Friday, 26 February 2010

தமிழீழம் தமிழர்களின் கடமை



வரலாற்றின் எந்தப்பக்கமும் மிக எளிதாக கடந்ததில்லை. அது பல்வேறு கடினத்தன்மைகளை உடைத்தெறிந்து உள்வாங்கி புதியவற்றை படைத்தளித்து பதிவு செய்கிறது. மார்க்ஸ் சொல்வதை போன்று, வார்க்க போராட்டத்தின் விளைவே வரலாறு. எந்த ஒரு வர்க்கமும் தனது விடுதலைக்கான போரில் தோல்வி கண்டதில்லை. காரணம் போராட்டம் என்பது ஏதோ ஒரு எல்லையை வகுத்து நடத்தப்படுவதில்லை. இந்த நாளிலிருந்து இந்த நாளுக்கு இதை முடித்துவிடலாம் என்று சொல்வதற்கு போராட்டம் கட்டடமல்ல. அது ஒரு இயக்கம்.

அதன் ஒவ்வொரு அசைவும் ஏங்கிக் கொண்டே இருக்கும். அந்த இயக்கத்திலே சருக்கல் ஏற்படலாம், சரிவு ஏற்படலாம், தோல்வி ஏற்படலாம், வெற்றி ஏற்படலாம், ஒன்றுமே இல்லாமல் அழித்து துடைத்தெறியப்படலாம். ஆனால் அந்த வெறுமையிலிருந்து எவரும் எதிர்பாராத வகையிலே மீண்டும் அங்கே ஒரு பச்சை முளை விண்ணை எட்டிப் பார்க்கும். அது பூமியை பிளக்கும்போதே வெற்றி பெறுவேன் என்ற எண்ணத்தோடே பிறக்கும்.

அந்த முளைதான் பின்னர் விருட்சமாய் இந்த உலகையே ஆட்டிப்படைக்கும். எந்த ஒரு போராட்டத்தின் தோற்றமும் வளர்ச்சியும் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதல்ல. அது ஏதோ ஒரு அடக்குமுறையின் விளைவாக, தன்னெழுச்சியாக உருவானது. போராட்டம் என்பது போராளிகளின்மேல் திணிக்கப்பட்ட சுமை. அது திரும்பி சுமக்கும் மகிழ்ச்சி அல்ல. ஆகவே, போராட்ட வரலாற்றில் திணிக்கப்பட்ட எதையும் எதிர்கொண்டு நிற்க வேண்டும் என்பதுதான் நியதி. அந்த அடிப்படையிலேதான் இன்றுவரை உலகெங்கும் தேசிய இனங்கள் தம்மேல் திணிக்கப்பட்ட அடக்குமுறையை உடைத்தெறிய தமது ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அந்த ஆற்றல் ஒடுங்கிப்போவதைப் போன்ற ஒரு பொய் தோற்றத்தை ஏற்படுத்தினாலும் உண்மை தோற்பதில்லை என்கிற தத்துவத்தின்படி தமக்கான வரலாற்று குணத்தை, பண்பை, தன்மையை தக்கவைத்துக் கொள்ள இடைவிடாத போர்குணம் வெற்றியை நோக்கியே அந்த இனத்தை உந்தித் தள்ளுகிறது.இது உணரக்கூடியதா என்று கேட்டால், மிக சாதாரண பார்வையாளனுக்குக்கூட தெரியும், தம்முடைய விடுதலைக்கான போராட்டம் இதுவரை வரலாற்றில் எங்குமே தோற்கடிக்கப்பட்டது கிடையாது. சாதாரண விவசாய மக்களிடம், தொழிலாளர்களிடம் மாபெரும் ஏகாதிபத்தியங்களெல்லாம் சரணடைந்திருக்கின்றன.

