தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மிகப்பெரிய பலமாக விளங்கிய தமிழர்களின் இராணுவ பலம் சிறிலங்கா அரசினாலும் அதன் நேச சக்திகளின் கூட்டுச்சதியினாலும் சிதைக்கப்பட்ட தற்போதைய நிலையில் அவ்வாறான சூழ்ச்சிவலையில் தமிழ்மக்கள் எவ்வாறு சிக்கினார்கள்? அந்த சூழ்ச்சிவலையின் பிரதான சூத்திரதாரிகள் யார்? அவ்வாறான கபடநாடகங்கள் எதிர்காலத்தில் தமிழ்மக்களின் போராட்டங்களில் எவ்வாறான பரிணாமத்தை எடுத்துக்கொள்ளப்போகின்றன? போன்ற விடயங்களை, போரின் உஷ்ணம் தணிந்துள்ள இப்போது சற்று இரைமீட்டிக்கொள்வது எதிர்கால பயணத்துக்கு ஆரோக்கியமானதாகவும் அவசியமானதாகவும் இருக்கும் என்பது உறுதி.
இந்த ஆய்வை பரந்த அளவில் மேற்கொள்ளக்கூடியளவுக்கு பல விடயங்கள் தொடர்புபட்டிருப்பினும், இறுதிப்போர் தொடர்பாக இந்தியா எடுத்துக்கொண்ட நிலைப்பாடு தமிழர்களின் ஆயுதபலத்தை எவ்வாறு பாதித்தது என்பதை ஆழமாக நோக்கினால், அதுவே பல கேள்விகளுக்கு பதில்களாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இந்து சமூத்திரத்தின் மிகப்பெரிய விடுதலைஅமைப்பாக உருவெடுத்து பல வளங்களையும் தன்னகத்தே கொண்ட தமிழர் அரசாக வியாபித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் வளர்ச்சியில் எந்த நாடும் பாரிய அளவில் அச்சமோ கவலையோ கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், விடுதலைப்புலிகளின் இராணுவ பலம் என்ற விடயமே பல நாடுகளுக்கும் வயிற்றில் புளி கரைத்த விடயமாக மாறியது. அது என்னதான், தமிழர்களின் பாதுகாப்பு படை என்றும் பெரும்பான்மையின சிங்கள அரசின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அடக்குமுறையிலிருந்தும் சிறுபான்மையின தமிழ்மக்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தமிழர் இராணுவம் என்றும் திரும்ப திரும்ப வாதங்களை முன்வைத்தாலும் -
கொஞ்சம் இராணுவ பலத்தில் வளர்ச்சிபெற்றுவிட்ட நாடுகளையே பகையாளியாக பார்க்கும் பன்னாட்டு சமூகத்துக்கு ஒரு விடுதலை இராணுவம் இவ்வாறு வளர்ச்சி அடைவதை ஏற்றுக்கொள்ளவே முடியாமல் போய்விட்டது. வட கொரியாவை பார்த்து அமெரிக்காவும் சீனாவை பார்த்து இந்தியாவும் இராணுவ ரீதியில் அச்சம்கொள்வதே முதல்படியாக இருக்கின்ற சர்வதேச ஒழுங்கில், விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு தமிழ்மக்களின் உரிமைகளுக்காக நியாயமான போராட்டத்தை நடத்துக்கிறது என்ற உண்மையை உணர்ந்துகொண்டாலும் அவர்களின் இராணுவ வளர்ச்சியை அவர்களால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை.
