Monday 17 May 2010

அறிஞரால் மீட்கப்பட்ட அழகிய டென்மார்க்


சோகத்தை ஆற்றுவது மட்டும் வாழ்க்கையாகிவிடாது, அதுபோல அந்தச் சோகங்களில் இருந்து மீண்டெழுவதற்கான வழியை சொல்வதால் மட்டும் அந்தச் சோகங்கள் விலகிவிடாது.

சோகங்களை விலக்கும் சிறந்த மருந்து செயற்பாடு என்று கூறுவார்கள். நாம் காலத்தையும், சூழலையும் நல்லபடியாக விளங்கி செயற்பட்டால் சோகங்களை வெல்லும் மருந்து அதற்குள்தான் புதைந்து கிடக்கிறது என்பதை இலகுவாகக் கண்டு கொள்ளலாம்.

இன்று நமக்கு ஏற்பட்டது போன்ற பாரிய நெருக்கடி இரண்டாவது உலக யுத்தம் முடிவடைந்த பின்னர் டென்மார்க்கிற்கும் ஏற்பட்டது. போரில் ஈடுபட்டு காயப்பட்டு, இளவயதிலேயே கல்வி இழந்து வாழவழி தெரியாது துவண்டு நின்றார்கள். இவர்களை உடனடியாக சமுதாய வாழ்வில் இணைக்க முடியாதிருந்தது. ஆகவே அவர்களை சமூகத்திற்குள் இணைவாக்கம் செய்ய புதிய சீர்திருத்தப் பாடசாலைகளை ஒழுங்கு செய்ய வேண்டியிருந்தது.

போர் பற்றியும், எதிரிகள் பற்றியும் வெறுப்பாக மூளைச் சலவை செய்யப்பட்டு நின்ற மக்களை சரியானசலவை செய்து, சுயபுத்தியுள்ள மனிதராக மாற்ற வேண்டியிருந்தது. நம்மைப் போல துரோகிப்பட்டம் கட்டி ஒருவரை ஒருவர் வெறுக்கும் போக்கு அன்றைய டேனிஸ் சமுதாயத்திலும் இருந்தது.

போர் விதவைகளையும், ஊனமுற்றவர்களையும், மனோநிலை பாதிக்கப்பட்டவர்களையும் உருவாக்கி பிசாசு பிடித்து சதுராடுவது போன்ற சமுதாயத்தை உருவாக்கியிருந்தது. இன்று தமிழர் தாயகத்தில் நடைபெற்ற அத்தனை அவலங்களையும் அன்று டென்மார்க் உட்பட ஐரோப்பாவின் அனைத்து நாடுகளும் சந்தித்தன.

இந்த அவலங்களில் இருந்து விடுபடுவதற்காக அமெரிக்கா வழங்கிய மாஞ்செஸ்டர் புரொஜக்ட் என்னும் பேருதவியை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. போரினால் நொந்து நூலான டென்மார்க் எப்பக்கமும் சேராமல் நடுநிலையாகவே நிற்க முதலில் முடிவு செய்தது.

ஆனால் அமெரிக்கா அதற்கு இணங்கவில்லை. நேசநாடுகளின் அணியில் இணைந்தால் மட்டுமே அந்த உதவிகளை பெற்று மீண்டெழ முடியும் என்ற நிபந்தனையைப் போட்டது. அப்போது மக்கள் டேனிஸ் அறிஞர்களிடம் அதற்கான முடிவெடுக்கும் அதிகாரத்தை விட்டார்கள்.

அவர்கள் முதலாவது பிரதான கொள்கையை வகுத்தார்கள். போர் ஏற்படுத்திய அச்சம் இன்னொரு போருக்குள் தள்ளும் என்ற மறு அச்சத்தை ஏற்படுத்தும். போரில் வெற்றி பெற்றவனே அதனால் பெரிதும் பாதிக்கப்படுவான். ஆனால் அவனை வெற்றிபெற தோல்வியுற்ற அணிக்கு வலு இல்லை.

இதுவே யதார்த்தம், இதை நன்குசீர்தூக்காமல் கோபத்தினால் துப்பாக்கிகளைத் தூக்கி, சிறுசிறு தாக்குதல்களை நிகழ்த்தினால் என்ன நடக்கும்? நலிந்துவிட்ட சிறிய சமுதாயத்தை வெற்றி பெற்றவன் மேலும் சீரழித்து சிதைத்து சின்னாபின்னமாக்கி விடுவான்.