மாபெரும் வல்லரசுகள் எல்லாம் மண்டியிட்டிருக்கின்றன. எம்மை கேட்டுத்தான் கிழக்கிலே சூரியன் உதிக்கும் என்று சொன்ன பிரிட்டிஷ் ஆதிக்கம் சிதறி சின்னாபின்னமாகி இருக்கின்றன. காரணம் உழைக்கும் மக்களும், தேசிய இனங்களும் தமது தீர்மானமான நம்பிக்கைக்குரிய நீதியான தமது உரிமைகளுக்கான லட்சியங்களை மீட்டெடுக்க களத்திலே நிற்கிறார்கள். ஆனால் அடக்குமுறையாளர்கள் தமது தன்னலத்திற்காக தமது ஆதிக்க வெறியை அவர்கள்மேல் திணிப்பதற்காக எதிர்த்து நிற்கிறார்கள். எந்த ஒரு போராட்டம் என்றாலும் அது நீதிக்கும் அநீதிக்கும் இடையில் நடப்பதுதான்.

தமிழீழ மண்ணில் முள்ளி வாய்க்காலில் நடைபெற்று முடிந்த கடுஞ்சமர்கூட நீதிக்கும் அநீதிக்குமான சமர் என்பதிலே மாற்றுக்கருத்து நமக்குள் இருக்காது.அச்சமரின் இறுதிக்கட்டத்தில் தமது விடுதலைக்கான உரிமையை வென்றெடுக்க களத்திற்கு வந்த தேசிய இன மக்கள் ஒடுக்கப்பட்டார்கள். தமது சொந்த மக்கள் என்று கூறிக்கொண்ட ராஜபக்சேவின் சிங்கள பேரினவாத கொடுங்கோன்மை அரசு ஒரு இனமக்களை கொஞ்சமும் ஈவு இரக்கமில்லாமல் கொன்று போட்டது. அதற்கு முண்டு கொடுக்க இந்தியா இருகரம் விரித்து கையிலே கொடுவாளைக் கொண்டு ராஜபக்சேவின் பணியாளனாய் படுபாதகச் செயலை செய்தது. இந்தியா மட்டுமா? பாகிஸ்தான், சீனா, பிரிட்டன், ஆஸ்திரேலியா என வல்லாதிக்க அரசுகள் எங்கேயும் தேசிய இன எழுச்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற வெறியோடு மிகக்கடுமையாக தமிழ் தேசிய இனத்தின்மீது தமது பாரிய கருவிச்சமரை கட்டவிழ்த்துவிட்டது.

ஆனால் வரலாறு இந்த முட்டாள்களைப்பார்த்து சிரிக்கிறது. காரணம் இவர்களைவிட கொடுங்கோலர்களை எல்லாம் சாமானிய மக்கள் புரட்டிப்போட்டிருக்கிறார்கள். இவர்களைவிட கருவி தரித்தவர்களை எல்லாம் கருவறுத்திருக்கிறார்கள். அப்படியிருக்க, இந்த கூட்டணி வெற்றி பெற்றுவிட முடியும் என்று காண்கின்ற கனவு கட்டாயம் ஒருநாள் முறியடிக்கப்பட போகிறது.தமிழீழ மக்களின் போர்குணமும் அவர்களின் நெஞ்சில் உறங்கி கிடக்கும் தாயக உணர்வும் தீச்சுடராய், எரிமலையாய், சூறாவளியாய் ஒருநாள் சுழன்றுவீசும். அப்போது காற்று போகும் திசையெல்லாம் போரிலே வீரவித்தான அந்த காவிய நாயகர்களின் சுடர்களை ஏந்திச்செல்லும்.

காற்று விடுதலையை உலகிற்கு கற்றுத்தரும். பாடலும் கவிதையும் விடுதலைக்கான கருவிகளாய் மாற்றம் பெரும். அப்போது தமிழினம் மீண்டும் மீண்டுமாய் பேரெழுச்சியோடு தலைநிமிர்ந்து நிற்கும். அந்த காலத்திற்கான தயாரிப்பு இதோ அருகிலே இருக்கிறது. இது அவர்கள் ஓய்வெடுக்கும் காலம். எந்த ஒரு பணிக்கும் ஓய்வு தேவையல்லவா? இதோ ஒடுக்குமுறைக்கெதிரான சமரில் களமாடிய தமிழ் காவலர்களுக்கு இது ஓய்வின் காலம். இந்த காலக்கட்டத்திலே தான் நாம் என்னவெல்லாம் செய்யவேண்டுமென திட்டமிட வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