இதனால், எப்போதுமே தமக்கு கட்டுப்பட்டு இயங்கக்கூடிய தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக அவர்களை பேணுவதற்காக இந்தியாவும் சர்வதேசமும் சேர்ந்து போட்ட திட்டம்தான் விடுதலைப்புலிகளின் இராணுவ பலத்தை அழிப்பது என்பது. இதன்பிரகாரம் விடுதலைப்புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாக தமிழர்களின் பலமான அமைப்பாக பேணிக்கொண்டு இராணுவ ரீதியில் அழி்ப்பதற்கு திட்டம் வகுத்தன. இதற்கு 'பீக்கொன் நடவடிக்கை' என்று பெயரிடப்பட்டதாக இராஜதந்திர வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றபோதும் இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த திட்டத்தின் பிரகாரம் இந்தியா உட்பட பன்னாட்டு சமூகமும் கூடி விடுதலைப்புலிகள் அமைப்பின் இராணுவ வலுவை அடியோடு அழிப்பதற்கு வியூகம் வகுத்தன. விடுதலைப்புலிகளின் இராணுவ பலத்தினை அழிப்பதன் மூலம் அவர்களை தனிநாட்டு கோரிக்கையிலிருந்து கீழிறங்க வைக்கலாம் என்றும் அவர்களின் பேரம் பேசும் சக்தியை அடியோடு அழித்துவிடலாம் என்றும் பல விடயங்கள் இந்த வியூகத்துக்கு வலு சேர்த்தாற்போல் தெரிவிக்கப்பட்டன. இதன்பிரகாரமே கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு விடயங்களாக அனைத்துலக ஆசீர்வாத்துடன் அரங்கேற தொடங்கின. ஆனால், இதில் மிகப்பெரிய கபட நாடகத்தை தனது சொந்த நிகழ்ச்சி நிரலின்படி அரங்கேற்றியது வேறு யாருமல்ல. இந்தியாவே தான்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் இராணுவ பலத்தை வலுவிழக்கச்செய்வதன் மூலம் அந்த அமைப்பை, அரசியல் ரீதியான போராட்டத்தை நோக்கிய பாதைக்குள் இழுத்துவருவது என்று சர்வதேச சமூகம் போட்ட திட்டத்தை, இந்தியா தனக்கு சாதகமாக பயன்படுத்தி, எல்லாநாடுகளின் முன்னிலையிலும் ஏற்றுக்கொண்ட திட்டத்தை மீறி, சிறிலங்காவுடன் சேர்ந்து, தனது நீண்ட கால பழிவாங்கும் படலத்தை களத்தில் கனகச்சிதமாக நிறைவேற்றி, தமிழ்மக்களுக்கு மட்டுமல்லாமல் இம்முறை சர்வதேச சமூகத்துக்கும் முதுகில் குத்தியது.
எத்தனை ஆயிரம் அப்பாவிமக்கள் செத்தாலும் பரவாயில்லை, விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை எந்த தடயமும் இன்றி அழிப்பது என்ற நோக்குடன், சிறிலங்காவில் இந்தியா வந்திறங்கி நின்று சமராடியதை கண்டு, அமெரிக்கா - பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றியம் சகலதும் அதிர்ந்து போயின. அதனால்தான், மிலி பான்ட் முதல் சகல நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் கொழும்புக்கு ஓடி வந்தனர். இணக்கம் கண்ட விடயங்களை மீறுவதாக இந்தியாவுக்கு நேரடியாக கூறாமல், சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுத்தன.
ஆனால், இந்தியா கொண்டிருந்த பழிவாங்கும் உணர்வையும் சீனா மற்றும் நேச அணிகள் சிறிலங்கா மீது கொண்டிருந்த நீண்டகால பொருளாதார ஆக்கிரமிப்புக்கான அக்கறையையும் - இலகுவாக - ஒருங்குசேர - பயன்படுத்திய மகிந்த தனது அரசியல் வாழ்வுக்கு முத்தாய்ப்பாக போர்வெற்றியை பெற்றுக்கொண்டார்.
இந்தியா அரங்கேற்றிய இந்த கபட நாடகம் நீண்டகால ஆரோக்கியம் கொண்டதாக அமையாது என்றும், தமிழர் தரப்பே இந்தியாவின் உண்மையான நட்பு சக்தி என்றும், தமிழர் தரப்பிலிருந்து திரும்ப திரும்ப எடுத்துக்கூறப்பட்டபோதும், விடுதலைப்புலிகளை அழிப்பது என்ற ஒரே குறிக்கோளுடன் சதிராடிய இந்தியா இன்று, சிறிலங்கா விவகாரத்தில் எந்த நிலை எடுத்து நிற்கிறது என்று பார்த்தால், அது இந்திய ஆளும் வர்க்கமே ஒப்பாரி வைக்கும் இடம்தான்.
