Sunday, 13 December 2009

ஒருவனை கொலை செய்வதற்கு சுதந்திரம் உள்ளது : கோத்தபாய

















சரத் பொன்சேகாவை தாம் ஒரு சிறந்த இராணுவ தளபதியாக பயன்படுத்தியதாக இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவின் இடத்தில் மற்றும் ஒருவர் இருந்திருந்தால், அவரும் தமது கடமையை உரியமுறையில் செய்திருப்பார் என கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது உரிய அரசியல் தலைமைத்துவம் வழங்கப்பட்டது. உரிய ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. படைவீரர்களின் தொகை அதிகரிக்கப்பட்டது. சர்வதேச அழுத்தங்கள் தடுக்கப்பட்டன. இவையாவுமே யுத்த வெற்றிக்கு காரணமாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த யுத்த வெற்றிக்கு தரைப்படை மட்டுமல்லாமல் வான் படை மற்றும் கடற்படையும் பங்களிப்பை செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவை பொறுத்தவரையில் அவர் ஒரு சாதாரண தளபதி, அவருடைய தொழிலை அவர் செய்தார். சரத் பொன்சேகா முன்னாள் இராணுவ தளபதிகளான டென்சில் கொப்பேகடுவ, விஜய விமலரட்ன ஆகியோரை போன்று சிறந்த தளபதியல்ல. பாரிய யுத்த முன்னெடுப்புகளை அவர் மேற்கொள்ளவில்லை. அவர் முன்னர் பல யுத்த தோல்விகளை சந்தித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து படைகளை திரும்பப் பெற கூறியவரும் அவர்தான். 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் சரத் பொன்சேகாவை நாடு அறிந்திருக்கவில்லை. இந்த நிலையில், சவேந்திர சில்வா, கமல் குணரட்ன, சாரி கலகே மற்றும் பிரசன்ன சில்வா போன்ற படைத்தளபதிகள் யுத்தகளத்தில் சிறந்த சேவையாற்றியுள்ளார்கள் என கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிராக சரத் பொன்சேகா போட்டியிடுவதனால் அவரை துரோகி என கூறவில்லை எனக்குறிப்பிட்டுள்ள கோத்தபாய, நாட்டு மக்களுக்கு படையினர் தொடர்பாக பிழையான தகவல்களை வழங்கிவருபவர்களே துரோகிகள் என அழைக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

யுத்தத்தின் பின்னர் சீனாவில் இருந்து பாரியத்தொகை ஆட்டிலறி உந்துகளை பல மில்லியன் ரூபாய்களுக்கு கொள்வனவு செய்ய வரையறுக்கப்பபட்ட லங்கா லொஜிஸ்டிக் அன்ட் டென்னோலொஜிஸ் நிறுவனம் முயன்றதாகவும் அதனை தாம் தடுத்ததாகவும் சரத் பொன்சேகா கூறியிருந்தமையை மறுத்துரைத்த கோத்தபாய ராஜபக்ச, தாமே அதனை தடுத்து நிறுத்தியதாகவும் சரத் பொன்சேகாவுக்கு அந்த அதிகாரம் இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

குறித்த ஆயுதக்கப்பல், திருப்பியனுப்பட்டதாக தெரிவித்த அவர் இது தொடர்பில் விசாரணைகள் எவையும் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு மனிதனுக்கு சுதந்திரம் உள்ளது இந்தவகையில் சரத் பொன்சேகாவுக்கும் சுதந்திரம் உள்ளதுதானே என கோத்தபாயவிடம் கேட்ட போது, ஆம் அதற்கு சுதந்திரம் உள்ளது. ஒரு மனிதனை கொல்வதற்கும் சுதந்திரம் உள்ளது என பதிலளித்துள்ளார். தேர்தலில் போட்டியிடுவதும், ஒரு மனிதனை கொல்வதும் இரண்டு வெவ்வேறு விடயங்களாகும் என சுட்டிக்காட்டி போது, எவரும் எதனையும் செய்ய சுதந்திரம் உள்ளது. ஆனால் அதற்கு நியாயங்கள் இருக்க வேண்டும் என கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment