
இலங்கைத் தீவில் இரண்டு தேசங்கள் உள்ளன என்ற தெளிவான செய்தி உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி அறிக்கையில்:
கடந்த 26-01-2010 அன்று நடைபெற்று முடிந்த தேர்தலில் இலங்கைத் தீவில் இரண்டு தேசங்கள் உள்ளன என்ற தெளிவான செய்தி உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர் தாயகப்பகுதிகளில் வாழும் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
இதன் மூலம் நடைபெற்று முடிந்த தேர்தல் சிங்கள தேசத்திற்கான தேர்தல் அதில் தமிழ் தேச மக்களாகிய தாம் பங்கெடுக்கத் தேவை இல்லை என்பதனை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். பெரும் எண்ணிக்கையாக தமிழ் மக்கள் தேர்தலில் எவருக்கும் வாக்களிக்காமல் தவிர்த்துள்ளதன் மூலம் ஸ்ரீலங்கா என்ற நாட்டின் இறைமையை நிராகரித்துள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசம் ஓர் தனித்துவமான தேசம் என்பதனையும் அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும் சிங்கள தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் உணர்த்தியுள்ளனர்.
அத்துடன் சிங்களத் தலைமைகளுக்கு வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளதன் மூலம் தமிழ் மக்களை படுகொலை செய்தவர்களை தாம் மன்னிக்க தயாராக இல்லை என்பதனையும் சிங்களத் தலைமைகள் எதனையும் தாம் நம்பத் தயாராக இல்லை என்பதனையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் கடந்த 2005 ம் ஆண்டு நடைபெற்ற சனாதிபதித் தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என்று தேசியத் தலைமை எடுத்த முடிவை தாம் விரும்பியே நடை முறைப்படுத்தினார்கள் என்பதனையும் தமிழீழ விடுதலைப் புலிகளையே தமது ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பதனையும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.
கடந்த 33 ஆண்டுகளாக தமிழ் மக்களின் உரிமைக்காக நடைபெற்ற தியாகங்களை புறந்தள்ளி கொச்சைப்படுத்தி, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்கைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, மற்றும் இறைமை என்ற கோட்பாடுகளை கைவிட்டு அரசியல் நடத்த முற்படுபவர்களையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதனையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு புகட்டியுள்ளனர்.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டப் பயணத்தில் மிகவும் கடுமையான, கொடுமையான, கசப்பான அனுபவங்கள் நிறைந்த பாதைகளுடாக நாம் பயணித்து வந்துள்ளபோதும் இன்னமும் தமிழ் தேசியம் என்ற இலட்சியத்தினை அடைந்தே தீருவோம் என்பதில் உறுதியாக இருப்தனையம் வெளிப்படுத்தியுள்ளனர்.
எமது இலட்சியம் அடையப்படுவரை உறுதி தளராது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, மற்றும் தனித்துவமான இறைமை என்ற தேசியக் கொள்கைகளை முன்வைத்து உறுதியாக ஐனநாயக வழியில் போராடுவோம். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தினை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அந்த நாள் வரை இலட்சியத்தால் ஒன்றுபட்ட மக்கள் அனைவரும் நம்பிக்கையுடன் ஒற்றுமையாக ஓரணியில் பயணிப்போம் என அவர் மேலும் கூறியுள்ளார்
No comments:
Post a Comment