Saturday, 9 January 2010

APPA - தமிழீழ தேசியத் தலைவரின் தந்தை













வீர தந்தையே நீ வீரமாய் உறங்கு

கையெடுத்து வணங்கும் அந்த கரிகாலனை தந்தவா - நீ
கம்பி சிறைக்குள்ளே கண் மூடி போனாயோ ..
கோர சிறைக்குள்ளே கோர வதையிட்டு
உன் ஆவி பறித்தனரோ ஊளை சிங்களங்கள் ...

நெஞ்சு விறைக்குதையா நினைவு தளறுதையா
உன் பிரிவெண்ணி உலக தமிழ் கதறுதைய்யா ..
வேரோடு தமிழ் அறுக்க  வெளி வந்த சிங்களத்தை
அடியோடு அவர் தறிக்க அண்ணனை தந்தாவா ..

நீ விழி மூடி போனாயா  வித்துடல் ஆனாயா ..?-மனம்
நம்ப மறுக்கிறது  நரம்பு செயலிழக்கிறது ..
உன்னை வதைத்தவர்  உடல் சிதறும்
உன் வதை எண்ணி சிங்களம் ஒருநாள் கதறும் ...

வீர தந்தையே - நீ வீரமாய் உறங்கு ...!...

********************************************************

உன் இறப்புக்கு யார் காரணம்

வீர மகனைப் பெற்றெடுத்த வீரத் தந்தையே...!
வேத வாக்காய் வன்னி மண்ணில் வாழ்ந்த தெய்வமே....!
உன் மகனின் பெயரைக் கேட்டாலே பயந்து ஒடுங்கும் எதிரிப் படைகள்.
உன் வயதை மதியாது சிறைக்குள் சிந்தனை சிதறாமல்.
சித்திரவதையாலேயே கொன்றுவிட்டு உலகிற்கு இயற்கை மரணம் எய்தாரென வதந்திகளை பரவவிடுவது...
இலங்கை அரசிற்குக் கைவந்த கலையல்லவா...?

உன் பேரன் எங்கள் நேசக்குமரன் எம்மை விட்டுப்போன துயரம்
இன்னும் ஆறவில்லை ஆறாய்ப் பாய்கின்றது கண்ணீர்த் துளிகள்.
உன் மரணச் செய்தி கேட்டவுடன் சுனாமி வந்தது போல்...
உலகத்தமிழர் செவிகளில் சோககீதங்கள் ஒலிக்கின்றது.

சுயநலம் இல்லாமல் வாழ்ந்தாய் சுற்றி இருப்பவர்களை உறவாக்கினாய்.

தமிழைத் தாயாய் நினைத்தாய் தங்கத் தலைவரைப் எமக்குப் பரிசாய்த் தந்தாய் தமிழீழம் மலருமென
தமிழ் நாட்டில் இருக்கும் போதும் சொன்னாய். அன்று உன் விழியில் பயம் தெரியவில்லை.
இன்று உன் வழியில் பயம் தெரியவில்லை.

வாயிருந்தும் எம்மால் பேசமுடியவில்லை விம்மி விம்மி வாய் கூட வலிக்கும் நிலையின்று
கையிருந்தும் எம்மால் எழுதமுடியவில்லை கைதியாக்கி மரணமாக்கும் நிலையின்று.
கண்ணிருந்தும் எம்மால் சாட்சி சொல்முடியவில்லை கற்பழிப்பின் அகோரம் எம்மீதும் தாவும் நிலையின்று. உன் இறப்புக்கு யார் காரணம் ஈழத்தின் தந்தையே...!

சாட்சி சொல்ல வருவாயா கரிகாலக் கடவுளே....!

ஈழமகள் உங்கள் அபிசேகா.