ஆகவே ஆயுதக்கலாச்சாரத்தை அறிவினால் முடிவுக்குக் கொண்டுவருவோமென முடிவு செய்தார்கள். இனிமேல் ஆயுதம் ஏந்திய போர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்கள்.

அப்படி திடீரென ஆயுதம் ஏந்திய போர் இல்லை என்று கூறினால் போருக்கான மூளைச் சலவை செய்யப்பட்டோர் மத்தியில் அவர்கள் துரோகிகளாக நிற்க வேண்டிய அவலம் ஏற்படும். மிக இலகுவாக அந்த அறிஞர்களை துரோக அணிக்குள் தள்ளிவிட முடியும், காரணம் சூழல் அப்படி..

எனவே அனைவரும் புதிய கோணத்தில் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தினார்கள். இனிமேல் ஐரோப்பாவில் எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும் அதை ஆயுதம் மூலம் தீர்ப்பதில்லை என்று புதுவிதமாக எழுதினார்கள். உதாரணமாக சுவீடனுக்கும், டென்மார்க்கிற்கும் என்ன பிரச்சனையும் ஏற்படலாம், ஆனால் அதைத் தீர்க்க ஒருவரை நோக்கி மற்றவர் ஒரு துப்பாக்கி வேட்டைக்கூட தீர்க்கக் கூடாது என்று எழுதினார்கள்.

போரில் வென்றவர்களும், தோற்றவர்களும் ஒருவரை நோக்கி மற்றவர் ஆயுதத்தைத் தூக்குவதில்லை என்ற ஒப்பந்தம் எழுதப்பட்டது. அதனுடைய வாசகங்கள் யாரையும் துரோகிப் பட்டத்திற்குள் தள்ள முடியாதளவிற்கு செம்மையாக எழுதப்பட்டன. இதனால் ஐரோப்பா முழுவதும் உயிரச்சம் ஒழிக்கப்பட்ட புதிய சூழல் உருவானது. மாஞ்செஸ்டர் திட்டத்தை மதிப்புடன் டென்மார்க் ஏற்றுக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. இன்று உலகின் மகிழ்ச்சியான மக்கள் வாழும் முதல் நாடு என்ற இடத்திற்கு டென்மார்க் தன்னை உயர்த்திக் கொள்ள அன்று அறிஞர்கள் எடுத்த முடிவே ஆதாரமாக அமைந்தது.

இதேபோல ஒரு கோட்பாட்டைக் கடைப்பிடித்து, சிறீலங்காவில் எந்தவொரு பிரச்சனைக்கும் துப்பாக்கி வேட்டு தீர்க்கப்படக் கூடாது என்ற ஒப்பந்தத்தை தமிழ் தலைவர்களும் சிங்களத் தலைவர்களும் எழுதினால் முதல் அச்சம் தீரும். இராணுவ முகாம்கள் அனைத்தையும் மக்கள் வாழிடங்களை விட்டு அகற்றும் முதல் காரியத்திற்கு அது உதவியாக அமையும் என்று பேராசிரியர் சபா. இராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் எமக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பின்வரும் சிந்தனைகளை எழுப்பியுள்ளார். ஜப்பானும், ஜேர்மனியும் இரண்டாம் உலகப் போரில் தோல்வி கண்டாலும் பொருளாதாரத்தில் பெரிய வெற்றி பெற்றன என்று நாம் பேசுகிறோம். ஆனால் அந்த வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது எது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜப்பானும், ஜேர்மனியும் மறுபடியும் இராணுவத்தை அமைப்பதில்லை என்ற உடன்படிக்கை செய்தபோதுதான் அவர்களை தோற்கடித்தவர்களுக்கு ஆறுதல் ஏற்பட்டது. அதன் பின்னரே அபிவிருத்திக்காக அவர்கள் வழி விட்டார்கள். அதைப் பயன்படுத்தி அன்று தம்மை சிதைய விடாமல் காத்துக் கொண்டு, இரு நாடுகளும் எழுந்து நின்றன என்று கூறுகிறார்.

மேலும் வெளிநாடுகளில் எமது பிள்ளைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு, அங்குள்ள பிள்ளைகளை மறுபடியும் போர்ச் சூழலுக்குள் தள்ளிவிட எத்தனிக்கும் ஆவேசங்களை நாம் அறிவுக்குள் போட்டு ஆராய வேண்டும்.

மேலும் சிங்களவர்களை தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எமது போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. எமது வாழ்க்கைத் தரத்தை நாம் விரும்பியபடி உயர்த்தும் உரிமைக்காகவே போராடினோம் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்கிறார்.

