Thursday 13 May 2010

விழி மூடாத வீரர் இறப்பிலும் பெறுவர் வெற்றி..


வில்லுக்கு விஜயன் என்று சொல்லுவார்கள். அப்படிப்பட்ட மகா மேதையான அர்ச்;சுனனையே வெல்லுமளவிற்கு வில் வித்தையில் வல்லவனாக வருகிறான் ஏகலைவன் என்ற வேடன்.

மண்ணால் துரோணரின் சிலையைச் செய்து, அதையே குருவாக ஏற்று பக்தியுடன் சகல வித்தைகளையும் அவன் கற்றுக் கொண்டான்.

குருவாகிய துரோணர் வித்தையைக் கற்றுக் கொடுக்காவிட்டாலும், அவரே நேரில் வந்து கட்டைவிரலைத் தானமாகத் தரும்படி கேட்டதும், அதை அரிந்து கொடுத்தான் வேடனான ஏகலைவன்.

குருவின் மீதான மதிப்பிற்கும் பக்திக்கும் மேல் வித்தையோ வெற்றியோ பெரிதல்ல என்பதை உலகிற்கு உணர்த்திய உன்னதத்தின் உன்னதமான பண்பின் சிகரமே அந்தப் படிப்பறியா வேடன்.

அதுபோல…

ஆண் வீரர்களுடனேயே பேரிடுவேன் என்ற இலட்சியம் கொண்டவர் அவன் குருவான துரோணர். அவரைக் கொல்வதற்கு ஆணும், பெண்ணுமில்லாத அலியாகிய ஒருவனை அனுப்புகிறான் கண்ணன். அவ்வளவுதான் வில்லையும் அம்பையும் வீசிவிட்டு போர்க்களத்திலேயே நிஷ்டையில் இருக்கிறார் துரோணர். அவருடைய தலையை போரின்றி அந்த அலி இலகுவாக வெட்டி விடுகிறான்.

போர் என்பது வெற்றி பெறுவதற்காக நடாத்தப்படுவதல்ல என்ற உண்மையை விளங்க இவைகளைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்..

ஏகலைவனும், அவனுடைய குருவாகிய துரோணரும் வெற்றிபெற வாய்ப்பிருந்தும், போரின் ஒழுக்க நெறி முறையைக் கடைப்பிடித்து தோல்வியடைந்தார்கள். அவர்களுடைய தோல்வியில் போர்க்களம் பெருமைப்பட்டது.

களத்தில் நிற்கும் ஒவ்வொரு வீரனும் தனது வெற்றிக்காக எதையும் செய்யலாம் என்று கருதவே கூடாது. நாம் நடத்தும் போரினால் யாருக்கு பெருமை என்றே கருத வேண்டும்.

தமது போரினால் போர்க்களம் பெருமை பெற வேண்டுமெனறு வாழ்ந்த வீரர்களே உலகப் புகழ் பெற்ற பண்பாளர்களாக விளங்கினார்கள்.

இதைத் தெரியாத ஒருவன் கையில் ஆயுதத்தைக் கொடுப்பது அன்றய போர் மரபல்ல..

சங்கப்பாடலில் போர்க்களத்தின் பெருமை காத்த இளைஞன் ஒருவன் வருகிறான். களத்தில் நிற்கும் அவனுடைய மார்பை நோக்கி எங்கிருந்தோ ஓர் ஈட்டி பாய்ந்தபடி வருகிறது. தடுக்க முடியாதளவிற்கு அது அவனை நெருங்கிவிட்டது. அந்த கணத்திற்குள் கணமான அற்ப பொழுதில் அவன் ஆழமாகச் சிந்திக்கிறான்…

தனக்கு வரக்கூடிய அவமானத்தை இப்படியெல்லாம் பட்டியலிடுகிறான்..

நான் இறப்பது உறுதியாகிவிட்டது, ஆனால் கண் இமைகளை மூடியபடி இறந்து கிடந்தால் அது என்னைப் பெற்றவளுக்கு அவமானம்..

உயிருக்குப் பயந்து கண்களை மூடினால் நான் பிறந்த தமிழ் மானத்திற்கு அவமானம்..

எல்லாவற்றிலும் மேலாக மரணபயத்தால் கண்களை மூடினால் பிறந்த பிறப்பிற்கே அவமானம்..

அதைவிட முக்கியம் நான் நிற்கும் போர்க்களம்.. கண்களை மூடியபடி நான் இறந்தால் நான் நிற்கும் போர்க்களத்திற்கே அவமானம்..

பயந்து கண்ணை மூடுவதால் வரக்கூடிய அவமானம் ஒன்றா இரண்டா ஓராயிரம் என்பதை ஒரே நொடியில் உணர்கிறான்… கண்களை மூடாமலே அந்த ஈட்டியை மார்பில் ஏந்தி களத்தில் விழுகிறான்.

விழித்தபடி வீரமரணமடைந்த அவனுடைய உடலை பார்த்தவர்கள் அனைவரும், வென்றவனை விட பெரும் புகழ் இவனுக்கே என்று போற்றி, அவன் வீர உடலத்தில் வாகை மாலையைச் சாற்றி, அவன் விழுந்த மண்ணை கண்களில் ஒற்றி முத்தமிடுகிறார்கள்..

அன்றைய போரில் மரணத்தால் வெற்றி பெற்றான் அந்த வீரத் தமிழ் இளைஞன்.