*********************************************************

வீர அஞ்சலி

திருவேங்கடம் வேலுப்பிள்ளை

தமிழீழ தேசியத் தலைவரின் தந்தை என்ற பெருமை சுமந்த தமிழன் !
வாழும் காலத்திலேயே நேர்மையின் வடிவமாக திகழ்ந்த மனிதன் !
தான் வகித்த அரச உயர் பதவியை தூய்மையாக செய்த சேவைச் செம்மல் !
வன்னி முழுவதும் எத்தனையோ இளைஞர் நிலம்பெற்று
தம் வாழ்வை வளமாக்க துணையாக இருந்த தூயோன்.!
எல்லாளன் சமாதிக்கு நாள் தவறாது தீபமேற்றிய திருமகன்
அவன் நினைவாக பிரபாகரன் வர காரணமான பெரியோன் !
இராணுவத்தின் கெடுபிடியை தள்ளாத வயதிலும் சந்தித்தவன்!
எத்தனை துப்பாக்கி எதிர் வந்தாலும் எதிர்த்து பேசும் வீரன்!
கொடுஞ்சிறையில் கிடந்து உயிர் கொடுத்த மானத்தமிழன்..!
வெளியில் வந்தால் இவன் மட்டும் உண்மையை சொலவான் என்று
தள்ளாத வயதிலும் சிங்கள அரசு தடுத்து வைத்த தன்மானப் புலி !

உண்மைக்காக வாழ்பவனுக்கு சிறைக் கூடம் சிறீலங்கா !
என்ற உண்மையை மரணத்தால் எழுதிப் போன மானத்தமிழன் !
சிறையில் உயிர் நீத்து மானம் காத்தான் சேரன் செங்குட்டுவன் அன்று
அவன் வழியில் இன்னொரு சரித்திரம் படைத்தான் இவன் இன்று !
மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் இவனால் தலை நிமிர்வு பெற்றான்..
கோழையாய் குள்ள நரிகளால் வாழும் தமிழரை
மறுபடியும் ஒரு முறை சிந்திக்க வைத்தான்..
இனவாதப் பேய்களின் முகமூடியை இன்னொருமுறை கிழித்தான்..

பிரபாகரனின் தந்தை புகழ் மிக்க தமிழன் என்ற பெருமை தந்தான்..
இறப்பு துயரல்லடா உன் செயலே துயரென்று
சிங்களத்திற்கு சொல்லாமல் சொல்லிப் போனான்..
சிங்கள இனவாத நாயிடம் பிச்சை கேட்டு வாழாது
பெரு மரணம் கண்டு தமிழ் மானம் காத்தான்..
உனக்கு மகனாகப் பிறந்த பெருமையே பிரபாகரனுக்கு பெரிது
தள்ளாத வயதிலும் தளராத தமிழ் வீரன் நம் தாத்தா என்று

உன் புகழை எதிர் காலம் போற்றும்..
பயங்கரவாதம் பேசும் உலக நாய்களே இவன் மரணத்தால்
உங்கள் ஊன் நாற்றமெடுக்கிறது !
பாரத மாதாவே உன் தவப்புதல்வரா நாம்
நினைக்க நாறுகிறது நம் மனம்..
இவன் சிறையில் மரணிக்கும்வரை
மௌனம் காத்த உலகத்தின் கல்லறையில் கல்லறையில்
ஒரு தமிழன் உயிர் பெற்றான் என்று எழுதுங்கள்..

இவன் மரணம் மரணமல்ல
உலகிற்கு நாகரிகம் சொன்ன சங்கத் தமிழனின் மானம்
அவன் மரணத்தில் வீசுகிறது..
போரின் பின் வாடிய முல்லைப் பூக்கள் மறுபடி பூக்கின்றன…
கொட்டும் மல்லிகைப் பூக்கள் இவன் பாதங்களை தழுவுகின்றன..
சங்ககால வீர மரணம் தமிழீழத்தில் மறுபடி எழுகிறது..
உன் இறப்பாவது இந்த மானங்கெட்ட உலகிற்கு
ஒரு மரியாதை தரட்டும் !
போய் வா !
புறநானூறு உன் புகழ் பாடும் !

கிழப்புலியே உனக்கு வீர வணக்கம் !
விலை போனவன் போகட்டும்
மானமுள்ள தமிழர்கள் பூமியில் உள்ளவரை
உன் புகழ் முல்லைப்பாட்டாய் மணம் வீசும்..
உன் மகனின் புலிக்கொடி உன் உடலை மூடட்டும்..
தமிழனுக்கு தன்மானம் தந்தவனே போய்வா !

எங்களின் கண்ணீர் அஞ்சலிகள்

No comments:

Post a Comment