Monday, 10 May 2010

இது அழுவதற்குரிய நேரமல்ல எழுவதற்குரிய நேரமாகும்..


நமது நாட்டில் சில ஊர்களில் புதுமாற்று கட்டுவது என்றொரு வழமை இருக்கிறது. புதுமாத்தளன் என்ற சொல்லின் ஓசை இந்த புது மாற்று கட்டுவது என்ற சொல்லின் ஓசையோடு இணைந்து நிற்கிறது.

எங்கு இறப்பு நடந்தாலும் இழவு காப்பதற்காக வயதான பெண்கள் போவார்கள். இவர்கள் இழவு வீட்டில் இரவு நேரத்தில் படுத்திருந்து கண்ணீர் விடும் இதயங்களுக்கு ஆறுதல் தருவார்கள்.

தமது அயலவரை இறப்பின் சோகத்தில் இருந்து விடுவிப்பதற்காக இவ்வாறு அங்கு சென்று ஆறுதல் கூறி, கவலைகளை பழைய துணி களைவது போல களையச் செய்வார்கள்.

அப்படிக் கவலையை ஆற்றவும், தேற்றவும் செல்லும் பெண்கள் மறுநாள் அதிகாலை தாங்கள் உடுத்திருந்த பழைய உடுப்பைக் களைந்து சலவைத் தொழிலாளியிடம் கொடுத்துவிட்டு, நன்கு சலவை செய்யப்பட்ட பிடவையை அணிந்து வீடு செல்வார்கள். இதை புதுமாற்று என்பார்கள்.

இப்படி பல நாட்களாக பெண்கள் வருவதும், அழுவதும் ஆறுதல் சொல்வதும், மாற்றுக்கட்டுவதும் தொடர்ந்து நடைபெறும். புதுமாற்றுக் கட்டும்போதே பழைய துயரங்களை எல்லாம் மறந்து புத்துணர்வு பெற்றுவிடலாமென்ற செய்தியும் கூடவே பரிமாறப்படும்.

அழுக்கான ஆடைகளை தினசரி சலவைக்காக கொடுத்துவிட்டு, அதேபோல தோய்த்து உலர்ந்த புதிய மாற்றுக்களை கட்டுவதால் கவலைகள் கழிந்து போகின்றன என்ற உளவியல் கருத்தை நமது மக்கள் புதுமாற்று மூலம் கச்சிதமாக அறிமுகம் செய்தார்கள்.

புதுமாத்தளன் சோகங்களையும் நாம் புதுமாற்று கட்டுவதுபோல படிப்படியாக மனதில் இருந்து அகற்றி புதுவலு பெற வேண்டும். எல்லோரும் கவலைகளை மறந்து புதுமாற்று கட்டுங்கள் என்ற தகவலே புதுமாத்தளன் என்ற பெயரிலும் கலந்திருப்பதாகக் கருத வேண்டும்.

ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லி, பழைய சோகங்களை அழுக்குற்ற அடைகள் போல அகற்றி, தினசரி புதுவலு பெறவேண்டும். ஏனென்றால் இறந்த மக்களை மறுபடியும் உயிருடன் மீட்க முடியாது, அந்த அவலத்தை பழைய துணி போல களைந்து நமது உள்ளத்திற்கு புத்துணர்வுகளால் புதுமாற்று கட்ட வேண்டும்.

அப்படி நமது உள்ளங்கள் புத்தாடை கட்டி வராவிட்டால் போரின்போது சந்தித்த அவலத்தைவிட பேரவலத்தை போருக்குப் பிற்பட்ட இந்த வாழ்வில் சந்திக்க நேரிடும்.

போர் கொடியது என்றால் போரைவிடக் கொடியது போருக்குப் பிற்பட்ட காலமாகும். போரின் பின்னர்தான் உண்மையான அவலம் சமுதாயத்தை சூறையாடத் தொடங்கும்..

வெள்ளப்பெருக்கு வந்த பின்னர் வயிற்றோட்டம், வாந்தி போன்ற நோய்கள் பரவுவதைப் போல, போர் வந்த பின்னர்தான் பேரழிவு தனது கரங்களை விரித்துத் தாண்டவமாடும். அதை அறிவால் உணர்ந்து மக்கள் விழிப்படைய வேண்டும்.

அன்று…

சங்ககாலத்தில் நடைபெற்ற எண்ணற்ற போர்களால் ஒரு சீரழிந்த தமிழ் சமுதாயம் உருவானது. ஒழுக்கம் பெரு வீழ்ச்சி கண்டது.. சங்கத்தமிழ் அதன் பின்னர் ஆரியக் கலாச்சாரத்திடம் வீழ்ந்தது, அன்று வீழ்ந்தது வீழ்ந்ததுதான் இன்றுவரை அது மீண்டெழவே இல்லை.

ஆகவேதான்…

போரைவிட பெரும் திறமை போருக்குப் பிற்பட்ட வாழ்வை செம்மை செய்ய தேவைப்படுகிறது என்கிறார்கள் அறிஞர்கள்..

பேரறிஞரான திருவள்ளுவர், பெருந்துறவியான இளங்கோவடிகள் பெரும் பக்தரான காரைக்கால் அம்மையார் போன்றவர்கள் எல்லாம் போருக்குப் பிற்பட்ட தமிழ் இனத்தைக் காப்பாற்ற போராடினார்கள்.. திருக்குறள், ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ வேண்டுமென வலியுறுத்திய கண்ணகி கதை போன்றவற்றை எல்லாம் எழுதினார்கள்..