அவன் விழுந்த விழுகையை 2000 ம் வருடங்களாக உலக மாந்தரால் அழிக்க முடியவில்லை. அன்று அவன் மீது ஈட்டியை எறிந்தவன் யாரென்று தெரியவில்லை, அதனால் அவன் என்னதான் பெற்றான் என்பதும் தெரியவில்லை. ஆனால் விழி மூடாத இந்த வீரனோ போர்க்கள மானத்தை காத்த வீரனாகி யாருமே பெற முடியாத வெற்றியைப் பெற்றான்..

இதுபோல அன்று…

புதுமாத்தளனில் இறந்துகிடந்த எத்தனையோ புலி வீரர்களின் உடலங்களை நீங்கள் இணையத்தில் பார்த்திருப்பீர்கள்..

பலருடைய தலைகளில் பாய்ந்த குண்டு மிக அருகில் வைத்து சுடப்பட்டிருப்பதையும் பார்த்திருப்பீர்கள்.. ஆனால் இவ்வளவு அருகில் வைத்து சுடப்பட்ட போதும் இந்த வீரர்களின் கண்கள் குவளை மலர் போல திறந்தபடியே இருக்கின்றனவே ஏன்..?

இவர்கள் சங்கப்பாடலில் வரும் வீரன் புகழை அறிந்தா இப்படி விழித்திருந்தார்கள்.. அன்று வீழ்ந்த அந்தத் சங்கத்தமிழ் இளைஞனின் வீரத்தை இன்று வீழ்ந்த இந்தப் புலி வீரர்கள் கண்களில் காண்கிறோம்.

என்னே ஒற்றுமை.. பார்க்கப் பார்க்க ஆன்றவிந்த தமிழ் மனம் பெருமையால் இறும்பூதடைகிறது..

தாம் நின்ற போர்க்களத்தின் பெருமையை குலைய விடாமல் மரணத்தைத் தேடியிருக்கிறார்கள் இந்தப் புலி வீரர்கள்..

ஆயிரம் ஆண்டுகள் போகட்டும் இந்த வீரர்களின் களப் பெருமையை யாரால் அழிக்க முடியும் ?

போருக்கு ஒரு நெறி முறை இருக்கிறது. சிறீலங்கா அரசு புதுமாத்தளனில் நடாத்தியதைப் போன்ற தர்ம நெறி முறைகள் குலைந்த ஒரு போரை இந்தியா நடத்தப் போவதில்லை என்று ப.சிதம்பரம் என்ற இந்திய உள்துறை அமைச்சர் சற்று முன் கூறியுள்ளார்.

நடாத்தப்பட்டது நெறி முறை குன்றிய மோசமான போர் என்பதை சிறீலங்கா அரசின் உற்ற நண்பர் ஒருவரே கூறியிருப்பது வரலாற்றில் மிக நல்ல பதிவாகும்.

ஆம்..

சிறீலங்காவின் போர் நெறிமுறைகள் பண்டைத் தமிழ் வீரத்தின் இலக்கணங்களுக்கு இணையானதல்ல. சிங்கள இராணுவம் போல நெறி முறை குன்றிய போரை நடாத்துவது வீரப்புலிகளின் வாழ்வில் கிடையாது.. அதைவிட மரணமே மேல் என்ற முடிவிற்கே அவர்கள் வருவார்கள்..

இதோ ஓர் உதாரணம்…

சிங்கள மன்னனும் தன் தந்தையுமான தாதுசேனனை பதவிக்காக கற்சுவரில் வைத்து கட்டிக் கொல்கிறான் அவன் பெற்ற மகனான காசியப்பன்.

அப்போது கடைசிக் கல்லை வைத்து அவன் கண்களை மூடுகிறார்கள் சுற்றி நின்ற சிங்களப் படையினர். அந்தக் கணம் , மகனே கண்.., என்று ஓலமிடுகிறான் தாதுசேனன்.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய இடம் கண் என்று ஓலமிடும் இடமாகும். அன்று கண்ணை மூட மறுத்த சங்கத்தமிழ் வீரனுக்கும், கண்களில் மண் அடிக்கப்பட்டதால் , மகனே கண்.., என்று அலறிய தாதுசேனனையும் இணைத்துப் பார்த்தால் இரு இனங்களுக்குமான போர் மரபின் வேறுபாடு புரியும்.

இத்தோடு இன்னொரு அழகிய உதாரணம்..

அன்று கற்சிலையான சிவபெருமானின் கண்ணில் இரத்தம் வடிகிறதே என்று தெரிந்ததும் தன் கண்ணையே பிடுங்கி அந்தச் சிலையில் வைத்தான் தமிழ் வேடனான கண்ணப்பன்.

சிலையான போது கண்ணுக்கு அழுதான் சிங்கள மன்னன்..

சிலையான சிவன் அழுதபோது தன் கண்ணையே பிடுங்கி கொடுத்தான் தமிழ் கண்ணப்பன்.

இதுதான் சிங்களவருக்கும் தமிழருக்கும் உள்ள வேறுபாடு…

கண்ணை மூடாத, கண்ணுக்காக அஞ்சாத கண்ணான வீரர்களைப் பெற்ற நாம், மரணித்த நம் வீரரின் திறந்த கண்களைப் பார்த்துச் சிரிப்பதா.. இல்லை புதுமாத்தளன் சோகமென்று கண்ணீர் விட்டு புலம்புவதா..

அழுது.. புரண்டு.. அரும் பெரும் சங்கத்தமிழ் வீரனின் புகழை அன்றய நம் தமிழ் மக்கள் அழிக்கவில்லை..

அதே புகழ்ப் போரை நடாத்திய நம் புலி வீரர்கள் கண்களைப் பார்த்து புலம் பெயர் தமிழரான நாம் புலம்புவது சரியா…?

சிந்தித்துப் பாருங்கள்..

No comments:

Post a Comment