உலகெங்கும் வாழும் தமிழினம் நமக்கான ஒரு நாடு வேண்டும் என்கிற எண்ணத்தை இன்னும் இன்னுமாய் தன்னுடைய மனங்களிலே ஏற்றி வளர்க்க வேண்டும். தனக்கான ஒரு நாடு, தம் இனத்திற்கான ஒரு நாடு என்கிற வார்த்தையிலிருந்து ஒரே ஒரு மில்லிகிராம் கூட நாம் கீழிறங்கி யோசிக்கக்கூடாது. நம் சுவாசத்தின் காற்று ஒவ்வொரு விநாடியும் விடுதலையின் அந்த மகிழ்ச்சியான தருணத்தை ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும். நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையை தனக்குள் வளர்த்துக் கொண்டு தமது தாயக உறவுகள் ஒவ்வொரு மனங்களிலும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.நமக்கான ஒரு நாடு இருந்தால் மட்டுமே நமது இனம் இனியும் அழியாமல் இருக்கும் என்கிற அடிப்படை கோட்பாட்டை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையிலே பரப்புரை செய்வதற்கு குழுக்கள் அமைக்கலாம், ஒரு தேசிய இனத்தின் வீழ்ச்சியை துடைத்தெறிய வெற்றியை தூக்கி நிறுத்த நமது எண்ணங்களும் நமது செயல்களும் பெரும் காரணங்களாக இருக்கின்றன.

இன்று புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் தமிழீழ இளைஞர்கள் தமது வாழ்க்கை முறையை தாம் வாழும் நாட்டின் கலாச்சார தன்மைகளுக்குள் இணைத்துக் கொள்ளாமல் தமது தேசிய இனத்தின் அடையாளத்தை அணிந்து கொள்ள தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். தாம் வாழும் நாடுகளில் ஓ... நீங்கள் தமிழரா என்று ஐரோப்பியர்கள், ஜெர்மானியர்கள், அமெரிக்கர்கள் என அனைவரும் உங்களை வியந்து பார்க்க வேண்டும். தமிழர்களுக்கான பண்பாடு, கலை இலக்கியம் ஆகியவை தனித்தன்மையோடு இன்னும் உயிர் வாழ்வதாக உலகெங்கும் வாழும் மக்கள் உணரும்படி நம்முடைய நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

மாறாக நம்மை நாமே புதைத்துக் கொள்வது போல் தமிழ் மறந்து, நம் மொழி மறந்து, நமக்கான அடையாளத்தை மறந்து அவர்களைப்போல் மாறத் தொடங்கினோம் என்றால் நம்மை எந்த நிலையிலும் எந்த போராளியும் மாற்றி அமைக்க முடியாது. ஆகவே களத்திலே கருவியேந்தி சமர்புரிய ஒரு அணி என்றால் புலத்திலே கருத்து ஏந்தி சமர்புரிய நாம் அனைவரும் உறுதுணை புரிய வேண்டும். இது நமது போராட்டத்தை மேலும் உந்தித்தள்ள நம்மை தயார் படுத்தும்.தவிர்த்து நமது பண்பாட்டு பழக்க வழக்கங்களை இழந்து, நாம் புலிகள் என்பதை மறந்து, பூனைகளாக வாழப் பழகினோம் என்றால் வருங்காலம் நம்மை புலிகள் என்று பார்க்காது, பூனைகள் என்று பழிக்கும்.