பகையுணர்வு கொண்டு துணை இராணுவக்குழுக்களும், இராணுவமும் அங்கிருப்பது தொடருமானால் இளைஞர்கள் மேலும் அங்கிருந்து வெளியேற நேரிடும். அப்படி வெளியேறினால் ஒரு தேசம் படிப்படியாக அழிவடைய அதுவே போதுமானதாக அமையும். மேலும் வெளியே சென்ற இளைஞர் திரும்பி வரக்கூடிய அமைதிச் சூழல் நாட்டில் இல்லாவிட்டால் அந்த அழிவு தொடரும். இவை மூன்றும் தற்போது தமிழர் தாயகத்தில் இருக்கின்றன.

எனவே..

முதலில் வெளிநாடுகளில் உள்ள ஊக்கமுள்ள இளைஞர்கள் தாயத்தை மேம்படுத்தும் நோக்குடன் அங்கு பாதுகாப்பாக போய்வரக் கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும். பதிய திட்டங்கள் தீட்டப்பட வேண்டும், அத்தோடு அவற்றைச் செயற்படுத்தப்படக் கூடிய வலுவையும் இளைஞரிடையே உருவாக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக எமக்காக போராடியவர்கள் இப்போது என்ன நிலையில் இருக்கிறார்கள். மதிப்பிற்குரிய அந்தப் பெருமக்களை காப்பாற்றி, சிறையில் இருந்து மீட்க வேண்டிய கடமை இருக்கிறது. இவற்றையெல்லாம் நாம் சிந்திக்க வேண்டும் என்று எழுதியுள்ளார்.

இதை எண்ணத்தில் கொண்டு, கூடவே சமீபத்தில் டென்மார்க்கின் 50 அறிஞர்கள் டேனிஸ் சமுதாயத்தை காப்பாற்றிய நிகழ்வை மனங்கொள்ள வேண்டும்.

முகமது கேலிச்சித்திர விவகாரத்தில் டென்மார்க் சிக்குண்டு, டேனிஸ் பொருட்கள் மத்திய கிழக்கில் எரிந்து கொண்டிருந்தன. சின்னஞ்சிய வெறும் 50 இலட்சம் மக்களைக் கொண்ட டென்மார்க் தாங்க முடியாத ஆபத்தில் சிக்கிக் கொண்டது.

அப்போது மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் டேனிஸ் பிரதமரை சந்திக்க அழைத்தார்கள். ஆனால் அவர்களை சந்திக்காமலே டேனிஸ் பிரதமர் காலம் கடத்தினார். என்ன நடந்தாலும் அமெரிக்காவைப் பகைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.

இந்த நேரத்தில் ஓய்வு பெற்ற டேனிஸ் பல்கலைக்கழக அறிஞர்கள், விரிவுரையாளர்கள், இராணுவ கொமாண்டர்கள், முன்னாள் தூதுவர்கள் என்று 50 பேர் ஒன்றிணைந்து டேனிஸ் பிரதமரின் பரிதாபகரமான அரசியலை கண்டித்து அறிக்கை விட்டார்கள். மத்திய கிழக்கு நாடுகளின் கோபத்தைத் தணிக்க அந்த அறிக்கை பேருதவியாக அமைந்தது.

அப்படி அரசியல்வாதிகள் பதவிக்காக நாட்டை பாதாளத்தில் கொண்டு செல்லும்போது அறிவியல் அறிஞர்கள் நாட்டை பாதுகாக்க முன் வந்து சரியான கருத்தை சொன்னபோது, டேனிஸ் சமுதாயம் அதை வரவேற்றது. நமது பொருட்களை எரிக்கும் முஸ்லீம் நாடுகளுடன் சேர்ந்த துரோகிகள் என்று அவர்களை அவதூறு செய்யவில்லை. உண்மையை சீர்தூக்கும் சமுதாயமாக அவர்கள் இருந்தமையால் பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொண்டார்கள்.

ஆகவே எதைச் செய்வதற்கும் சமுதாயம் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். அறிஞர் சபா. இரேஜேந்திரன் எழுதியிருப்பது போல ஆயிரம் கருத்துக்கள் வரவேண்டும். அவற்றை நாம் சீர் தூக்க வேண்டும்.

டென்மார்க் போன்ற ஒரு நாட்டில் இருந்து கொண்டே இவற்றையெல்லாம் விளங்காமல் வெற்று பாமர மக்களாக நாங்கள் வாழக்கூடாது. அழுவது அறிவை இழக்கச் செய்யும்.

புதிய வலுவுடன் எழுவதே புதுமாத்தளனுக்கு மருந்தாகும்.

No comments:

Post a Comment