Welcome to this blogg. More than 80 million tamil people live in many countries across distant seas. There is no state without a Tamil - but there is no state for the tamils. Velkommen til denne bloggen. Her vil jeg oppdatere nyheter om tamiler og deres kamp for et selvstyre både på Sri Lanka og utenfor øya. என்னுடைய இந்த இணைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி: தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கென்று ஓர் நாடில்லை
Tuesday, 5 January 2016
தமிழ் மக்கள் பேரவை சாதிக்குமா பாதிக்குமா?
சிங்களவர்கள் வாக்களர்களாக அதாவது கட்சி சார்ந்து சிந்திக்கிறார்கள்.
ஆனால்,
தமிழர்களோ இனம் சார்ந்து சிந்திக்கிறார்கள். இது சிங்களவர்களிடம் உள்ள பலவீனமாகவும்,
தமிழர்களின் பலமாகவும் காணப்படுகிறது என சிரால் லக்திலக்க அவர்கள்
2005 – 2006 காலப்பகுதியில் அடிக்கடி கூறுவார்.
சிரால் தற்போது சிறீலங்கா சனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் இணைப்பாளராக இருக்கின்றார்.
சிங்கள மக்கள் தொடர்பாக சிராலுக்கிருந்த ஆதங்கத்தோடு இந்த கட்டுரையாளருக்கு உடன்பாடில்லை. அதேவேளை, சிங்கள தேசத்தின் நலன் சார்ந்து சிந்திக்கின்ற ஒருவரிடம் அத்தகைய ஆதங்கம் இருப்பது ஆச்சரியத்துக்குரியதுமல்ல.
- நிர்மானுசன் (Nirmanisan)
சிரால் ஒரு புத்திஜீவி மற்றும் அரசியற் செயற்பாட்டாளர்.
அத்துடன்,
ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினரும் கூட. 2005 நவம்பர் சனாதிபதித் தேர்தலில் இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தோல்வியுற்றதைத் தொடர்ந்து சிரால் கவலையும் விரக்தியுமுற்றிருந்தார்.
ஆயினும்,
ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி சந்தித்த தொடர் தோல்விகளால் பின்னர் வந்த காலங்களில் ரணிலுக்கு எதிராகவும்,
சஜித் பிரேமதாசா அவர்களுக்கு ஆதரவாகவும் சிரால் செயற்பட்டார். அண்மைக் காலம் வரை ஜாதிக ஹெல உறுமய என்ற பெயரோடு இருந்த சம்பிக்க ரணவக்கவின் பௌத்த பேரினவாத கட்சியோடு சுமூகமான உறவைக் கொண்டுள்ள சிரால், தற்போது சிறீலங்கா சனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் இணைப்பாளராக திகழ்கிறார்.
கடந்த பத்து ஆண்டுகளில் பெருமாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. கட்சிகளுக்கிடையே போட்டி இருந்தாலும் சிங்கள தேசத்தின் நலன்கள் என வரும் போது அவர்கள் ஒரு பொதுக் தளத்தில் இணைந்திருக்கிறார்கள் என்பதை சிங்கள தேசம் அடைந்த வெற்றிகள் மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறது.
வாக்காளர் மனப்பாங்கோடு இருந்த சிங்கள மக்கள் தம் இனம் சார்ந்து, தமது தேச நலன்கள் சார்ந்து செயற்படுபவர்கள் என்பதை புலப்படுத்தியிருக்கிறார்கள். இனம் சார்ந்து சிந்திப்பவர்களாக வர்ணிக்கப்பட்ட தமிழர்கள்,
கட்சி சார்ந்த வாக்காளர் மனப்பாங்கோடு சிந்திக்கவும் செயற்படவும் நிலைமாற்றம் அடைந்துவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த சந்தேகம், கடந்த
19ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக வெளிவருகிற கருத்துக்கள்,
விமர்சனங்களைத் தொடர்ந்து பலமடையத் தொடங்கியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான ஒரு மாற்று கூட்டணியே தமிழ் மக்கள் பேரவை என தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு,
அதிலும் குறிப்பாக தமிழ் அரசுக் கட்சிக்கு ஆதரவானவர்களால் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. அத்துடன், தமிழ் மக்கள் பேரவை தமிழர்களின் ஒற்றுமையை சிதைத்து விடும். இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்க இருக்கின்ற சந்தர்ப்பத்தில், இவ்வாறு ஒரு அமைப்பு உருவாகுவது தீர்வு திட்டத்தை குழப்பிவிடும் போன்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது.