இன்று இந்தியா, சிறிலங்காவினால் மட்டுமல்ல. தமிழர் தரப்பினாலும் ஒதுக்கிவைக்கப்பட்ட சக்தியாகிவிட்டது. போரின்போது கறிக்கு கருவேப்பிலை போல இந்தியாவை பயன்படுத்திய சிறிலங்கா ஆளும் தரப்பு, அதன்பின்னரும் இந்தியாவை ஆயுதம் வாங்குவதற்கான வேலைக்காரனாகவே பார்த்தது. போர் முடிவடைந்த பின்னர் வடக்கு கிழக்கு அபிவிருத்தி சிறிலங்காவுக்கு வந்து வேலை செய்யும் பணியாளாக பார்த்தது. இன்றைய நிலையில் இந்தியாவுக்கு அந்த பங்கும் இல்லாத நிலையே காணப்படுகிறது.
சிறிலங்காவில் வரவுள்ள அரசதலைவர் தேர்தலில் இந்தியாவுக்கு பிடிக்காத பொன்சேகா தரப்பு ஆட்சி பீடம் ஏறக்கூடிய சாத்தியங்கள் அபரிமிதமாகவே காணப்படுகின்றன. பொன்சேகாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளதன் மூலம், தமிழ்மக்களும் அவர்களின் ஒரே அமைப்பான தமிழ் கூட்டமைப்பும், தமிழர்களின் அரசியல் களத்தில் இந்தியாவை எச்சரிக்கையுடன் பார்க்க தொடங்கிவிட்டனர். மறுபுறத்தில் பார்த்தால் இந்திய எதிர்ப்பு ஜே.வி.பி. மற்றும் ஏனைய கட்சிகளும் பொன்சேகாவின் பின்னால் அணிதிரண்டு நிற்கின்றன.
மேற்குலகு சார்பு பொன்சேகா மற்றும் ஐ.தே.க. ஆட்சியில், இந்தியாவின் பழைய அணுகுமுறைகள் செல்லுபடியாகப்போவதில்லை. தற்போது வேறு வழியின்றி, தமிழ் மக்களுடன் நட்புறவை பேணுவதற்கு தாம் ஆர்வமாக இருப்பதாக இந்தியா சென்ற தமிழ் கூட்டமைப்பிடம் வெளிவிவகார செயலர் நிருபமா ராவ் சொல்லி அனுப்பியிருக்கிறார்.
இன்று இந்தியாவின் வெளிவிவகார கொள்கையையே சிதறடிக்கும்வகையில், அவர்கள விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கை அமைந்துவிட்டது மட்டுமல்லாமல், தமிழ்மக்களையும் நிரந்தர எதிரிகளாக ஆக்கிக்கொண்டுவிட்டார்கள். இந்தியாவின் திரிசங்கு நிலையை சரியாக பயன்படுத்தி, தமிழர் தரப்பு தமது உரிமைகளையும் அபிலாஷைகளையும் பெற்றுக்கொள்ளக்கூடிய களத்தை தீர்மானிக்கப்போவது வரவுள்ள சிறிலங்கா அரசதலைவர் தேர்தல் ஆகும்.
ஆகவே, இந்தியாவின் சிறிலங்காவுக்கான பணியாளாக செயற்படும் மகிந்தவா, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை மதிக்கும் மேற்குலகின் ஆதரவாளன் பொன்சேகாவா என்பதை தமிழ்மக்கள் தீர்மானிப்பதன் மூலம், இழந்துவிட்ட இராணுவபலத்தினால் துவண்டுள்ள தமிழர்கள் மீண்டெழுந்து தமது பேரம்பேசும் சக்தியை புதிய பரிணாமத்திற்குள் இட்டுச்செல்லலாம்.
No comments:
Post a Comment