Wednesday, 5 May 2010

புதுமாத்தளனில் வாழ்க்கை எனும் வண்டி - 5


ஏறுங்கள் வண்டியில் புதுமாத்தளனை விட்டுப் போவோம்..

நம் வாழ்க்கை ஒரு பேருந்துவண்டிப் பயணம் போன்றது..

பட்பட்டென்று அடிக்கிறது இதயம் என்னும் இயந்திரம்.. வாழ்க்கை வண்டி ஓடுகிறது.

நம் பூட்டன், பூட்டி வாழ்ந்த காலத்து வாழ்க்கையை பாட்டன் பாட்டி வாழவில்லை.. பாட்டன் பாட்டி வாழ்ந்த காலத்து வாழ்க்கையை நாம் வாழவில்லை..தினமும் புதிய ஊர்கள், புதிய தெருக்கள்..

ஆனால் வாழ்க்கை என்னும் வண்டிக்கும் சாதாரண பேருந்து வண்டிக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது.

பேருந்துவண்டி புறப்பட்ட இடத்திற்கு திரும்பிப் போகும், வாழ்க்கை வண்டியோ முன்னோக்கி மட்டுமே ஓடுமேயல்லாது ஒரு காலமும் திரும்பி ஓடாது.. இதுதான் அந்த வேறுபாடு.

ஒவ்வொரு மனிதனின் கைகளிலும் அவனுடைய வாழ்க்கை வண்டியை ஓட்டும் ஸ்டியரிங் கொடுக்கப்பட்டுள்ளது.

நாம் வண்டியை ஓடிக்கொண்டிருக்கும்போது கரடுமுரடான பாதைகள், பாதாளங்கள், மலைமுகடுகள், அகழிகள், பனிமலைகள், பூங்காக்கள், மதுபானச்சாலைகள் என்று பல காட்சிகளை வழியில் சந்திக்க நேரிடும்..

அதேவேளை தொடரும் பயணத்தின் இடையில் இளைப்பாற நமக்கு சிறுபொழுது கிடைக்கும்..

அந்த நேரம் வண்டியை பூங்காவிற்கு அருகில் நிறுத்துவோர் இதமான காற்றைச் சுவாசிப்பார்கள், சுகந்தமான மலர்களின் நறுமணத்தை முகர்வார்கள்..

மாறாக மதுபானக் கடைக்கு அருகில் நிறுத்துவோர் போதையில் சிக்குண்டு போவார்கள்.. பின்னர் அவர்களுடைய வாழ்க்கைப் பேருந்து தள்ளாடி தானாகவே விபத்தைச் சந்திக்கும்..

இதில் இன்னொரு உண்மையும் இருக்கிறது.. வாழ்க்கை என்னும் பேருந்தை திருப்பிச் செலுத்த அனுமதி வழங்காத இயற்கை, அதேநேரம் அதை எந்த வழியால் செலுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்கும் உரிமையை நம் கைகளில் கொடுத்திருக்கிறது.

வாழ்க்கை வண்டியை பூங்காவிற்குள் செலுத்துவதும் டாஸ்மார்க் என்னும் தவறணைக்குள்ளால் செலுத்துவதும் அவரவர் எண்ணங்களே..

ஒரு திரைப்படப்பாடல் இதற்கு விளக்கம் தருகிறது..

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே..

நெஞ்சினில் துணிவிருந்தால் நிலவிற்கும் போய் வரலாம்..

என்று கூறுகிறது.

வாழ்க்கை மட்டுமல்ல, விடுதலைப் போராட்டமும் ஒரு பேருந்து வண்டிதான். அதை தலைமைச் சாரதியாக இருந்து பிரபாகரன் ஓட்டிச் சென்றார்..

அவர் பயணத்தில் எதிர்பாராத ஓர் ஊர் வந்தது அதன் பெயர்தான் புதுமாத்தளன்..

ஒழிந்துகொள்ள இடமில்லாத நாகதாளிகளும், இராவணன் மீசைகளும் வளர்ந்திருக்கும் மணலும், சேறும் நிறைந்த பொட்டல் வெளி.. மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட கூர்மையான அத்தாங்கு போன்ற குடாப்பகுதி..

கடல், தரை, ஆகாயம் என்று சகல வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன.. ஒரேயொரு சுரங்க வழிதான் அவருடைய போராட்ட வாகனம் பயணிப்பதற்கு வழங்கப்பட்டது.

தேறை மீன் கூட்டத்தை கல்லெறிந்து சென்று அத்தாங்கிற்குள் வீழ்த்துவதைப் போன்ற ஒரு காட்சி.. அத்தாங்கிற்குள் போவதைத்தவிர வேறு வழியில்லாத ஒரு வழிப் பயணம்.

நாம் எவ்வளவுதான் வாகனத்தைச் சரியாக ஓட்டினாலும், எதிரில் வருபவன் விபத்தை ஏற்படுத்த வேண்டுமென நினைத்தால் நாம் அந்த விபத்தைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும்.

சகல பாதைகளும் மறிக்கப்பட்டு, 32 வாகனங்கள் சுற்றிநின்று மோதின.. விடுதலைப் போராட்டம் தவிர்க்க முடியாத விபத்தை புதுமாத்தளனில் சந்தித்தது..

எதிரிகளின் எந்த இராணுவ முகாமைத் தாக்கினாலும் அத்தாங்கின் அந்தத்;தில் ஓர் ஓட்டை வைப்பார் பிரபாகரன். காரணம் எதிரிகள் தப்பிச் செல்ல வேண்டும் என்ற நல்ல மனம் அவரிடம் இருக்கும்.. அதுதான் தமிழர் கண்ட போரியல் நாகரிகமாகும்..

ஓட்டையில்லாத புதுமாத்தளன் அத்தாங்கைப் பார்த்து பிரபாகரன் சிரித்தார்… அத்தாங்கின் அந்தத்தில் நின்ற அமெரிக்கக் கப்பல் ஓடி மறைந்தபோது இன்னொருமுறை சிரித்தார்…

சங்ககாலத்திலேயே தமிழன் கண்டுவிட்ட போரியல் நாகரிகத்தை கேவலம் அமெரிக்கனும், பிரிட்டனும், சீனனும், வடஇந்தியனும் இன்றும் கூட கற்றுக்கொள்ளவில்லையே என்று சிரித்தார்..

தனக்காக அல்ல கேவலமான உலகத்தை எண்ணி நாணித்தலை குனிந்தார்… வெட்கப்பட்டார்..

அவர் கண் முன் ஒரு காட்சி மலர்கிறது..

ஒரு நாள் கரும்புலி வீரன் ஒருவன் வெடிகுண்டு வாகனத்தில் ஏற மறுத்துவிட்டான்.. அந்த நேரம் கொழும்பிற்கு வேறொரு பணியின் நிமிர்த்தம் இன்னொரு கரும்புலி வந்திருந்தான்.. வானத்தில் ஏறி உயிரைத் தியாகம் செய்ய யாருமே இல்லாத வண்டியைப் பார்த்தான்.. கணப்பொழுதும் யோசிக்காமல் அந்த வெடிகுண்டு வாகனத்தை ஓட்டிச் சென்று வீரமரணமடைந்தான்..

இதுவரை உலகில் நடைபெற்ற பல்லாயிரம் போர்களில் அவனைப்போலொரு வீரன் இருந்ததாக அடையாளம் காட்ட முடியாது..

இப்படிப்பட்ட உயிரைத் துச்சமென மதித்த வீரர்கள் எல்லாம் போராடிய இந்தப் புனிதப் போராட்டம் புதுமாத்தளனில் புதைக்கப்பட்டுவிடுமா என்று எண்ணிப் பார்க்கிறார்..

தியாகமே வடிவான போராளிகள்; மண்ணுக்குள் இருக்கிறார்கள்.. அவர்கள் இதைக் காப்பாற்றுவார்கள் என்று உறுதிபட நம்புகிறார்…

இப்படியான நேரத்தில் ஒரு தலைவன் மக்களுக்கு ஏதாவது ஒரு வார்த்தையாவது கூறியிருக்க வேண்டும்.. ஆனால் பிரபாகரனோ ஒரு வார்த்தை கூட தொலைபேசி வழியாக உலக சமுதாயத்தின் முன் கூறவில்லை..

மாவீரரிடம் மட்டும் தனது முடிவை கூறிவிட்டு நடந்தார்…

அன்றொருநாள் கரும்புலி வினோத்திடம், நீ முன்னால் போ நான் பின்னால் வருகிறேன் என்று கூறினார் பிரபாகரன்.

அவன் போகும் போது படலையில் ஓங்கி அடித்தான்.. நீ வரவேண்டும் என்பதற்காக நாம் போகவில்லை.. நீ இருக்க வேண்டும் என்பதற்காக நாம் போகிறோம் என்றுவிட்டு போனான்..

அப்படிப்பட்ட மாவீரர்கள் பிரபாகரனை போகவா விடுவார்கள்.. யோசித்துப் பாருங்கள்..

அன்று ஆயுதங்கள் ஒப்படைக்கப்படுகிறது என்ற தகவலைக்கூட அவர் கூறவில்லை.. ஆயுதங்கள் மௌனமாக்கப்படுகின்றன என்று மட்டும் கூறினார்..

இப்போது பிரபாகரனின் மொழி மௌனம்தான்…

இயற்கை மௌனமாகத்தான் இருக்கிறது..

காற்றாக, மழையாக, ஒளியாக உலகத்தை ஆட்சி செய்கிறது.. அதன் மொழி மௌனம்தான்..

இருள் 24 மணி நேரமும் இருக்காது..

பிரபாகரன் என்னும் பிரகாச ஒளி இப்புவியில் பரவும்..

இப்படிப்பட்ட ஓர் உன்னத மனிதன் ஏற்றிய விடுதலை விளக்கு அணைந்து போகுமென்று நினைத்து நீங்கள் கண்ணீர்விடலாமா..

வண்டியில் ஏறுங்கள்.. புதுமாத்தளனை விட்டு அமைதியும், சுதந்திரக் காற்றும் வீசும் புதிய ஊர்நோக்கிப் பயணிப்போம்..

ஸ்டியரிங் உன் கையில்தான் இருக்கிறது ஏன் கவலை..

No comments:

Post a Comment