ஆயினும், தமிழ் மக்கள் பேரவையோ தாம் ஒரு அரசியல் கட்சி அல்ல எனத் தெரிவித்துள்ளார்கள்.
“நுண்ணிய நகர்வுகளுக்கூடக நடைபெறும் அரசியல் காய்நகர்த்தல்கள்,
எமக்கான தீர்வுகள் எமது மக்களின் பிரசன்னம் இல்லாமலே உருவாக்கப்பட்டு,
எமக்கு தரப்பட்டதாக பதியப்படும்.
இதனை மக்கள் ஏற்றார்கள் என்று கூறுவதற்கும்,
தயாரிப்புக்கள் நடைபெறலாம். மிகவேகமாக நடைபெறும் இவ்விதமான நகர்வுகள் எம்மை சூழ்வதை நாம் அறிந்திருக்கவேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் நாம்,
எமது மக்கள் விழிப்பாக இல்லாவிடின் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்திக்கநேரிடும்.
இந்த சவாலை தனி நபர்களாகவோ அல்லது தனித்தனி அமைப்புகளாகவோ எதிர்கொள்ளமுடியும் என நாம் கருதவில்லை.
மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் சக்திகள் அனைத்தும் ஒன்றுபடவேண்டும்.
அனைவரும் ஒன்றுபட்ட அரசியல்மயப்பட்ட ஒரு மக்கள் அமைப்பின் மூலமே இது சாத்தியம் ஆகும். எனவேதான் இங்கு கூடியிருக்கின்ற அனைவரும் எமது மக்களின் நலன்களை மட்டும் முன்னிறுத்தி, எமது மண்ணில் நிகழ்ந்த தியாகங்களின் பெயரால் ஒன்றிணைந்து கொள்கைவழி செயலாற்றவேண்டும் என வேண்டுகின்றோம்” என தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரும் ஏற்பாட்டுக் குழுவை சார்ந்தவருமான மருத்துவ நிபுணர் பூ.லக்ஸ்மன் அவர்கள், தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்ட போது ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவைக்கு வரவேற்பு இருக்கின்ற அதேவேளை, தமிழ் மக்கள் பேரவை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரானது போன்ற விமர்சனங்களும் சந்தேகங்களும் இந்த கட்டுரை எழுதப்படும் வரை திட்டமிட்டு பரப்பப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.
கட்சி சார்ந்த வாக்காளர் மனப்பாங்கோடு சிந்திக்கும் வரை தமிழர் தேசத்தை சூழ்ந்துவரும் பேராபத்தை புரிந்துகொள்வது இலகு அல்ல. தமிழ் இளைய சமுதாயம் சுதந்திர தாகத்தோடு வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக பண்பாட்டு சீரழிவுகளையும் போதைப் பொருள் பாவனையையும் திட்டமிட்டு தமிழர் தாயகத்தில் அரங்கேற்றி வரும் தரப்புகள், தமிழர்களை ஒரு தேசத்தின் நலன் சார்ந்து சித்திப்பவர்கள் என்ற நிலையிலிருந்து வாக்காளர் மனப்பாங்கோடு சிந்திக்கும் நிலைக்கு மாற்றுவதற்கு முற்படுகிறார்கள்.
தேர்தல் என்பது சனநாயகத்தின் ஒரு அங்கமே தவிர அது தான் சனநாயகத்தின் முற்றுமுழுதான அளவீடோ அடையாளமோ அல்ல. அதேபோன்று,
தேர்தல் என்பது தமிழ் மக்களின் நலன்களை பூர்த்தி செய்வதற்கான ஒரு மார்க்கமே தவிர, மாறாக, அதனூடாகத்தான் தமிழ் மக்களுக்கு விடிவு பிறக்கும், தமிழர் தேசம் மலரும் என்று நம்பவும் கூடாது. நம்பிக்கைய உண்டாக்கவும் கூடாது.
இத்தகைய பின்னணியில் தமிழ் மக்கள் பேரவையை பார்ப்போமானால்,
தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்துவதற்கான அமைப்பு என தம்மை அடையாளப்படுத்துகின்ற அதேவேளை,
தாம் சிங்கள தேசத்தின் நலன்களுக்கு எதிரானவர்கள் இல்லையென்பதையும் தெரியப்படுத்தியுள்ளார்கள்.
