவதைத் தடுப்பதில் கவனஞ் செலுத்தின தமிழீழ அழிப்பை ஒரு கொள்கையாக அவை ஏற்றுக் கொண்டன. எண்ணிக்கையில் குறைந்த தமிழீழ மக்களை அழிக்கும் உலக நாடுகளின் கூட்டு முயற்சிக்கு முன்னுதாரணம் காண்பது கடினம் ஒருவரோடு ஒருவர் மோதி ஈற்றில் மொத்தமாக அழிந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஒரு குறு நில மன்னனை அழிப்பதற்கு ஒன்று சேர்ந்தார்கள் என்ற வரலாற்றுச் செய்தி எமது நினைவுக்கு வருகிறது.
தனது உள்ளக் குமுறலைக் கேலிப் பேச்சாக வெளிப்படுத்தும் திறமை படைத்த பிரபாகரன் அவர்கள் தனக்கு அடுத்த வருடம் நோபல் பரிசு கிடைக்கப் போவதாகச் சொன்னார் எப்படி என்று விளக்கம் கேட்டவர்களுக்கு அவர் சொன்ன பதில் இந்தியா பாகிஸ்தான் சீனா ஆகிய மூவரையும் ஒரே நுகத்தடியில் பிணைத்த பெருமைக்காக எனக்கு இந்தப் பரிசு வழங்கப் பட வேண்டும்.
கஷ்மீருக்காக இந்தியாவும் பாக்கிஸ்தானும் நித்திய போர் புரிகின்றன. சீனாவும் இந்தியாவும் மோதுவதற்குத் தயார் நிலையில் இருக்கின்றன. ஆனால் இந்த மூவருக்கும் இடையில் தமிழீழத்தை அழிப்பது தொடர்பாக மிகச் சிறந்த புரிந்துணர்வும் கருத்தொற்றுமையும் இருந்ததை பாதிக்கப் பட்ட தமிழீழ மக்களாகிய நாம் நன்கு அறிவோம். நாம் பின்னடைவைச் சந்தித்திருக்கிறோம் என்பது உண்மையாக இருப்பினும், கற்ற பாடங்கள் நிறைய இருக்கின்றன.
மேற்கு நாடுகளின் சனநாயகப் பண்பாதாரங்களை உள்வாங்கிய உலகின் ஒரேயொரு விடுதலை அமைப்பு என்ற சிறப்பு விடுதலைப் புலிகளுக்கு உண்டு. புலம் பெயர்ந்த தமிழுறவுகள் மேற்கு நாடுகளில் நிலை கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் எடுக்க வேண்டும். நாம் கைவசம் இருக்கும் முட்டைகள் அனைத்தையும் ஒரே கூடைக்குள் போட்டு விட்டோம். இதனால் நாம் முடக்கப் பட்டுள்ளோம் நாம் ஏன் ஆசிய வல்லரசான சீனாவின் நட்பைக் கோரக் கூடாது இந்தியாவை நம்பி ஏமாந்தது போதாதா?
நாம் வழிபடும் தெய்வமாகப் பூசிக்கும் நேத்தாஜி ஜேர்மனி யப்பான் ஆகியவற்றின் நட்பை தேடிச் சேன்று பெற்றுக் கொண்டதால் இந்தியா சுதந்திரப் போராட்டம் மலினப் படவில்லையே. சிறிலங்காவில் சீனச் சார்பு கொமியூனிசக் கட்சியை உருவாக்கியவர் நாகலிங்கம் சண்முகதாசன் என்ற ஈழத்தழிழன் இவருடைய தலைமையைத் தமிழன் என்ற காரணத்திற்காக ஏற்க மறுத்த றோகண விஜேவீர ஜே வீ பி கட்சியை உருவாகினார் இன்று சீனாவின் ஆதரவு ஜே வீ பி அமைப்பிற்குக் கிடைத்துள்ளது.
அதன் பலமே சீன ஆதரவு தான். தமிழர் மண்ணுக்கு மீட்பர்களாகவும் அமைதி காப்பவர்களாகவும் வந்த இந்தியப் படையினர் செய்த அட்டூழியத்தை நாம் மறந்து விடலாகாது தமிழீழ வீடுகளில் முன்பு சாமி படத்திற்கு அருகாமையில் காந்தி நேரு படேல் நேத்தாஜி பகவத் சிங் போன்றோரின் படங்களையும் தொங்க விட்டு வணங்கினோம்.
அப்படி இருந்தும் இந்திய மத்திய அரசு சிங்களவனோடு இணைந்து எம்மைத் துவசம் செய்வதில் தயக்கம் காட்டவில்லை. இந்தியப் படையினர் வந்து சென்ற பின் எமது வீட்டுச் சாமி படங்களுக்கு அருகாமையில் நேத்தாஜி பகவத்சிங் ஆகியோர் படங்கள் மாத்திரம் தொங்குகின்றன பிரபாகரன் படத்தை எமது நெஞ்சில் சுமக்கிறோம்.
- க. வீமன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment