Saturday 22 May 2010

போர்க்குற்றம் இழைத்த சிங்கள அரசுக்கு நிதிச் சன்மானமளிப்பதற்கு உலகம் தயார்?


தமிழீழ மக்களுக்கு எதிராக மிக மோசமான போர்க்குற்றங்களையும், மானிடத்திற்கெதிரான குற்றச்செயல்களையும் இழைத்த சிங்கள அரசுக்கு நிதிச் சன்மானமளிப்பதற்கான சமிக்ஞைகளை பன்னாட்டு நாணய நிதியம் வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் பாதீட்டின் துண்டுவிழும் தொகையை ஈடுசெய்ய முடியாது திண்டாடும் சிங்கள அரசின் பன்னாட்டு நாணய இருப்பு, கடந்த ஆண்டு ஏறத்தாள நூறு கோடி டொலராக வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து பன்னாட்டு நாணய நிதியத்திடம் இருநூற்று அறுபது கோடி டொலர் கடனுதவியைக் கோரியிருந்தது.

இது தொடர்பாக இவ்வாரம் கொழும்பு சென்று ஆய்வுகளை நிகழ்த்தியிருந்த பன்னாட்டு நாணய நிதியம், ஒரு நான்கு தொடக்கம் ஆறு வாரங்களுக்குள் சிங்கள அரசுக்கு முதற்கட்டமாக முப்பதொரு கோடியே எண்பது இலட்சம் டொலர்களை கடனுதவியாக வழங்குவதற்கான சமிக்ஞைகளை வெளியிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை உறுதிசெய்யும் வகையில் கருத்து வெளியிட்டிருக்கும் பன்னாட்டு நாணய நிதியத்தின் கொழும்பு செயலகத்தின் தலைமையதிகாரி பிறயன் எய்ற்கின், தமது ஆய்வுகளின் பெறுபேறுகள் சாதகமாக அமையும் பட்சத்தில் திட்டமிட்டபடி சிறீலங்கா அரசாங்கத்திற்கான முதற்கட்ட கடனுதவியாக முப்பத்தொரு கோடியே எண்பது இலட்சம் டொலர்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒருபுறம் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்காக சிங்கள அரசுக்கான ஏற்றுமதி வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் இடைநிறுத்தியிருக்கும் அதேவேளை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், அமெரிக்காவும் முதன்மைப் பாத்திரம் வகிக்கும் பன்னாட்டு நாணய நிதியம் சிங்கள அரசின் போர்க்குற்றங்களுக்கு சன்மானமளிக்கும் வகையில் கடனுதவி வழங்க முற்படுவது தமிழீழ மக்களிடையே அதிருப்தியையும், பல்வேறு சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.

No comments:

Post a Comment