அத்துடன்,
தாம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான சக்தி அல்ல என்பதை வெளிப்படுத்தியுள்ளதோடு,
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளில் இரண்டு கட்சிகளை உள்வாங்கியுள்ளார்கள். இவ்வாறான சூழலில், தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலவீனங்களை களைந்து அதனை பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்தலாம். அத்துடன், சர்வதேச சமூகத்துடனான மற்றும் சிங்கள தேசத்துடனான சந்திப்புகள், பேச்சுவார்த்தைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பொருத்தமான தந்திரோபாயம் வகுத்து செயற்படுமாயின், தமிழ் மக்கள் பேரவையின் தோற்றத்தை தமிழ் மக்களின் நலனை முதன்மைப்படுத்துவதற்கான ஒரு கருவியாக, அழுத்த சக்தியாக முன்னிறுத்தலாம்.
இதேவேளை,
வெறும் அறிக்கைகளை தாண்டி தாம் ஒரு செயற்திறன் மிக்க அமைப்பு என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்கள் பேரவைக்கு உண்டு.
தமிழ் மக்களுக்கான உரிமைகளை, அரசியல் தீர்வை வழங்குவதற்கு பின்னடிக்கும் சிறீலங்கா அரசு, அதற்கான காரணமாக தனது மறைமுகமான ஆதரவோடு இயங்குகின்ற அல்லது தம்மால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இனவாத சக்திகளை சுட்டிக்காட்டுகின்றது.
அத்துடன்,
சிங்கள தேசத்தின் நலனை பூர்த்தி செய்வதற்காக,
பல்வேறு கட்டமைப்புகளை பலப்படுத்தி வருகிறது. இதில், மதக் குழுக்கள்,
சிவில் சமூகம், வணிக நிறுவகங்கள்,
அரச சார்பற்ற அமைப்புகளும் உள்ளடக்கம்.
அதேபோன்று தமிழ் மக்களின் நலன்களை பூர்த்தி செய்வதற்கான சீரான நிர்வாகமும் முகாமைத்துவத்துவமும் உடைய செயற்திறன் மிக்க அழுத்த சக்திகளும்,
தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி தூரநோக்குடன் செயற்படக்கூடிய நிறுவகங்களின் உருவாக்கமும் காலத்தின் கட்டாயமாகவுள்ளது. இத்தகைய ஒரு சூழலிலேயே, தமிழ் மக்கள் பேரவை உருவாகியுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் எதிர்காலம் என்பது தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்திய செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது.
கற்றலோனியா:
கற்றறிந்த பாடங்கள்
தற்போது
ஸ்பெயினின் ஒரு பகுதியாகவுள்ள கற்றலோனியா “நாம் ஒரு தேசம், நாம் தீர்மானிப்போம்”
என்ற கோசத்தோடு சுதந்திர அரசமைப்பதற்காய் போராடி வருகிறது. பலத்த சவால்கள், அழிவுகள், அவலங்களை கடந்து, முன்னூறு வருடங்களைத் தாண்டி கற்றலோனியாவின் விடுதலைக்கான மூச்சு உயிர்ப்புடன் இருக்கிறது.
கற்றலோனியர்கள் சந்தித்த
இராணுவத் தோல்வியின் விளைவாக, 1714 செப்டெம்பர் 11 கற்றலோனியா ஸ்பெயின் இராச்சியத்தின் ஒரு அங்கமாக இணைக்கப்பட்டது. தாம் தோல்வியை சந்தித்த செப்டெம்பர் 11ஐ தமது தேசிய தினமாகப் பிரகடனப்படுத்தினார்கள் கற்றலோனியர்கள். இது தமது தோல்வியை நினைவுகூருவதற்காக அல்ல. மாறாக, தோல்விக்கும் அவலங்களுக்கும் மத்தியிலும் எமது இருப்பு தொடர்ந்தும் பேணப்படுகிறது என்பதை நிரூபிப்பதற்கான நினைவு தினம் என குறிப்பிடும் கற்றலோனியர்கள், இந்த கூட்டு நினைவு தினம் எங்களை ஒருங்கிணைக்கிறது. எமது அரசியல் வேட்கைக்கும் அதற்காக போராட வேண்டும் என்ற மனோதிடத்துக்கும் பலம் சேர்க்கிறது எனவும் தெரிவிக்கிறார்கள்.