இவைகளை நாமும் நன்கு விளங்கிக் கொண்டு, இறந்தவர்களை எண்ணி அழுவதா இல்லை பாதிக்கப்பட்டவர்களைக் காக்க எழுவதா என்று சிந்திக்க முன்வர வேண்டும்.

மட்டக்களப்பில் குறுங்காலத்தில் 25.000 இளவயதுப் பெண்கள் கணவனை இழந்து, விதவைகளாக வலம் வருவதாக அண்மைய தகவல்கள் கூறுகின்றன..

அதுபோல யாழ்ப்பாணம், வன்னி, மன்னார் என்று நம் தமிழ் மண்ணே பல இலட்சம் விதவைகளால் நிறைந்துபோயுள்ளது..

தாலி கட்டிய பெண்களைவிட, தாலி அறுத்த பெண்களே அதிகமுள்ள இனமாக நம் இனம் தடுமாறி நிற்க்கிறது.

கணவனை இழந்து வாடும் கைமைத்துயர் போல ஒரு துயர் உலகில் இருக்க முடியுமா..

ஐரோப்பிய நாடென்றால் ஒரு பெண் மறுமணம் புரிய வழியிருக்கிறது, ஆனால் இறுக்கமான கிடுகுவேலித் தமிழ்ச் சமுதாயத்தில் அது அவ்வளவு சாத்தியமான விடயமல்ல.. இந்த இக்கட்டான சமுதாயத்தில் விதவைகளான பெண்களின் மறுமணத்திற்கு நாம் என்ன செய்தோம்.. தமிழ் சமுதாயத்தில் ஒரு விதவையின் வாழ்வு இறப்பை விட பெரிய கொடுமையல்லவா..?

இதுமட்டுமா..?

பெற்றோரை இழந்த பிள்ளைகள் பெரும் சமுதாய சீரழிவில் சிக்குண்டு போகக் கூடிய அபாயம் இருக்கிறது.. இப்பிள்ளைகளால் வரக்கூடிய அவலம் சாதாரணமானதல்ல.. பெரும் உளவியல் பாதிப்புக் கொண்ட ஒரு தலைமுறை உருவாகக் கூடிய அபாயம் தூரத்தே தெரிகிறது..

போரினால் கை, கால்களை இழந்து அங்கவீனமானவர்களுக்கு உரிய வாழ்வை அமைக்க யாதொரு ஏற்பாடும் செய்யப்படவில்லை..

சமீபத்தில் வன்னியில் நின்று போராடி இப்போது வீடுவந்துள்ள சிலர் தாம் யாழ்ப்பாணம் வந்து, உயிருடன் இருப்பதைவிட வன்னியிலேயே இறந்திருக்கலாம் என்று கண்ணீர் விட்டுக் கதறினார்கள்..

காரணம்..

அவர்களுடன் சேர அங்கிருக்கும் மக்கள் பயப்படுகிறார்கள். இதனால் புதியதோர் தீண்டாமை அங்கு உருவாகியிருக்கிறதாக சொன்னார்கள். நாடு காக்க போராடியவன் தீண்டத்தகாதவனாக நிற்க வேண்டிய அவலம் உருவாகியுள்ளதை யாராவது எண்ணிப் பார்த்தீர்களா ?

இதைத்தவிர இராணுவத்திடம் ஊதியம் பெற்று ஏராளம் தமிழ் சிறார்கள் உளவாளிகளாக நடமாடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. பிஞ்சில் பழுத்துவிட்ட இவர்கள் இப்போது சாதாரண குடும்பச் சண்டைகளுக்குள்ளும் துப்பாக்கியை நீட்டுகிறார்கள்.

பிரபாகரன் வாழ்ந்த வீடே நள்ளிரவில் முகமூடி போட்டவர்களால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டுவிட்டது.

யாழ்ப்பாணத்தில் சிங்களக் கடைகள் வகை தொகையின்றி முளைக்க ஆரம்பித்துவிட்டன..

பத்துவயது, பதினொரு வயதுச் சிறுமிகளை கடத்தினார்கள், இப்போது அதைக் காரணம் காட்டி மறுபடியும் வீதிச் சோதனைச் சாவடிகளை இராணுவம் அமைத்துவிட்டது.

அத்துடன் முடிந்ததா..?

தமிழ் மக்களுடைய இதுவரை காலப் போராட்டத்திற்கு என்னதான் தீர்வு.. எதுமே இல்லை, அங்கு இனப்பிரச்சனையே கிடையாது என்றளவிற்கு விவகாரம் வந்து நிற்கிறது..

இப்பொழுது சொல்லுங்கள் புதுமாத்தளன்வரை நடைபெற்றது பிரச்சனையா இல்லை புதுமாத்தளனுக்கு பின் நடைபெறுவதுதான் பிரச்சனையா ?

நீங்கள் புதுமாத்தளனுக்காக அழுதால் அதற்குப் பின் வந்த சம்பவங்களுக்காக என்ன செய்யப் போகிறீர்கள்?

ஒவ்வொரு புலம் பெயர் தமிழரும் புதுமாத்தளன் போர் தமக்கு சிறிய பொறுப்பல்ல பாரிய பொறுப்பை தந்துவிட்டு போயுள்ளதை உணர வேண்டும்.

இந்த நேரம் பொறுப்புள்ள யாருமே அழக்கூடாது..

கவலைகளை பழைய துணி போல கழற்றி வீசிவிட்டு, புதுமாற்று கட்டிக் கொண்டு வீறாப்பாக எழ வேண்டும்.

அழுவதற்கு எம்மிடம் நேரமில்லை அனைவரும் கைகோர்த்து நம்பிக்கையுடன் எழுவதற்குரிய நேரம் இதுவாகும்.

No comments:

Post a Comment