ஆகவே புலம்பெயர்ந்த தமிழ் உறவுகள் இதை புரிந்து கொண்டு நடக்க வேண்டும். வீட்டிலும் நம்முடைய உறவினர்களை பார்க்கும்போதும் கட்டாயமாக நாம் தமிழில்தான் பேச வேண்டும் என்கிற ஒரு கட்டுப்பாட்டை நமக்குள் உருவாக்கிக் கொண்டு தமிழ் மொழியை காப்பாற்ற துணைபுரிய வேண்டும்.இது புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு என்றால் தாய் தமிழ் உறவுகளுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது. முதலில் நம் இனத்தின் இறையாண்மையையும், நம் இனத்தின் மொழி ஆளுமையையும் நாம் புரிந்து கொண்டு அதை உயர்த்தி அதோடு வாழ்ந்து வளர்வதற்கு முதலில் முயற்சிக்க வேண்டும். தமிழில் பேசுவதுகூட கேவலம் என்கின்ற ஈனப்போக்கை கைவிட்டு நாம் தமிழ் தெரிந்த எல்லோரோடும் தமிழில் மட்டுமே பேசுவது என்கின்ற கொள்கையை நமக்குள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவரும் சந்திக்கும்போது நாம் தமிழர்கள் என்கின்ற உணர்வை ஒவ்வொரு நொடியும் வளர்த்தெடுக்க வேண்டும்.உலகெங்கும் வாழும் தமிழர்களின் தேசிய அடையாளமாக தமிழீழ விடுதலைப்புலிகளும் நமது தேசிய தலைவரும் இருக்கிறார்கள். அவர்கள்தான் வீழ்ந்து கிடந்த தமிழை, புதைந்து கிடந்த தமிழினத்தை, புதைக்குள் இருந்த தமிழர் தம் மானத்தை தோண்டி எடுத்து உலகெங்கும் தம்மை யார் என்று அறிமுகம் செய்தார்கள். ஆகவே தமிழ்நாட்டில் வாழும் தமிழர் ஒவ்வொருவரும் தமக்கான தமிழ் தேசிய அடையாளத்தை அணிந்து கொள்ள தவறக்கூடாது. நமக்குள் புதைந்து கிடக்கும் இந்திய தேசிய மோகத்தை உடைத்தெறிய வேண்டும்.

நாம் தமிழர்கள், நமக்கான ஒரு தேசிய மொழி, இனம், பண்பாட்டு சூழல் ஆகியவை பன்னெடு காலமாய் இருக்க நாம் அதை மறுப்பதோ, அல்லது ஏற்றுக் கொள்ள தயங்குவதோ நமது இனத்தை அடையாளம் தெரியாமல் செய்துவிடும். ஆகவே இதை வென்றெடுக்க தமிழ்நாட்டில் இருக்கும் ஒட்டுமொத்த தமிழர்களும் ஓங்கி ஒரே குரலில் சொல்ல வேண்டியது புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கு என்பதுதான். காரணம் புலிகள் தமிழ் தேசியத்தின் அடையாளம். புலிகள் தமிழின் இலக்கணம். புலிகளின் ஈரம் தமிழனின் பிறப்பிடம். ஆகவே புலிகள் தான் தமிழினத்தை உலகெங்கும் அறிமுகப்படுத்தி தமிழர்களுக்கான முகவரியாய் இருப்பவர்கள்.

ஆகவே தாயக உறவுகள் அனைவரும் இதற்கான முன்முயற்சியை எடுத்து நமக்கான இனத்தை அடையாளத்தை காக்கும் வரலாற்று போராட்டத்தில் ஒவ்வொரு வாசற்படி தாண்டி வந்து பங்கேற்க வேண்டும். அது நிகழும்போது நமது சந்ததிகள் மகிழ்ச்சியோடு தாமும் தமிழர்கள் என்கின்ற மனநிலையோடு, மனநிறைவோடு இந்த மண்ணிலே வாழ்வார்கள். அவர்களுடைய வாழ்க்கை வளமாக இருப்பதற்கு இப்போதே நாம் பணியாற்ற வேண்டிய கடமைப்பட்டிருக்கிறோம். நமது தேசிய தலைவர் கூறுவதைப்போன்று நம்முடைய சந்ததியனரின் மகிழ்ச்சியான வாழ்விற்காகவே நாம் இத்தனை துயர் நிறைந்த சுமைகளை சந்திக்கிறோம்.

1 comment:

  1. இலக்கு ஒன்றுதான் #இனத்தின் <3 விடுதலை!

    ReplyDelete