கற்றலோனிய
பிரிந்து செல்வதற்கு எடுக்கும் அனைத்து செயற்பாடுகளையும் முடக்கும் நடவடிக்கைகளில் பலம்மிக்க ஸ்பெயின் ஈடுபட்டுள்ளது. ஆயினும், அரசு அல்லாத, பெரும் சர்வதேச ஆதரவை கொண்டிராத கற்றலோனியர்களும் தமது போராட்டத்தை தொடர்கிறார்கள். ஏழரை மில்லியன் மக்களைக் கொண்ட கற்றலோனியாவில் ஒன்றரை மில்லியன் மக்கள் 2012 செப்டெம்பர் 11 தமது தேசத்துக்கான சுதந்திரத்தை வேண்டி பேரணியாய் திரண்டார்கள்.
இந்த
பெரும் ஒருங்கிணைவுக்குப் பின்னால் கற்றலன் தேசிய அவை (Catalan National Assembly) செயற்பட்டது. பல்வேறு அரசியல் சித்தாந்தங்களையும், வேறுபட்ட சமூக வர்க்கங்களையும் கொண்டவர்கள் கற்றலன் தேசிய அவையில் அங்கம் வகிக்கிறார்கள். ஆயினும், பல்வேறுபட்ட தரப்புகளையும் கற்றலோனியாவின் சுதந்திரம் என்ற ஒற்றை இலக்கு ஒன்றிணைத்திருக்கிறது. எங்களுடைய இலக்கை அடைந்ததும் நாம் இந்த அவையை கலைத்துவிடுவோம் என அவை நிறுவுனர்கள் தெரிவிக்கிறார்கள். இருபது பேரோடு 2012 மார்ச் 10 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கற்றலன் தேசிய அவை, ஆறு மாதங்களில் ஒன்றரை மில்லியன் மக்களை ஒரு பேரணியில் ஒருங்கிணைத்தது. தனிநாட்டுக்கான போராட்டத்தின் ஒரு அங்கமே இந்தப் பேரணி. சுதந்திர தேசமொன்றிற்காய் போராடிக் கொண்டிருக்கும் கற்றலோனியர்கள், ஸ்பெயின் அரசோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால், அவர்கள் சரணகதி அரசியல் நடாத்தவில்லை. ஸ்பெயின் அரசுடனான பேச்சுவார்த்தைகளில் தனிநாட்டுக் கோரிக்கையை பேரம் பேசுவதற்காக பயன்படுத்தி, தமது தேசத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கும் கற்றலோனியர்கள், தமது சுதந்திர தேசம் என்ற இலக்கில் கண்ணும் கருத்துமாய் இருந்து செயற்படுகிறார்கள்.
உலகளாவிய
ரீதியில் கற்றலோனியாவின் சுதந்திரப் போராட்டம் ஒரு சமகால உதாரணமாக திகழ்கின்ற அதேவேளை, இலங்கைத் தீவில் விடுதலைக்காக போராடிய தமிழர் தேசத்தின் தனித்துவ அடையாளமும் எதிர்கால இருப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த தருணத்தில் தமிழர்கள் தமது இனத்தின் நலன்களை முன்னிறுத்தும் ஒரு தேசமாக சிந்திக்கப் போகிறார்களா அல்லது கட்சிசார் வாக்காளர்களாக சிந்திக்கப் போகிறார்களா என்பதை கட்டமைப்பதில் தமிழ் மக்கள் பேரவை முக்கிய பங்கு வகிக்கலாம். ஏனெனில், கட்சியரசியலைத் தாண்டி ஒரு இனக்குழுமமாக, ஒரு தேசக் கட்டமைப்பாக சிந்திக்கின்ற இனத்தினாலேயே தமது நலன்களை பூர்த்திசெய்ய முடியும். வரவேற்புக்கும் விமர்சனங்களுக்கும் மத்தியில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவையால் ஒரு இனத்தின் ஆக்கபூர்வமான கூட்டு சிந்தனைக்கு அடித்தளம் இடமுடியுமா?
- நிர்மானுசன் (Nirmanisan)
Subscribe to:
Posts (Atom)